பால்பண்ணைத் தொழிலில் சாதனை படைத்த சென்னை இளைஞர்!

சென்னையில் தாம்பரத்துக்கு அருகிலுள்ள மண்ணிவாக்கம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் ஹர்சாந்த். பள்ளிப் படிப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுவிட்டார்.

தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் கோழி வளர்த்தார். தோல்வியில் முடிந்தது. அடுத்து மாடு வளர்க்க ஆசைப்பட்டார். குடும்பத்தினரின் சம்மதம் கிடைக்கவில்லை. மெல்ல மெல்லக் கனிந்தார்கள்.

2 மாடுகளில் தொடக்கம்:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 2 மாடுகளில் தொடங்கப்பட்ட முயற்சி, இன்று 60 காங்கிரஜ், கிர் மாடுகள் கொண்ட பெரிய பண்ணையாக விரிவடைந்திருக்கிறது.

ஹர்சாந்தின் தொடர்ந்த உழைப்பும் முயற்சியும் நம்பிக்கையும் வீண் போகவில்லை.

நம்மிடம் பேசிய ஹர்சாந்த், “எங்கள் கிராமத்தில் விவசாயம்தான் தொழில். குடும்பத்துக்குச் சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது.

அப்பாவுக்கு உடல்நலமில்லாமல் போன பிறகு விவசாயத்தைத் தொடர முடியவில்லை. எந்த வேலையும் நடக்காமல் நிலம் அப்படியே தரிசாகக் கிடந்தது.

ஏதாவது செய்யவேண்டும் என்று யோசனையில் இருந்தோம். கோழி வளர்க்கலாம் என முயற்சி செய்தேன். ஒன்றரை ஆண்டுகள் வளர்த்தேன்.

ஆனால், அது அவ்வளவாகக் கைகொடுக்கவில்லை. நோய்ப் பிரச்னையால் சமாளிக்கமுடியாமல் கைவிட்டேன்.

இயற்கை எரு:

மாடு வளர்த்து இயற்கை எரு தயாரிக்கலாம் என்ற திட்டத்தில் மாட்டுப் பண்ணைக்கு நகர்ந்தேன்.

நாட்டு மாடு, ஜெர்சி பற்றி யூ டியூப் மூலம் தெரிந்துகொண்டு, வெளியில் விசாரிக்கத் தொடங்கினேன்.

எங்க ஊரைச் சுற்றியே ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் சில பால் பண்ணைகள் இருப்பது தெரியவந்தது.

அங்கே அவர்கள் காங்கிரஜ் இன மாடுகளை வளர்த்தார்கள். ஆனால், வீட்டில் விவசாயம் செய்யலாம், மாடு வேண்டாம் என்று தடுத்தார்கள்.

ஓர் ஆண்டுக்காலமாக அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். உன் ஆசைக்காக முதலில் பண்ணைகளைப் பார்ப்போம் என்றார்கள்.

அம்மா – அப்பாவை அழைத்துப் போய் காட்டினேன். பண்ணையை நடத்திய நண்பர், நம்பிக்கையாகப் பேசினார். அதனால் மாடு வளர்க்கலாம் என்று முடிவுக்குப் பெற்றோர் வந்தனர்” என்றார்.

மதிப்புக்கூட்டல் முறை:

முதலில் இரண்டு காங்கிரஜ் மாடுகளை வாங்கிய ஹர்சாந்த், அடுத்த மூன்று ஆண்டுகளில் 60 மாடுகளும் கன்றுகளுமாக வளர்த்திருந்தார்.

சிறுக சிறுக ஒவ்வொரு மாடாகத்தான் வாங்கிச் சேர்த்தார். வாடிக்கையாளர்கள் அதிகரித்ததும் மாடுகளின் எண்ணிக்கையைப் பெருக்கினார்.

தினமும் 50 லிட்டர் பால் விற்பனை செய்கிறார். ஒரு லிட்டர் விலை 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தாம்பரம் வரை கொண்டுபோய் கொடுத்துவருகிறார். போக்குவரத்துச் செலவு போகக் கையில் காசு நிற்கிறது. மதிப்புக்கூட்டல் மூலம் நெய் தயாரிக்கத் தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஹர்சாந்த், “பண்ணை தொடங்கிய முதல் இரண்டு ஆண்டுகள் நான்தான் எல்லா வேலைகளையும் செய்தேன். பாலை பேக் செய்வது வரையில் குடும்பத்தினர் செய்தார்கள்.

நான் மாடுகளைக் கவனித்துக்கொண்டேன். 15 மாடுகள் இருக்கும் வரையில் பண்ணையில் அனைத்து பணிகளையும் செய்தேன்.

அன்று ஏளனம் இன்று உயர்வு:

பள்ளிப்படிப்பு முடித்தால் டிரைவர் போன்ற வேலைகளுக்குத்தான் ஊரில் செல்வார்கள். யாரும் மாடு வளர்க்க வரமாட்டார்கள். எங்க உறவினர்கள் பலரும் மாடு மேய்க்கிறேன் என்று கிண்டலாகப் பேசினார்கள்.

யூ டியூப்பில் பேட்டி கொடுக்கும் அளவுக்கு இன்று உயர்ந்திருப்பதாகப் பெருமையாகப் பேசுகிறார்கள்.

என்னைப் பார்த்து சிலர் மாட்டுப் பண்ணை வைக்க ஆர்வமாக இருக்கிறார்கள். இப்போது சிலரை வேலைக்கு வைத்திருக்கிறேன்.

இனிவரும் நாட்களில் வருமானத்தை உயர்த்தவேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறேன்” என்று பால்பண்ணைத் தொழிலில் வென்ற மகிழ்வில் பேசுகிறார் ஹர்சாந்த்.

– எஸ். சங்கமி

Comments (0)
Add Comment