நண்பர் ஒருவர் சில மாதங்களுக்குமுன் ‘இந்தப் பாடலை இரவு நேரத்தில் கேளுங்களேன்’ என்று அனுப்பிவைத்தார், நீண்ட காலத்துக்குமுன் கேட்டிருந்த அருமையான பாடல் அது. ஆஹா.. நிசப்தமான அந்த நேரத்தில் கேட்கத் தொடங்கியவுடன் உள்ளம் ஒரு விவரிக்க இயலாத அனுபவத்தில் ஆழ்ந்து கிறங்கத் தொடங்கிவிட்டது: ‘அம்மம்மா… கேளடி தோழி’ (படம்: கறுப்புப்பணம்). ஒரு சூழலின் இதத்தைத் தமது குரலால் ஒருவர், பாடலைக் கேட்பவருக்கும் கடத்திவிட முடியுமா என்ன!
அதுதான் லூர்து மேரி ராஜேஸ்வரி! அப்படிச் சொன்னால் சட்டென்று தெரியாது, ஆனால் எல்.ஆர்.ஈஸ்வரி என்றால் அடுத்த கணம், தனித்துவமான ஓர் இசைக்குரல் ரசிக உள்ளங்களில் ஒலிக்கத் தொடங்கிவிடும். மேடையில் அவ்வளவு எளிதில் ‘போலப் பாடுதல்’ செய்ய முடியாத வித்தியாசமான வளமும் வசீகரமும் நிறைந்த குரல் அவருடையது.
தனியாகவும், இணை குரலாக ஆண் பாடகரோடும், பெண் பாடகரோடும் எல்.ஆர்.ஈஸ்வரி இசைத்த திரைப்பாடல்கள் இரவுக்கானவை, பகலுக்கானவை, காலை புலர்தலுக்கானவை, மாலை கவிதலுக்கானவை, எந்தப் பொழுதுக்குமானவை என்று வேதியியல் வினைகளை நிகழ்த்திக்கொண்டே இருந்த காலம், அறுபதுகளும் எழுபதுகளும்!
தோழிபோல் வந்தார்
குழுப் பாடல்களை இசைத்துக்கொண்டிருந்த தமது அன்னையோடு பாடல்பதிவுகளுக்குச் சென்று கொண்டிருந்தவர், திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனால் அடையாளம் காணப்பட்டு, பாடல்கள் வளர்த்த பயணத்தில், விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் ‘பாசமல’ரின் ‘வாராய் என் தோழி வாராயோ’ எனும் அசத்தலான பாடலுக்குப் பின் அதிகம் பேசப்பட்டார்.
‘கறுப்புப் பணம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடவரெல்லாம் ஆட வரலாம்’ பாடல் அவரது குரலின் வேறொரு வலுவைக் காட்டியது. பின்னாளில் கேபரே வகை நடனத்துக்கான பாடல்கள் என்றாலே ஈஸ்வரிதான் என்றாயிற்று. ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ (வல்லவன் ஒருவன்), ‘அதிசய உலகம்’ (கௌரவம்) என்று போகும் வரிசையில் அவருடைய குரல்களில் இழையும் பரவசமும், கொண்டாட்டமும் புதிதான இழைகளில் நெய்யப்பட்டிருக்கும்.
‘குடி மகனே’ (வசந்த மாளிகை) பாடலில் ‘கடலென்ன ஆழமோ..கருவிழி ஆழமோ..’ என்ற ஏற்ற இறக்கங்களும் சேர, கொஞ்சுதலும் கெஞ்சுதலும் சொற்களில் போதையூட்டும் வண்ணம் குழைத்தலுமாக உயிர்த்தெழும் குரல் அது.
வேறோர் உலகில்
தொடக்கத்திலோ, இடையிலோ, நிறைவிலோ ஹம்மிங் கலந்த அவரது பாடல்கள் வேறு உலகத்தில் கொண்டு சேர்க்கவல்லவை. பற்றைத் துறக்கத் துடிக்கும் ஆடவனை இவ்வுலக வாழ்க்கைக்கு ஈர்க்கும் ‘இது மாலை நேரத்து மயக்கம்’ (தரிசனம்) பாடலில் மோக மயக்கத்தின் பாவங்களைக் கொட்டி நிரப்பி இருப்பார் ஈஸ்வரி. பணம் படைத்தவன் படத்தில் ‘மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க’ பாடலில் ஒரு விதம் என்றால், ‘பவளக்கொடியிலே முத்துக்கள்’ பாடலில் வேறொரு விதமாக உருக்கி வார்த்திருப்பார் ஹம்மிங்கை.
‘என் உள்ளம் உந்தன் ஆராதனை’ (ராமன் தேடிய சீதை), ‘நாம் ஒருவரை ஒருவர்’ (குமரிக்கோட்டம்) பாடல்களை எல்லாம் எழுத்தில் வடித்துவிட முடியுமா என்ன?
யேசுதாஸ் குரலின் பதத்திற்கேற்பவும் பாட முடியும் அவருக்கு! ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’ (மன்மத லீலை), ‘பட்டத்து ராணி பார்க்கும்’ (சிவந்த மண்) என்று அதிரடி பாடலைக் கொடுக்கவும் முடிந்தது. ‘காதோடு தான் நான் பாடுவேன்’ (வெள்ளி விழா) என்ற அற்புதமான மென்குரலை வழங்கிய அவரால், ‘அடி என்னடி உலகம்’ (அவள் ஒரு தொடர்கதை) என்று உரத்துக் கேட்கவும் சாத்தியமாயிற்று.
இணையற்ற இணை
பி. பி. ஸ்ரீனிவாஸ் குரலுக்கேற்ப எத்தனை எத்தனை பாடல்கள் (‘ராஜ ராஜ ஸ்ரீ’, ‘கண்ணிரண்டும் மின்ன மின்ன’, ‘சந்திப்போமா இனி சந்திப்போமா..’). சந்திரபாபுவோடு இணைந்து ‘பொறந்தாலும் ஆம்பளையா’ (போலீஸ்காரன் மகள்) பாடலின் சேட்டைகள், எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மயக்கக் குரலோடு சேர்ந்த பாடல்கள்தான் (‘மறந்தே போச்சு’, ‘அநங்கன் அங்கஜன்’, ‘ஆரம்பம் இன்றே ஆகட்டும்’, ‘கல்யாணம் கச்சேரி’ ) எத்தனை! பி. சுசீலாவோடு இணைந்து இசைத்த அக்காலப் பாடல்கள் (‘கட்டோடு குழலாட’ – பெரிய இடத்துப் பெண், ‘அடி போடி’ – தாமரை நெஞ்சம், ‘தூது செல்ல’ – பச்சை விளக்கு, ‘உனது மலர்க்கொடியிலே’ – பாத காணிக்கை, ‘மலருக்குத் தென்றல்’ – எங்க வீட்டுப் பிள்ளை, ‘கடவுள் தந்த’ – இருமலர்கள்). இவை தோழியரது வெவ்வேறு மனநிலையின் பிரதிபலிப்புகளைக் கச்சிதமாக வார்த்த பாடல்களில் சில. டி. எம். சவுந்திரராஜன் – எல். ஆர். ஈஸ்வரி இணை குரல்கள், பல்வேறு ரசங்களைப் பருகத் தந்தவை.
‘கேட்டுக்கோடி உறுமி மேளம்’ (பட்டிக்காடா பட்டணமா), ‘சிலர் குடிப்பது போலே’ (சங்கே முழங்கு), ‘மின்மினியைக் கண்மணியாய்’ (கண்ணன் என் காதலன்), ‘உன் விழியும் என் வாளும்; (குடியிருந்த கோயில்), ‘அவளுக்கென்ன’ (சர்வர் சுந்தரம்) என்ற பாடல் வரிசைக்கும் முடிவில்லை. ஆண், பெண் என இணைக் குரல்களின் தனித்தன்மை எப்படியிருப்பினும், அவற்றுக்கு ஏற்ப இயைந்து பாடுவதில் எல்.ஆர்.ஈஸ்வரி ஓர் இணையற்ற இணை.
கதாபாத்திரங்களின் குரல்
பரிதவிப்பின் வேதனையை, தாபத்தைச் சித்தரிக்கும் பாடல்களுக்கு (‘எல்லோரும் பார்க்க’ – அவளுக்கென்று ஒரு மனம்) உயிரும் உணர்ச்சியும் ஊட்டிய குரல் ஈஸ்வரியுடையது. ஆர்ப்பாட்டமான களியாட்டத்தை (‘இனிமை நிறைந்த’, ‘வாடியம்மா வாடி’, ‘கண்ணில் தெரிகின்ற வானம்’, ‘ர்ர்ர்ர்ர்ருக்கு மணியே..’, ) அவரால் இலகுவாக வெளிப்படுத்த முடிந்தது. மனோரமாவுக்காக அவர் பாடிய ‘பாண்டியன் நானிருக்க…’ (தில்லானா மோகனாம்பாள்) என்ற அற்புதப் பாடல் அந்தக் கதாபாத்திரத்தோடே ஐக்கியமாகிப் போன ஒன்று.
‘குபு குபு குபு குபு நான் எஞ்சின்’ (மோட்டார் சுந்தரம் பிள்ளை) என ஏ.எல்.ராகவனோடு இணைந்து அவர் ஓட்டிய ரயிலின் வேகம் இளமையின் வேகம். ஜெயச்சந்திரனோடு இசைத்த ‘மந்தார மலரே’ (நான் அவனில்லை) காதலின் தாகம். ஒரு சாதாரணப் பூக்காரியின் அசல் குரலாகவே ஒலிக்கும், உருட்டி எடுக்கும் ‘முப்பது பைசா மூணு முழம்’!
பல்வேறு இசையமைப்பாளர்களுடைய இசையின் பொழிவில் எல். ஆர்.ஈஸ்வரியின் குரல் தனித்தும், இணைந்தும் கொடிகட்டிப் பறந்த அந்த ஆண்டுகள், ரசிக உள்ளத்தின் விழாக் காலங்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று வெவ்வேறு மொழியிலும் இன்றும் கொண்டாடப்படுவது அவரின் குரல்.
‘எல்லாருக்குமான’ ஈஸ்வரி
ஒரு கட்டத்தில் இறையுணர்வுத் தனிப்பாடல்களில் வேகமாக ஒலிக்கத் தொடங்கிய அவரது குரலில் பதிவான கற்பூர நாயகியேவும், மாரியம்மாவும், செல்லாத்தாவும் இப்போதும் எண்ணற்ற சாதாரண மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த பாடல்களாகத் திகழ்கின்றன. கடவுள் நம்பிக்கை அற்றோரையும் ஈர்க்கும் இவ்வகைப் பாடல்கள், மத வெறிக்கு அப்பாற்பட்டது இந்த மண், இந்த மக்கள் என்ற இயல்பைத் திரும்பத் திரும்ப நினைவூட்டிக் கொண்டிருப்பவை. அதற்காகத் தான் ‘எல்லார் ஈஸ்வரி’ என்று பொதுவான பெயரிட்டார்கள் என்று ஒருமுறை அவரே சொன்னதாகப் படித்த நினைவு.
முறைப்படியான சங்கீதப் பயிற்சி இல்லாமலே மகத்தான இசையைச் சலிக்காத குரலில் சளைக்காமல் வழங்கி இருக்கும் ஈஸ்வரி எல்லாக் காலங்களுக்குமானவர். இனிய வாழ்த்துக்கள் அவரது எண்பது வயதுக்கு! அடுத்து நூற்றாண்டைக் கொண்டாடுவதற்கு!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு அருகே இளையான்குடியைச் சேர்ந்த அந்தோணி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா தம்பதியின் மூத்த மகளாக சென்னையில் பிறந்தார் ஈஸ்வரி. இவருடைய தாயார் எம்.ஆர்.நிர்மலா ஜெமினி ஸ்டுடியோவில் குழுப்பாடகியாக கலை வாழ்க்கையைத் தொடங்கியவர். எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர் ஈஸ்வரி.
இளம் வயதிலேயே தந்தையை இழந்த எல்.ஆர்.ஈஸ்வரி தனது குரலால் குடும்பத்தைத் தூக்கி நிறுத்தினார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர்.அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு.
– எஸ். வி. வேணுகோபாலன்
நன்றி: இந்து தமிழ் திசை