– கி.வீரமணி
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் துணைவியார் திருமதி.ஜானகி ராமச்சந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டப் பேரவை கட்சித் தலைவராக ஒருமனதாக 02.01.1988 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து வி.என்.ஜானகி தலைமையிலான புதிய அமைச்சரவை 07.01.1988 அன்று பதவி ஏற்றது.
தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்ற ஜானகி அம்மையாரும், மற்ற அமைச்சர்களும் 07.01.1988 அன்று காலை பதவி ஏற்றுக் கொண்டு பெரியார் திடலிலுள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாகவே 11 மணிக்கு பெரியார் திடலுக்கு வருகை புரிந்த முதல்வர் மாண்புமிகு ஜானகி இராமச்சந்திரன் அவர்களையும் அவர்களுடன் பதவி ஏற்றுக் கொண்ட ஏழு அமைச்சர்களையும் மிக்க அன்புடன் வரவேற்றோம்.
அவர்கள் அனைவரும் அய்யா, அம்மா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், சி.பொன்னையன், ப.உ.சண்முகம், வி.வி.சாமிநாதன், எஸ்.முத்துசாமி, டி.ராமசாமி, எ.அருணாசலம் ஆகிய அமைச்சர்களும்,
தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் சுலோசனா சம்பத் ராமலிங்கம் எம்.எல்.ஏ., பாவலர் முத்துசாமி மற்றும் அ.இ.அ.தி.மு.க. முக்கியப் பொறுப்பாளர்கள், கட்சித் தோழர்கள் வந்திருந்தனர்.
நினைவிடத்திலிருந்து நேராக அய்யா அருங்காட்சியகத்திற்கு முதல் அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் வந்தனர். முதலமைச்சர் அவர்களுக்கு மூதறிஞர் குழுத் தலைவர் ஜஸ்டிஸ் திரு.பி.வேணுகோபால் அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்.
நான் முதலமைச்சர் ஜானகி இராமச்சந்திரன் அவர்களிடம், தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் எல்லாத் துறையிலும் முன்னிலையில் வரவேண்டும் என்று கூறினார்கள்.
அந்த வகையிலே நீங்கள் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக வந்திருக்கிறீர்கள் எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர்களிடம் கூறினேன்.
அமைச்சர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்தேன் என்னுடன் பண்டரிநாதன் அய்.ஏ.எஸ். பேராசிரியர் அய்யாசாமி தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோரும் அருங்காட்சியகத்தில் உடன் இருந்தனர்.
மேலும் ‘விடுதலை’ சி.ஆளவந்தார். பேராசிரியர் ராமநாதன், நாகை என்.பி.காளியப்பன், எமரால்டு கோபாலகிருஷ்ணன், க.பார்வதி, க.பலராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தின் முதலமைச்சராக திருமதி ஜானகி அம்மையார் பதவியேற்ற விழாவில் முதலமைச்சர், அமைச்சர்கள் அனைவரும் கடவுள் பெயரால் உறுதிமொழி எடுக்கவில்லை. ‘உளமார என்று கூறியே பதவி ஏற்றனர். அனைவரும் தமிழிலே பதவி ஏற்றார்கள்!