தூதா – பத்திரிகையுலகின் பாதுகாவலன்!

பத்திரிகை, தினசரி, தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் போன்ற ஊடகம் தொடர்பான படைப்புகள் பெரிதாக வரவேற்பைப் பெறாது என்ற எண்ணம் திரையுலகில் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது.

ஊமை விழிகள் போன்ற படங்களில் ஊடக உலகம் சிறிய அளவில் காட்டப்பட்டதுண்டு.

அதனை மீறி கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கோ’ படமே அந்த சென்டிமெண்டை முதன்முறையாகத் தூள் தூளாகச் சிதறடித்தது.

அந்த வரிசையில் சேரும் உத்தேசத்தோடு தெலுங்கில் வெளியாகியிருக்கிறது ‘தூதா’ வெப்சீரிஸ்.

இதனை விக்ரம் கே.குமார் இயக்கியுள்ளார். நாக சைதன்யா, பிரியா பவானி சங்கர், பார்வதி திருவோத்து, பிராச்சி தேசாய், பசுபதி, ரோகிணி, ஜெயபிரகாஷ், அனிஷ் குருவில்லா, தருண் பாஸ்கர், ஈஸ்வரி ராவ், தணிகல பரணி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இஷான் சாப்ரா இதற்கு இசையமைத்துள்ளார்.

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் இந்த வெப்சீரிஸை தமிழிலும் கண்டு ரசிக்கலாம்.

பத்திரிகை தர்மம்!

பத்திரிகை தர்மம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர் சாகர் வர்மா அவதூரி (நாக சைதன்யா).

அந்த அளவுக்கு ஊழல், முறைகேடுகள் தொடர்பான தகவல்களைத் தனக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்பவர்.

புதிதாகத் தொடங்கப்படும் ‘சமாசார்’ தினசரியின் ஆசிரியராக அவர் பொறுப்பேற்கிறார்.

சாகரின் மனைவி பிரியாவும் (பிரியா பவானி சங்கர்) கூட ஒரு பத்திரிகையாளர் தான். இரண்டாவது முறையாகக் கர்ப்பமுற்ற அவர் சிறிது காலம் ஓய்வில் இருக்கிறார்.

இந்த நிலையில், சமாசார் வெளியாவதையொட்டி நிகழும் விருந்து நிகழ்ச்சியில் சாகர் குடும்பத்துடன் கலந்துகொள்கிறார்.

அப்போது, அவருடன் பணியாற்றும் சந்திரமூர்த்தி (ஜெயபிரகாஷ்) ’பத்திரிகைத் துறைக்கான சித்தாந்தங்களும் கோட்பாடுகளும்’ என்ற நூலைப் பரிசளிக்கிறார்.

அதனை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, தனது உதவியாளர் அம்ருதாவிடம் (பிராச்சி தேசாய்) கொடுக்கிறார் சாகர்.

விருந்து முடிந்து வீடு திரும்ப முனையும்போது மழை பெய்கிறது. முழுக்க பெட்ரோல் நிரப்பியிருந்தும், வழியில் ஓரிடத்தில் டேங்க் காலியாகி கார் நிற்கிறது.

அருகே இருக்கும் உணவகத்தில் குடும்பத்தினருக்கு ‘ஸ்நாக்ஸ்’ வாங்குகிறார் சாகர். அப்போது, அவர் முன்னே ஒரு தினசரி பத்திரிகையின் துண்டு வந்து விழுகிறது.

அதில் இருக்கும் குறுக்கெழுத்துப் போட்டியில், காரில் இருக்கும் சாகரின் நாய் இறந்துபோவதாகவும், அதன் பெயர் என்னவென்றும் ஒரு கேள்வி இடம்பெற்றிருக்கிறது.

ஆனால், அவர் தனது நாய்க்கு எந்தப் பெயரையும் அதுவரை வைக்கவில்லை.

தன்னைச் சூழ்ந்துள்ள அமானுஷ்யத்தை உணர்ந்து சாகர் சுதாரிப்பதற்குள், அந்த காரை இடித்து தள்ளுகிறது ஒரு லாரி. அதிர்ஷ்டவசமாக அவரது மனைவியும் மகளும் உயிர் தப்புகின்றனர்.

ஆனால், அவரது நாய் இறந்து போகிறது. அடுத்த நாள், இறந்துபோன நாய்க்குத் தான் ஒரு பெயரை யோசித்து வைத்திருந்ததாகச் சொல்கிறார் அவரது மகள் அஞ்சலி. அந்த வார்த்தை, அந்த குறுக்கெழுத்து புதிருடன் பொருந்திப் போகிறது.

அதன் தொடர்ச்சியாக, அதே போலவே சில தினசரி துண்டுகள் அவருக்குக் கிடைக்கின்றன.

சாகரின் கண் முன்னே, அவரது நண்பர் சார்லஸ் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். அம்ருதாவின் வயிற்றில் வளரும் சாகரின் கரு கலைகிறது.

அடுத்தடுத்து நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் சாகரின் வாழ்க்கையை வேறு ஏதோ ஒரு சக்தி முடிவு செய்வதை அவருக்கு உணர்த்துகின்றன. அவற்றுள், அவரது மகள் அஞ்சலியின் மரணமும் ஒன்று.

அதனால் சாகரும் பிரியாவும் நொறுங்கிப் போகின்றனர். அப்போது, பிரியாவும் அவரது வயிற்றில் இருக்கும் கருவும் உயிரிழக்கப்போகும் தகவல் சாகரை வந்தடைகிறது.

அதனை சாகரால் தடுக்க முடிந்ததா? தன்னைக் குறிவைத்து நடக்கும் அசம்பாவிதங்களுக்கு என்ன காரணம் என்று அவர் கண்டறிந்தாரா என்று சொல்கிறது ‘தூதா’.

சாகர் தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயற்சிப்பதும், திடீரென்று ஒரு ப்ரீப்கேஸில் இருந்த சில தகவல்களைப் பார்த்துவிட்டு அவர் உயிர் பிழைக்க முயற்சிப்பதும் தொடக்கக் காட்சியாக விரிகிறது.

அதிலிருந்து நிகழ்காலம் மற்றும் கடந்தகாலத்தை மாறி மாறிக் காட்டுகிறது திரைக்கதை.

வித்தியாசமான முயற்சி!

குறுக்குபுத்தியும் மோசடிகளுக்குத் துணை போகும் குணமும் கொண்டவராக, இதில் தோன்றியிருக்கிறார் நாக சைதன்யா. வழக்கமாக அவர் நடிக்கும் ‘ஹீரோயிச’ பாத்திரங்களில் இருந்து இது முற்றிலுமாக வேறுபட்டது.

ஆனாலும், வெப்சீரிஸ் எனும் உலகுக்குள் நுழையும் முயற்சியாக அதனை ஏற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

டப்பிங்கில் கஷ்டப்பட்டு அவர் தமிழை உச்சரித்திருப்பதுதான் நம்மைப் படுத்துகிறது.

பிரியா பவானி சங்கரும் மிக ‘மெச்சூர்டான’ ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு உயர் வர்க்கக் குடும்பப் பின்னணி கொண்டவராக, எளிதில் நம் மனதில் பதிந்து போகிறார்.

பார்வதி திருவோத்து ஏற்றிருக்கும் புலனாய்வு அதிகாரி வேடம் ரசிகர்களுக்குப் புதிதல்ல.

ஆனால், இறுதி அத்தியாயத்தில் அப்பாத்திரத்தின் பெர்சனல் வாழ்க்கைக்கும் மையக்கதைக்குமான முடிச்சு நம்மை நிச்சயம் ஈர்க்கும்.

இத்தொடர் தந்திருக்கும் ஆச்சர்யங்களில் ஒன்று பிராச்சி தேசாயின் இருப்பு. அவரது பாத்திரம் மனதோடு ஒட்டுவதில்லை என்றபோதும், அது சிறந்த முறையில் எழுதப்பட்டிருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஜெயபிரகாஷுக்கு இக்கதையில் உள்ள முக்கியத்துவம் மிகத்தாமதமாகவே உணர்த்தப்படுகிறது. போலவே சப் இன்ஸ்பெக்டராக வரும் ரவீந்திரா விஜய்யும் நம்மை எளிதில் ஈர்க்கிறார்.

இவர்கள் தவிர்த்து பசுபதி, தணிகல பரணி, ரோகிணி, அனிஷ் குருவில்லா, தருண் பாஸ்கர், ராஜ கவுதம் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் முரளி, சைதன்யா காரிகாபதி, காமாட்சி பாஸ்கரலா, ஸ்ருதி ஜெயன் உள்ளிட்டோர் நம் கவனம் ஈர்க்கின்றனர்.

‘தூதா’வின் டைட்டில் காட்சியே இந்த சீரிஸின் அடிப்படைக் கதை என்னவென்பதைச் சொல்லிவிடும்.

அதற்கேற்றாற் போல வெங்கட் பதி, பூர்ணா பிரக்யா, ஸ்ரீபால் ரெட்டி, என்.ஜி.தாமஸ், வெங்கடேஷ் தொண்டபடி ஆகியோர் இயக்குனர் விக்ரம் குமாருடன் இணைந்து எழுத்தாக்கத்தைச் செறிவானதாக்க உழைத்திருக்கின்றனர்.

இறுதி அத்தியாயத்தில் பிரியா பவானிசங்கரைக் கொல்வதற்காக வரும் நபர் யாராக இருக்கும் என்பதை நம் யூகிக்காத வகையில் கொண்டு சென்றிருப்பது அதற்கான பலன்களில் ஒன்று.

பெரும்பாலான பிரேம்களில் இருண்மையை நிறைத்து இக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது மிகோலஜ் சைகுலாவின் ஒளிப்பதிவு.

அக்காட்சிகளை அழகாகக் கோர்த்து அடுத்தடுத்த எபிசோடுகளை பார்க்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் நவீன் நூலி.

ஆனால், இறுதியாக வரும் எட்டாவது எபிசோடில் மட்டும் என்னென்ன நடக்கும் என்று நமக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுகிறது.

ராஜீவனின் தயாரிப்பு வடிவமைப்பு வழக்கமான திரைப்பட உருவாக்கத்தில் இருந்து இது வேறுபட்டது என்பதை நன்றாக உணர்த்துகிறது.

வெப்சீரிஸ்களை பொறுத்தவரை, இது ஒரு வித்தியாசமான முயற்சி என்பதை மறுக்க முடியாது.

வழக்கமாக, இது போன்ற கதைகளை ‘ஹீரோயிசம்’ கொண்டு சொல்லவே பல இயக்குனர்கள் விரும்புவார்கள்.

ஆனால், அதிலிருந்து வித்தியாசப்படுகிறார் விக்ரம் குமார். அவர் தந்த ‘யாவரும் நலம்’ கூட இதே பாணியிலான திரைக்கதையைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறை நிறைகள்!

இந்தக் கதையில் பசுபதி, தணிகல பரணி, அனிஷ் குருவில்லா, பார்வதி, ஈஸ்வரி ராவ் போன்ற ஒரு சிலரையே நேர்மையானவர்களாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் குமார்.

மற்றவர்கள் அனைவரையுமே அதற்கு எதிரானவர்களாக முன்னிறுத்தி, தன் கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்.

அமானுஷ்யமான ஒரு சக்திதான் நாயகனின் வாழ்க்கையை ஆட்டுவிக்கிறது என்று புரியவரும்போது, அதன் பின்னணி என்னவென்று அறியும் ஆர்வம் அதிகமாகிறது.

ஆனால், பிளாஷ்பேக் தொடங்கியவுடனேயே அதன் பிறகு என்னென்ன நடக்கும் என்பது பிடிபட்டுவிடுகிறது.

அதனால், மொத்தமுள்ள 8 அத்தியாயங்களில் முக்கால்வாசி மட்டுமே நம்மைக் கட்டுக்குள் வைக்கிறது.

சாதாரண, நடுத்தர வர்க்க வாழ்க்கை முறை இதில் சொல்லப்படாததால், அப்பின்னணி கொண்டவர்கள் இக்கதையோடு ஒன்றுவது கொஞ்சம் கடினம்.

போலவே பலருக்கு ஊடக உலகத்தைத் தெரிந்துகொள்வதில் பெரிதாக ஆர்வம் இராது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

போலவே, ‘யாவரும் நலம்’ போன்றதொரு கதையை உருவாக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் விக்ரம் குமார் இதனை ஆக்கினாரோ என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை.

அதையெல்லாம் தாண்டி, சுமாரான பட்ஜெட்டில் நல்லதொரு வெப்சீரிஸை தந்துவிட முடியும் என்று உணர்த்திய வகையில் கவனிப்பைப் பெறுகிறது இந்த ‘தூதா’.

கூடவே, நல்லதொரு பத்திரிகையாளன் சமூகத்தின் பாதுகாவலனாகத் திகழ வேண்டுமென்ற எண்ணத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய வகையில் முக்கியத்துவம் பெறுகிறது இப்படைப்பு!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment