ரகுவரன்: தமிழ் சினிமாவின் வரம்!

ஒரு காட்சியில் எத்தனை நடிகர் நடிகைகள் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பார்கள். அப்படி சேர்ந்து நடிக்கும்படியான் சூழலில், கதையில் சில காட்சிகள் இருக்கும்.

அந்தக் காட்சிகளில், எல்லா நடிகர்களையும் கடந்து, அத்தனை பேர் நடிப்பையும் தூக்கிச்சாப்பிடுவது போல், தன் நடிப்பால் மிரட்டியெடுக்கக் கூடிய நடிகர்கள் பலர் உண்டு. எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, பானுமதி என்று பலரையும் சொல்லுவார்கள்.

எண்பதுகளில் அப்படியொரு நடிகர் வந்தார். நடிப்பால் பின்னிப்பெடலெடுத்தார். அவர்… ரகுவரன். ‘ஏழாவது மனிதன்’. இதுதான் ரகுவரனின் முதல் படம். நாயகனாகத்தான் அறிமுகமானார். ஸ்ரீதர் உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களிலும் ஹீரோவாகவே வலம் வந்தார்.

பின்னர், ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்தார்.

அவர் பண்ணிய ‘சிதம்பரம்’ எனும் கதாபாத்திரத்தை எப்போதுமே மறக்க முடியாது.

அப்படியொரு அநாயச நடிப்பைக் கொடுத்திருந்தார்.

மிகச்சிறந்த இயக்குநரான ஆர்.சி.சக்தி, எழுத்தாளர் அனுராதா ரமணனின் கதையை ‘கூட்டுப்புழுக்கள்’ எனும் தலைப்பில் சினிமாவாக்கினார்.

அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி நடமாடவிட்டார் ரகுவரன். அந்தக்கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டது.

பிறகுதான் கெட்டவனானார். ‘மைக்கேல்ராஜ்’ படத்தில் ஹீரோவாக நடித்தவர், ‘மக்கள் என் பக்கம்’ படத்தில் சத்யராஜுக்கு அடுத்தபடியான வில்லத்தனத்தை பண்ணினார்.

ஆனால் என்ன… ஹீரோவாக இருந்து கிடைத்த கைத்தட்டலை விட, வில்லத்தனம் பண்ணும் போதுதான் மொத்த அப்ளாஸையும் அள்ளினார்.

கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் படமான ‘புரியாத புதிர்’ படத்தில் ரகுமான், ஆனந்த்பாபு, சரத்குமார் என பலரும் நடித்திருந்தார்கள்.

ஆனால் அவர்களையெல்லாம் கடந்து, ‘ஐ நோ.. ஐநோ ஐநோ…’ என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டே சிலம்பமாடிக் கவர்ந்தார்.

அதிலும் ஒரே நேரத்தில், ஒவ்வொரு விதமாக ‘ஐநோ ‘ சொல்லி மிரட்டியெடுப்பார் ரேகாவையும் நம்மையும்!

ஷங்கரின் ‘காதலன்’ படத்தின் ஆரம்பக் காட்சியே மல்லிகார்ஜூனா எனும் கேரக்டரில் வந்து அதகளம் பண்ணுவார் ரகுவரன்.

அதேசமயம் பாசிலின் ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்திலும் மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ படத்திலும் வேறொரு முகம் காட்டி வியப்பும் கவலையும் ஒருசேரக் கடத்தினார்.

அதே பாசிலின் ‘பூவிழி வாசலிலே’ படத்தில் இவர் காட்டிய வில்ல முகம்தான், இவரின் வில்லத்தன நடிப்புக்கெல்லாம் அறிமுகம்.

க்ளீன் ஷேவ் செய்து, கையில் ஸ்டிக் வைத்து, காலுக்கு வலு கொடுத்து, கோட்டும் சூட்டுமாக போட்டுக்கொண்டு, அழகான தலைமுடியுடன் அசத்தியிருக்கிற ரகுவரன்… தமிழ் சினிமாவின் வரம்!

‘உல்லாசம்’ படத்தில் ஜேகேவாக கலக்கியிருப்பார். ‘லவ்டுடே’யிலும் ‘துள்ளித்திரிந்த காலம்’ படத்திலும் அப்படியொரு அசத்தலான அப்பாவாக அசத்தியிருப்பார். ’ஆஹா’வில் ஆஹா போடச் செய்தார்.

‘பாட்ஷா’வில் பாட்ஷாவையே மிரட்டும் ஆன்டனியாக ஸ்டைல் காட்டினார். ‘முகவரி’யில் அன்புக்கணவன், அண்ணன், மகன் என பந்தத்தை பாந்தமாகக் காட்டினார். குரல் வழியே பலப்பல அவதாரம் எடுப்பது இவர் தனி ஸ்டைல்.

இப்படி சொல்லிக்கொண்டே போக படங்கள் பல உள்ளன. சொன்ன படங்களில் இவரின் கேரக்டரையும் மேனரிஸத்தையும் சொல்லி முடிக்கவே முடியாது.

முக்கியமாக, ஷங்கரின் ‘முதல்வன்’ முதல்வரை மறந்துவிடமுடியுமா. பதவி மோகத்தையும் பதவி வெறியையும் எவ்வளவு நாசூக்காக வெளிப்படுத்தி ஆக்ரோஷப்பட முடியுமோ அதை அப்படியே நமக்குக் காட்டியிருப்பார் ரகுவரன்.

ரகுவரன் தமிழ்த் திரையுலகின் வரம். ரகுவரன். இன்னும் எத்தனை காலங்களானாலும் பேசி சிலாகித்துக் கொண்டிருப்பதுதான் ரகுவரன் வாங்கி வந்த வரம்!

  • வி.ராம்ஜி

– நன்றி : இந்து தமிழ் திசை

Comments (0)
Add Comment