வாடாத பாசத்துடனும் உருக வைக்கும் குரல் வளத்துடனும் ஒவ்வொரு பாட்டையுமே தனது உயிர் பாட்டாக நினைத்து பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்.
‘கந்தன் கருணை’ படத்தில் வரும், “அறுபடை வீடு கொண்ட திருமுருகா” என்ற பாட்டு மொத்தம் ஏழரை நிமிஷம்.
மிக்சிங், டிராக் இப்படி எதுவுமே இல்லாத அந்த காலத்தில், எல்லா ஆர்க்கெஸ்ட்ராவும் ஒரே நேரத்தில் வாசிக்க, ஒரே டேக்கில் பாடி முடித்தார் என்றால் அதற்கு காரணம் இசை மீதான இவரது நாட்டமும், இறைவன் மீதான ஈர்ப்பும் தான்.
இவர், பக்தி பாடல்களால் லட்சக்கணக்கான மக்கள் முருக பக்தர்களாகவும், அம்பாள் பக்தர்களாகவும் மாறியிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று.
இவர் பாட்டு பாடினாலே, கோயிலுக்குள் இருக்கும் மயில் அகவுமாம். பெண்கள் சாமியாடுவார்களாம். அதனால் தான் இவரால், ஏழரை மணி நேரம் விடாமல் கச்சேரிகளை செய்ய முடிந்துள்ளது.
பேசிய சம்பளத் தொகையை விட கொஞ்சம் அதிகமாக, பணம் தந்தாலும், அதை வாங்காமல், “முருகன் கோயிலுக்கு தந்துடுங்க” என்று சொல்லிடுவாராம்.
தமிழை அளவுக்கு அதிகமாக நேசித்து, தமிழ் பாடல்களையே அதிகம் பாடியதால், சங்கீத சபாக்கள் இவரை நிராகரித்தன. ஆனாலும் திராவிடர் கழக மேடைகள் சீர்காழியை வாரி அணைத்துக் கொண்டன.
அதிலும் எம்ஜிஆர், இவரை ஆஸ்தான பாடகராக்கியதுடன், சபாக்களின் புறக்கணிப்புகளுக்கு நெத்தியடி பதில் தந்தார்.
தமிழில் பாடுகின்றார் என்ற ஒற்றை காரணத்துக்காகவே, சபாக்களில் இசை நிகழ்ச்சி நடத்த தடைவிதித்தது மேல்தட்டுவர்க்கம்.
தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடினால் மட்டுமே சபாக்களில் பாட அனுமதி இருந்தது. இப்படி ஒரு சூழ்ச்சியை முறித்து போட்டதே நம் தந்தை பெரியார் தான்.
சீர்காழியை ஒருநாள் நேரில் வரும்படி சொன்ன பெரியார், “எங்கள் மேடைகளிலும் பாடுங்களேன் என்றார். இதை கேட்டதும் விக்கித்துப் போன சீர்காழி, “நான் திருநீற்று பட்டையுடன் இருப்பவன். பக்தி பாடல்களை மட்டுமே பாடுபவன், என்னை போய் உங்கள் மேடையில் பாட சொல்கிறீர்களே” என்று கேட்டார்.
அதற்கு பெரியார், “அதனாலென்ன, ஒன்றும் குற்றமில்லை. நீங்கள் உங்கள் உடையோடும், நெற்றி குறியோடும் வரலாம். உங்கள் பக்தி பாடல்களையே திராவிட மேடைகளிலும் பாடுங்கள்” என்றார்..
இதையடுத்து, நெற்றியில் சந்தனம், விபூதி பட்டையோடு பக்தி பாடல்களைப் பாடி திராவிட நிகழ்ச்சியைத் துவங்குவார் சீர்காழி. அவர் பாடி முடித்ததுமே, அதே மேடையில், கடவுள் இல்லை என்று பேச்சை தொடங்குவார் பெரியார்.
இதை பார்த்ததும் சபாக்கள் நடுநடுங்கிவிட்டன. பெரியார் செய்யும் இந்த ‘வேலை’ சமூகத்தில் வேறு விதமான சிக்கலை தங்களுக்கு உண்டாக்கும் என பயந்தன. அதற்கு பிறகுதான் சீர்காழியை சபாக்களில் பாடவே அனுமதித்தன.
அந்தவகையில், இசையின் கனத்தை சினிமாவுக்கு அளித்து, அதன் மதிப்பை என்றென்றும் கூட்டிக்கொண்டே இருப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.
அதேபோல், எங்கெல்லாம் வெற்றிடம் இருக்கிறதோ, அங்கெல்லாம் பாய்ந்து செல்லும் காற்றை போல, ‘தீண்டாமை’ இருக்குமிடமெல்லாம் நிறைந்தே இருப்பார் தந்தை பெரியார்.
– நன்றி: முகநூல் பதிவு