முன்னணி நடிகர் நடிகைகள் வெப்சீரிஸ்களில் தலைகாட்டும்போது, அவற்றின் மீதான கவனம் அதிகமாகும். அப்படித்தான், ஆர்யா முதன்முறையாக நடிக்கும் வெப்சீரிஸ் என்ற வகையில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது ‘தி வில்லேஜ்’.
‘அவள்’ எனும் ஹாரர் படத்தையும், ‘நெற்றிக்கண்’ எனும் த்ரில்லர் படத்தையும் தந்த மிலிந்த் ராவ் இதனை இயக்கியுள்ளார். திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், முத்துகுமார், தலைவாசல் விஜய், அர்ஜுன் சிதம்பரம், கலைராணி, ஜான் கொக்கன், பூஜா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
ஆறு எபிசோடுகளைக் கொண்ட ‘தி வில்லெஜ்’, அமேசான் பிரைம் வீடியோவில் காணக் கிடைக்கிறது. சரி, இந்த வெப்சீரிஸ் எப்படிப்பட்ட அனுபவத்தை நமக்கு வழங்குகிறது?
பயங்கரமான ஒரு இடம்!
அங்கு வீடுகள் ஆளரவமற்றுக் கிடக்கின்றன. செயல்படாத நிலையில் ஒரு ஆலை இருக்கிறது. அந்த வட்டாரத்தைத் தாண்டி எவரும் சென்றுவிட முடியாது எனும் நிலையில், அப்பகுதியில் வசிப்பவர்கள் வாழ்கின்றனர்.
இந்தச் சூழலில், கௌதம் (ஆர்யா) எனும் மருத்துவர் ஒருவர் தனது மனைவி நேஹா (திவ்யா), மகள் மாயா (ஆலியா) உடன் அப்பகுதிக்குள் செல்கிறார்.
நெடுஞ்சாலையில் ட்ராபிக் ஜாம் என்ற காரணத்தால், காரைத் திருப்பி அந்தப் பாதையில் அவர்கள் பயணிக்கின்றனர். வழியில் டயர் ‘பஞ்சர்’ ஆக, அதனைச் சரி செய்வதற்கான ஆட்களைத் தேடி கௌதம் செல்கிறார்.
காருக்குள் இருக்கும் அவர்களது நாய் திடீரென்று குரைக்கிறது. அது என்னவென்று பார்ப்பதற்காக நேஹா இறங்குகிறார். அதற்குள் அந்த நாய் ஓட, மாயா அதனைத் துரத்துகிறார். அதற்கடுத்த சில நிமிடங்களில் மாயாவையும் நேஹாவையும் சிலர் தாக்கி இழுத்துச் செல்கின்றனர். மனிதர்கள் போலத் தோற்றமளித்தாலும், அவர்களது உருவம் ரொம்பவே கொடூரமாக இருக்கிறது.
அருகிலுள்ள ஊரில் இருந்து கருநாகம் (முத்துக்குமார்), சக்திவேல் (நரேன்), பீட்டர் (ஜார்ஜ் மரியான்) ஆகிய மூன்று பேரை கௌதம் அழைத்து வருகிறார். வந்து பார்த்தால், அவர் நிறுத்திய இடத்தில் கார் இல்லை. அதையடுத்து, அதிர்ச்சியுடன் அவர்கள் நால்வரும் டயர் தடத்தைப் பின்தொடர்ந்து செல்கின்றனர்.
அப்போது, கோர உருவத்தில் சில நாய்கள் அவர்களைக் கடிக்க வர, உயிர்பயத்தில் ஓடுகின்றனர்; ஒரு பள்ளத்தில் விழுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் கருநாகமும் அவரைச் சார்ந்தவர்களும் பணியாற்றிய சுரங்கத்தின் ஒரு பகுதி அது. அங்கு மாயா அணிந்திருந்த ‘ஹேர்பேண்ட்’ கிடைக்கிறது. அதையடுத்து, மகளைத் தேடி சுரங்கத்தினுள் ஓடுகிறார் கௌதம்.
ஓரிடத்தில் ஒரு கொடிய உருவம் ஒரு பெண்ணைப் பலியிடக் காத்திருப்பதைக் காண்கிறார். அப்போது நடக்கும் களேபரத்தில், நான்கு பேரும் சிறைப்படுத்தப்படுகின்றனர்.
அந்த கொடிய உருவத்தைப் பார்த்து, ‘அப்பா’ என்றழைக்கிறார் சக்திவேல். அவருடன் இருப்பவர்கள் அனைவருமே, சிறுவயதில் சக்திவேல் உடன் வாழ்ந்தவர்கள்.
அவர்கள் யார்? ஏன் அப்படி மாறினார்கள்?
இந்தக் கேள்விக்குப் பதிலாக, சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் விஞ்ஞானி ஜிஎஸ்ஆர் (ஜெயபிரகாஷ்) தனது மகன் பிரகாஷிடம் (அருண் சிதம்பரம்) சில உண்மைகளைச் சொல்கிறார். தூத்துக்குடி அருகேயுள்ள கட்டியல் எனும் கிராமத்தில் அரசு விதிமுறைகளுக்குப் புறம்பாகச் சில உயிரியல் ஆய்வுகள் மேற்கொண்டதாகக் கூறுகிறார்.
2004 சுனாமியின்போது அந்த ஆலையை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் வெளியேறிவிட்டதாகச் சொல்கிறார்.
அவரது ஆய்வுகளால்தான், கட்டியல் கிராமத்தில் வாழ்ந்த சக்திவேலின் உறவினர்கள் கோரமான உருவத்தை அடைந்துள்ளனர். கூடவே, அபாயகரமான சக்தி கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர்.
அவர்களது பிடியில் இருந்து கௌதமும் அவரது குடும்பமும் தப்பியதா இல்லையா என்பதே ‘தி வில்லேஜ்’ வெப்சீரிஸின் மீதிக்கதை.
கட்டியலில் இருந்த ஆலையை ஜிஎஸ்ஆர் வாங்கித் தன் ஆய்வுகளுக்காகப் பயன்படுத்திய பிறகு, அந்தப் பகுதியே பயங்கரமான இடமாக மாறுகிறது. அதனை அவர் ஏன் கவனிக்கத் தவறினார் என்ற கேள்விக்கு இத்தொடரில் பதில் இல்லை.
சாதி வேட்கை மிகுந்த சக்திவேலின் குடும்பத்தினரை விட்டு இதர மக்கள் எப்போது விலகினார்கள் என்பதற்கும் இயக்குனர் பதிலளிக்கவில்லை. இப்படி யோசிக்க யோசிக்கப் பல்வேறு கேள்விகள் நம்முள் பெருகுகின்றன என்பதே இத்தொடரின் மாபெரும் பலவீனம்.
நம்பிக்கையளிக்காத நடிப்பு!
கடந்த ஆண்டுதான் ஆர்யாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான ‘கேப்டன்’ ரொம்பவே நம்மைச் சோதித்தது. அதுவும் கூட, ஒரு அடர்ந்த காட்டுக்குள் வேற்றுக்கிரக உயிரினங்களோடு மனிதர்கள் சிலர் மேற்கொள்ளும் மோதலைச் சொன்னது.
அதன் இன்னொரு வடிவமாக ‘தி வில்லேஜ்’ கதை இருக்கிறது; மிலிந்த் ராவ் சொன்னபோதே, ஆர்யாவின் உள்மனம் ‘வேண்டாம்’ என்று சொல்லியிருக்கும்.
அதையும் மீறி, இதில் நடித்ததன் காரணம் என்னவென்று தெரியவில்லை. அவரது நடிப்பும் நம்பிக்கையளிக்கும் விதமாக இல்லை.
நாயகியாக நடித்த திவ்யா, யூடியூப் நட்சத்திரம் ஆலியா ஆகியோர் வரும் காட்சிகள் ‘ஓகே’ ரகம்.
ஆனால், கொடூரமானவர்கள் சிலரது பிடியில் சிக்கியிருப்பதாகக் காட்டப்படும் காட்சிகளில் அவர்களது நடிப்பு மிகச்சாதாரணமாக இருக்கிறது.
ஆடுகளம் நரேன், முத்துக்குமார், ஜார்ஜ் மரியான் மூவரும் மிக இயல்பாக உரையாடும் காட்சிகள் நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன. ‘அது வேண்டாமே’ என்று ஜார்ஜ் பாத்திரத்தைச் சாகடித்து விடுகிறார் இயக்குனர்.
அதைப் போன்று பல பாத்திரங்கள் இதில் தோன்றிச் சாகின்றன. அதற்காகவே இரண்டு டஜன் பேரை சிங்கப்பூரில் இருந்து அருண் சிதம்பரமும் தலைவாசல் விஜய்யும் கட்டியலுக்கு அனுப்புவதாக, இன்னொரு கிளைக்கதையும் இதில் உண்டு.
’சார்பட்டா பரம்பரை’ வில்லன் ஜான் கொக்கன், பூஜா, ஆனந்த் சாமி என்று சிலர் அந்த வரிசையில் இடம்பெறுகின்றனர்.
மலையாள நடிகர் பி.என்.சன்னி, கலைராணி, ஆத்மா பேட்ரிக் போன்றோர் பிளாஷ்பேக்கில் வருகின்றனர். அவர்கள் தவிர்த்து விஸ்வந்த், ஆதிரா லட்சுமி உள்ளிட்ட சிலரும் இதில் ஒரு காட்சியில் தோன்றியுள்ளனர்.
கோரமான உருவங்களைத் திரையில் காட்ட உதவிய ஒப்பனைக் குழுவினரை நம்மால் பாராட்ட முடியவில்லை. காரணம், அவை உருவாக்கும் அருவெருப்புணர்வு.
அதேநேரத்தில், அதனை வெகுநேரம் காட்ட முனைந்த படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் மற்றும் இயக்குனர் மிலிந்த் ராவ் மட்டுமே அந்தக் கண்டனங்களை ஏற்கத் தகுதியானவர்கள்.
ரெம்போன் பால்ராஜின் தயாரிப்பு வடிவமைப்பில் இடிந்த ஆலை, சுரங்கம், ஆய்வுக்கூடம் போன்றவை நம் கவனம் கவர்கின்றன. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை, வழக்கமான பாணியில் ‘த்ரில்’ ஊட்டப் பயன்பட்டிருக்கிறது.
மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி, தீப்தி கோவிந்தராஜன் ஆகியோரின் எழுத்தாக்கம் ரொம்பவே ‘பழசாக’ உள்ளது. காட்சிகளோ, வசனங்களோ கொஞ்சம் கூட ‘ப்ரெஷ்’ஷாக இல்லை.
இத்தனைக்கும் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி, ஷமிக் தாஸ்குப்தா ஆகியோர் எழுதிய ‘தி வில்லேஜ்’ எனும் கிராஃபிக் நாவலைக் கொண்டு இத்தொடர் உருவாக்கப்பட்டதாக அறிகிறோம். அது எந்த வகையில் இயக்குனர் குழுவைக் கவர்ந்தது என்று தெரியவில்லை.
அருவெருப்பூட்டுவதுதான் நோக்கமா?!
மனிதகுலத்துக்கு எதிரான சில ஆய்வுகளால் மனிதர்கள் சிலர் பாதிக்கப்படுவதாகத் திரையில் காட்டுவது புதிதல்ல. தமிழில் ‘நாளைய மனிதன்’ காலத்திற்கு முன்பாகவே அது வழக்கத்தில் உள்ளது.
ஆனால், அப்படங்களில் நிறைந்திருந்த பயமூட்டல் இதில் சுத்தமாக இல்லை. மாறாக, ஒருவித அருவெருப்புதான் உள்ளுக்குள் பெருகுகிறது.
வெறுமனே ஒப்பனை சார்ந்ததாக மட்டும் அதனைக் கருதிவிட முடியாது. சில கருத்தாக்கங்கள் அதனைவிட மோசமாக இருக்கின்றன. ஐந்தாவது, ஆறாவது எபிசோடு பார்க்கும்போது நம்மால் அதனை உணர முடியும். அதுவே, அருவெருப்பூட்டுவதுதான் இந்த படைப்பின் நோக்கமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
சாதி வேற்றுமையின் காரணமாக, சில மனிதர்கள் தம்மைச் சார்ந்தவர்களை அடிமையாக நடத்துவதாக இதில் காட்டப்பட்டுள்ளது. எண்பதுகளில் அவை நிகழ்வதாகச் சித்தரிக்கிறார் இயக்குனர் மிலிந்த் ராவ்.
சாதி வேறுபாடுகளை மீறிச் சிலர் பேசுவதும், அவர்களை வேறு சிலர் ஒடுக்குவதும் இதுவரை நாம் பார்த்த பல திரைப்படங்களை நினைவூட்டுகின்றன. அவை ரசிக்கும்படியாக இல்லை என்பதுதான் வருத்தப்படும்படியான விஷயம்.
வில்லன் கோஷ்டி மட்டுமல்லாமல் நாயகனின் குடும்பம், அவர்களுக்கு உதவுபவர்கள், இன்னொரு புறத்தில் இருந்து நுழையும் பாதுகாப்புக் குழு என்று பல விஷயங்கள் ரொம்பவே ‘க்ளிஷே’வாக உள்ளன. அவை அயர்ச்சியூட்டுகின்றன. காட்சியாக்கம் செய்த விதமும் புத்துணர்வூட்டாதபோது, அந்த அயர்ச்சி பன்மடங்காகிறது.
கொடூர விலங்குகள், வேற்றுக்கிரகவாசிகள், ஜாம்பிகள், எதிர்பாராத பேரழிவு போன்றவற்றில் தப்பிப்பதாக அமைந்த கதைகள் சிலருக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த எண்ணிக்கை நாளும் அதிகமாகி வருகிறது.
அவற்றில் நிறைந்திருக்கும் பயமுறுத்தல்கள், அவர்களுக்கு ‘கூஸ்பம்ஸ்’ மொமண்ட்களாக இருக்கும். ஆனால், ‘தி வில்லேஜ்’ தருவது பயமல்ல; வெறும் அருவெருப்பு மட்டுமே. இரண்டுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. ‘அப்படியா, எனக்கு தெரியாதே’ என்பவர்கள் இதனைத் தாராளமாகப் பார்க்கலாம். அதற்காக நாலேகால் மணி நேரத்தையும் செலவழிக்கலாம்..!
– உதய் பாடகலிங்கம்