– ஒன்றிய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தகவல்
தமிழ்நாட்டில் உள்ள மக்கள் நலத்திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக எம்.பிக்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஒன்றிய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் இதுவரை 92.22 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதே போல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 7,79,851 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதில் 7,57,672 வீடுகளுக்கான பயனாளிகள் முடிவு செய்யப்பட்டு, கடந்த டிசம்பர் 6ம் தேதி நிலவரப்படி 5,83,813 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், தீன்தயாள் அந்த்யோதயா திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 39 லட்சத்து 69 ஆயிரம் குடும்பங்கள் மூலம் 3 லட்சத்து 34 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் மூலம் 2,71,775 போ் பயிற்சி பெற்று 2 லட்சத்து 47 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 20 லட்சத்து 5 ஆயிரத்து 691 போ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2022 – 23 நிதியாண்டில் 19 லட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமரின் விவசாய நீா்ப்பாசனத் திட்டத்தின் இரண்டாவது பிரிவின் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 14,0146 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு 8 நலத் திட்டங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.75,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.