பருவமழை காரணமாக தேங்கி நிற்கும் மழைநீரால் வைரஸ் காய்ச்சல், சளி, இருமல், டெங்கு, வயிற்று பிரச்சனைகள், மலேரியா, காலரா உள்ளிட்ட நோய்களும், தோல் மற்றும் சுவாசக் கோளாறுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதேநேரத்தில் வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
இதை எல்லாம் தவிர்க்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது முக்கியம்.
அதேபோல் முடிந்த அளவு வெந்நீர் அருந்துவதோடு கொரோனா காலத்தில் கடைபிடித்ததைப்போல் முகக் கவசம் அணிய வேண்டும்.
மழைக் காலங்களில் நோய்களை வரவழைப்பது அசுத்தமான குடிநீரும், சுற்றுச் சூழலும்தான். தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்க வேண்டும்.
இரும்புச் சத்து, உயிர்ச்சத்து, தாது உப்பு ஆகியவை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும் உதவும். ஆகையால் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதோரும் கீரை வகைகளை உணவில் சேர்ப்பது அவசியம்.
தின்பண்டங்களுக்கு பதில் பாதாம், கேரட், பேரீச்சம் பழம் போன்ற சத்தான கட்டாயம் எடுத்துக்கொள்வது அவசியம். தினசரி உணவுகளில் இஞ்சி, பூண்டு தவறாது எடுத்துக் கொள்வது நல்லது.
மழைக் காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் எளிதில் சளி பிடிப்பது இயல்பு. இது போன்ற சமயத்தில் சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும்.
பாதிப்புகள் இல்லாத நாட்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். சளி மற்றும் இருமலில் சிக்கித் தவிப்பவர்கள வாரம் ஒருமுறையாவது ஆவி பிடித்தல் அவசியம்.
மழைக் காலங்களில் கொசுக்களால் ஏற்படும் நோய்கள் அதிகமாக இருக்கும். மலேரியா, டெங்கு, மூளை அழற்சி, சிக்கன் குனியா போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
கொசுக்களின் மூலம் ஏற்படும் நோய்களில் மலேரியா ஒன்று. இக்காய்ச்சல் மழைக்காலங்களில் அதிகம் பரவும் ஒன்றாக இருக்கிறது.
காய்ச்சல், உடல்நடுக்கம், தசைவலி, சோர்வு ஆகியவை இதன் அறிகுறியாகக் கருதப்படுகிறது. எனவே வீடுகளுக்கு முன்பு திறந்த வெளிகளில் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
மழைக்காலத்தில் வரும் கொடிய நோய்களின் பட்டியலில் முதலிடம் பெறுவது காலரா. அசுத்தமான குடிநீரை அருந்துவதால் காலரா ஏற்படுகிறது.
இந்நோய் தாக்கப்பட்டால் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுவதோடு உடல் சோர்வும் ஏற்படும்.
மிகையான காய்ச்சல், மூட்டு வலி, கடுமையான தலைவலி மற்றும் தூக்கமின்மையும் இதன் அறிகுறிகள். கொசுக்களின் மூலமே இந்நோய் பரவுகிறது.
மழைக்காலத்தில் செரிமானம் சற்று மந்தமாக இருப்பதால் அளவோடு உணவருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கிருமிகள் உடலில் தங்கிவிடாமல் தவிர்க்கத் தினசரி வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
காலை சமைத்ததை இரவு சாப்பிடுவதையும், இரவு சமைத்ததை மறுநாள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, உயிர்ச்சத்துகள், கொழுப்புச் சத்து என அனைத்தும் நிறைந்த சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.
காபி, தேநீரை அதிகம் உட்கொள்வதற்குப் பதில் மூலிகை சூப், ரசம், கிரீன் டீ முதலியவற்றை அருந்தலாம்.
மழை நேரங்களில் கைக் குழந்தைகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
மழை காலங்களில் குளிர்ந்த பானங்களை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்துவிட்டு மிதமான சூட்டில் பானங்களை எடுப்பது அவசியம்.
குளிர்பானங்கள், ஐஸ்கீரிமை தவிர்ப்பது நன்று.
வாகனங்களில் பயணிக்கும்போது மாஸ்க், கையுறைகளை அணிவதால் தொற்றுநோய்களிலிருந்து தப்பிக்கலாம்.
தேங்கிக் கிடங்கும் தண்ணீரில் நடந்துசென்றால் சோப் பயன்படுத்தி கால்களை கழுவிவிட வேண்டும்.
இதேபோல் சமீபமாக மக்களை உலுக்கி வரும் நோயாக டெங்கு காய்ச்சல் உள்ளது. காய்ச்சல், மூட்டு வலி, தடிப்புகள் உடலில் தென்படும். இக்காய்ச்சலும் கொசுக்களால்தான் ஏற்படும்.
டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், உரிய நேரத்தில் கவனிக்காமல் தாமதமாக மருத்துவமனைக்குச் செல்வது போன்ற காரணத்தால் உயிரிழப்புகள் நேரும் அபாயம் ஏற்படுகிறது.
அரசின் தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் பொதுமக்களின் பங்களிப்பும் முக்கியம்.
நாம் வசிக்கும் பகுதி, வீட்டைச் சுற்றியுள்ள இடங்கள், மொட்டை மாடி, பயன்படுத்தப்படாத குடியிருப்பின் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் போட்டு வைத்திருக்கும் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பொருட்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
டெங்கு கொசுக்கள் பகலில்தான் கடிக்கும். பகலில் கடிக்கும் டெங்கு கொசுக்களால் அதிகம் பாதிக்கப்படுவது பள்ளிக் குழந்தைகளும் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்யும் நிலையில் இருப்பவர்களும்தான்.
ஆகவே பள்ளிக் கூடங்கள், அதைச் சுற்றியுள்ள இடங்கள், அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். அவர்களது சுற்றுப்புறம் மட்டுமல்ல, மற்ற பகுதிகளிலும் கொசுக்களை உற்பத்தி செய்யும் காரணிகளைக் கண்டால் தாராளமாக மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கலாம்.
அதேபோன்று பள்ளிகளில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால் பள்ளிகள் தூய்மையாக இருப்பதைப் பெற்றோரும் கண்காணிக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் வருவதைத் தடுக்க தடுப்பு மருந்து இல்லை. ஆனால் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்களை உற்பத்தியாகாமல் தடுக்கலாம். அதுவே டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மைக் காக்கும் முக்கிய நடவடிக்கை ஆகும்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவர் அளிக்கும் சிகிச்சையும் தக்க நேரத்தில் உரிய மருத்துவமனையை அணுகுவதும் அவசியம்.
– திருநாவுக்கரசு