நூல் விமர்சனம்:
பொதுவாகவே உற்சாக பானத்தைப் பற்றி எழுத விழைந்தாலே நமக்குள் பொங்கும் நீரூற்று, ஆடி மழையின் நொய்யலாய் மாறிவிடும். ஆண்களுக்கு சுய அனுபவமும், பெண்களுக்கு சூடு கண்ட அனுபவமும் போட்டி போட்டு முந்தி அடிக்கும்.
இந்த எழுத்தாளரோ, ஏதோ ஆண்டுக்கணக்கில் களப் பணிகளெல்லாம் மேற்கொண்டு இந்த 12 சிறுகதைகள் வடிவமைத்து தந்துள்ளார் எனும்போது அதன் சுவை கால்நூற்றாண்டுகளாகப் பூமிக்குள் ஊறவைத்ததை திராட்சை ரசமாய் சுவைக்கிறது என்பதில் ஐயமில்லை.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம், ஆனால் எல்லாக் கதைகளின் அடிப்படையும் ஆல்கஹால்தான்.
ஆல்கஹாலின் அறிவியல் கோட்பாடென்பது யாதெனில், உறிஞ்சும் திறன் (Absorption) மூலம் உறிஞ்சப்பட்ட ஒரு திரவம், பானமுற்றோரின் உடலுக்குள் ஊடுருவி முடுக்கப்பட்டு (Acceleration) வினைபுரிந்து (Reaction), பல வேதியியல் (போதை ஆகுதல்), இயற்பியல் (நடுநிலையை கண்டறிய முற்படுதல்),
புவியியல் (பின் பூமித்தாயை முத்தமிடுதல்), உயிரியல் (பரலோகதிலிருக்கும் பிதாவை காண வேண்டி புறப்பாடு) போன்ற மாறுபாடுகளுக்கு உட்படுதலே ஆகும் என்பதைத் தெளியத் தெளிய அடித்திருக்கிறார்.
தேவாலயத்தின் கோவில்பிள்ளை தெருவாட்டம் தொட்டு, நமக்கு மோட்சம் அளிக்கும் போதையின் போதகர், காளியம்மன் கோவில் பூசாரியின் பேயாட்டம், முப்புடாதி ஆசானின் குறள் கேடுகள், பர்மா கிறிஸ்டோபர் பரலோகம் சென்ற வரலாறு,
வில்லுப்பாட்டு மாடசாமி கன்னிகழிந்த விந்தை, எண்ணைச்செக்கு பரந்தாமனின் மதநல்லிணக்கத் திருமணம் வரை அரசாங்க மதுபானத்தின் பயன்களை பட்டியலிட்டு கொடுத்துள்ளார்.
அவற்றின் வீரியமும், முன் பின் விளைவுகளும் அனைவரும் விளங்கும் படியாயினும், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கூடுதல் படமாக / பாடமாக விவரித்துள்ளார்.
கதைகளில் வரும் பானமருந்தும் மானுடப்பிறவிகள் அனைவரும் மோட்சம் பெற்று, வைகுண்டமோ, பரலோகமோ அல்லது அல்லாவின் திருப்பாதத்திலோ அடிபணியும் வரை உள்ள வழிகளை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எப்போதும் ஆல்கஹாலுக்கு உண்டு என்பதைத் தன் எழுத்துகளின் மூலம் இங்கு ஆணித்தரமாக நிரூபித்துள்ளார்.
அவரின் நக்கலான எழுத்துநடை நம் அனைவரும் அறிந்ததே, ஆனால் குறிப்பாக இந்தப் புத்தகம் பிரபுவின் The best.
அவரின் உழைப்பு, முயற்சி எல்லாம் ஒவ்வொரு கதையிலும் பிரத்யேகமாக வெளிப்படுகிறது.
ஆல்கஹால் : ஒவ்வொரு இடத்திலும் இதற்கு ஒவ்வொரு முகம் இருக்கும். பணக்காரனின் கண்ணாடிக் கோப்பைக்குள் கௌரவமாகவும், விடலைகளின் கைகளில் கொண்டாட்டமாகவும், உழைப்பாளர்களின் இடுப்பில் வலி நிவாரணியாகவும் தொன்றி பன்முகம் கொண்டு ஜொலிக்கும் ஒரு மோஹினிதான் சரக்கு எனும் அரக்கன். அந்த விஷத்தின் வீரியத்தை குடியால் அழிந்த குடும்பங்கள் சொல்லும்.
ஆல்கஹால் எனும் விஷம் இன்றைய அத்யாவசிய பலசரக்கு பாடுபொருளாகிவிட்ட அவலமும், ஆட்சிக்கு வரும் எந்த கட்சியாக இருந்தாலும் அதற்குத் துணைபோகும் கேவலமும் இந்தக் ‘குடி’மக்களை எவ்வாறு காவு கொள்கிறது என்பதை நகைச்சுவையாக அதே சமயம் சீரியசாகவும் பேசியிருக்கிறது இந்த புத்தகம்.
புத்தகம்: ஆதி’குடி’மக்களும் ஆல்கஹாலும்
எழுத்தாளர்: பிரபு தர்மராஜ்
வெளியீடு: நடுகல் பதிப்பகம்
விலை: 250.00