மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கின.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்தக் கூட்டணியை உருவாக்க முன் முயற்சிகளை மேற்கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை அவரவர் ஊர்களுக்குச் சென்று நேரில் சந்தித்து, புதிய கூட்டணியை உருவாக்குவதன் அவசியம் குறித்து விளக்கினார்.
எதிர்க்கட்சிகள் பங்கேற்ற முதல் கூட்டத்தை நிதிஷ்குமார், தனது மாநிலத் தலைநகர் பாட்னாவில் ஜுன் மாதம் நடத்தினார். இதில் 16 கட்சிகள் கலந்து கொண்டன.
ஜூலை மாதம் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
28 கட்சிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், தங்கள் அணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்ட முடிவானது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 31 மற்றும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் மும்பையில் நடந்தது.
குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவது, தொகுதிப் பங்கீடு செய்வது போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டன.
எதிர்க்கட்சிகள் மின்னல் வேகத்தில் ஏற்படுத்திய புதிய அணி, பாஜகவுக்கு அச்சத்தை உருவாக்கியது. கூட்டணியில் காங்கிரஸ் பிரதான அங்கம் வகித்தது.
தமிழக அரசியல் கட்சிகளான திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றன.
இடதுசாரிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ஆர்.ஜே.டி. ஆம் ஆத்மி, மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் புதிய அணியில் உள்ளன.
இந்த நிலையில்தான் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்பட்ட இந்தத் தேர்தல், ‘இந்தியா’ கூட்டணியை வலுப்படுத்தி இருக்க வேண்டும்.
ஆனால், காங்கிரசின் பிடிவாதத்தால், இந்தியா கூட்டணியில் முதன் முறையாக பிளவு ஏற்பட்டது.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டுகள், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு காங்கிரஸ் இடம் ஒதுக்க மறுத்துவிட்டது.
இதனால் அந்தக் கட்சிகள் தனித்தனியாக களம் இறங்கின.
ஓட்டுகள் பிரிந்ததால், மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தோற்றது. பாஜக அமோக வெற்றி பெற்றது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு ஞானோதயம் பெற்ற காங்கிரஸ் கட்சி, ’இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் 6-ம் தேதி (புதன்கிழமை) டெல்லியில் நடைபெறும் என அறிவித்தது.
ஆனால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பெரிய கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.
“டெல்லி ஆலோசனைக் கூட்டம் குறித்து எனக்கு தகவலே தெரியாது” என உதட்டைப் பிதுக்கி விட்டார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
’’எனக்கு உடம்பு சரி இல்லை. எனவே நான் கூட்டத்துக்கு போகவில்லை” என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சொல்லி விட்டார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் “எனக்கு உ.பி.யில் சில வேலைகள் உள்ளன. எனவே டெல்லி கூட்டத்தில் பங்கேற்கவில்லை” எனக் கூறிவிட்டார்.
காங்கிரசுடன் நெருக்கமாக இருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை மழை, வெள்ளம் காரணமாக டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
முக்கிய தலைவர்கள் டெல்லிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், ’இந்தியா ’கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை காங்கிரஸ் ஒத்தி வைத்துவிட்டது.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதமே, பல கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்ததற்கான காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
– பாப்பாங்குளம் பாரதி