மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம்!

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வெள்ள சேதம் குறித்தும் வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி புயல் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5 ஆயிரத்தை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும் மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும் வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000/- என்றிருந்ததை, ரூ.4,000/- உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும் முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்பட உள்ளது.

அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு இலட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது குடிசைகளை இழந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.450 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment