நகைச்சுவைக்கென தனி இடத்தைப் பெற்றுத் தந்தவா் கலைவாணர்!

– அறிஞா் அண்ணா
*

கலைவாணர் சிலையைத் திறந்து வைத்து, 1969 ஆம் ஆண்டில் முதலமைச்சர் அண்ணா பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது:

“கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு இன்று தி.மு.க. அரசு விழா நடத்துகிறது.

புரட்சி நடிகர் ராமச்சந்திரன் இங்கு சொன்னபடி எல்லா கட்சிகளிலும் உள்ள நல்லவர்களிடத்தில் கலைவாணருக்கு நெருங்கிய நட்பும் தொடர்பும் உண்டு.

முதல்முதல் ஒரு கலைஞன், எல்லா அரசியல் கட்சிகளாலும், மதிக்கத்தக்க நிலையைப் பெற்றது என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காலத்திலேதான் என்பதை நாம் அறிகின்ற நேரத்தில், அவருடைய சிறந்த சிறப்பியல்புகளை எண்ணி எண்ணிப் பெரு மகிழ்ச்சியடைய நியாயமிருக்கிறது.

வெறும் கலைஞரான இருந்து தங்களுடைய கலைத் தொண்டை ஆற்றியவர்கள் கலை உலகத்திற்கு மட்டும் தொண்டாற்றுகின்றார்கள்.

வெறும் கலைஞராக இருந்து தங்களுடைய சொந்த வருவாயைப் பெருக்கிக் கொள்பவர்கள், தங்களுடைய குடும்பத்தையும், நண்பர்களையும், நல்ல நிலையிலே வைக்கின்றார்கள்.

ஆனால் கலைவாணர் அவர்கள் கலையுலகத்திற்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு தம்முடைய தொண்டுகளைச் செய்ய வேண்டும்.

அதற்கு இந்தக் கலை, ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்ற முறையில் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

கலைவாணர் அவர்களின் வெற்றி உழைப்பினுடைய அடிப்படையிலே ஏற்பட்ட வெற்றியாகும்.

அவரைப்பற்றி அவருடைய நண்பா்கள் பலமுறை எடுத்துச் சொல்லி இருக்கின்றார்கள்.

அவருடைய சிறந்த உழைப்பு அவருக்கு மட்டுமல்லாமல் நகைச்சுவைப் பாத்திரத்திற்கே ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.

நகைச்சுவைப் பாத்திரமென்றால் ஒட்டப்பட்ட மீசை திடீரென்று கீழே விழும். அது நகைச்சுவைப் பாத்திரம்.

இப்படி இருந்ததை மாற்றி நகைச்சுவை பாத்திரமென்பது, சிந்தித்துப் பார்த்து சிரித்து நற்பயனைப் பெறத்தக்க ஒரு பாத்திரம் என்று மாற்றி அமைத்துக் காட்டியவர் ‘நகைச்சுவை மன்னர்’ என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்.

அவருடைய சிலைத் திறப்பு விழா நடக்கின்ற இந்த நேரத்தில், அவரோடு நெருங்கிப் பழகிய என் போன்றோருக்கு ஆயிரத்தெட்டு எண்ணங்கள், நெஞ்சத்திலே அலைமோதத்தான் செய்யும்.

அவைகளை எல்லாம் எடுத்து விளக்கிக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை என்னுடைய உடல்நிலை அதற்கு தகுந்ததாகவும் இல்லை.

இன்றல்ல என்றென்றும், நாம் மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரும் போற்றிப் பாராட்டத்தக்க தலைசிறந்த தமிழ் மகனாக வாழ்ந்தவர் நம்முடைய கலைவாணர் அவர்கள்.

அவருடைய சிலையை உலகத்தமிழ் மாநாட்டு ஊர்வலக் குழுவினா் அமைத்துக் கொடுத்திருப்பது மற்றொரு பொருத்தமானதாகும்.

அவர்கள் உலகத்தமிழ் மாநாட்டிற்குச் ஒரு ஊர்வலத்தின் மூலம் சிறந்த மதிப்பினைத் தேடி கொடுத்தார்கள்.

அதைப் போலவே அவர்கள் ஏற்றுக்கொண்ட இந்தச் சிலையமைப்பின் காாியத்தின் மூலமும் அவர்கள் கலைத்துறைக்கு நிரந்தரமான ஒரு தொண்டினை நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றார்கள்.

அந்தக் குழுவினருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றுபோல் என்றென்றும் கலை உலகத்திலே உள்ளவர்கள், கலையுலகத்தாலே பயன்பெற்றவர்கள், சீர்திருத்த உலகத்திலுள்ளவா்கள்,

சமூகத்தின் தொண்டர்கள் அனைவரும் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களைப் போற்றுவார்கள் என்பதில் எனக்கு ஒரு துளி ஐயப்பாடும் இல்லை என்பதை தெரிவித்துக் கொண்டு, அவருடைய சிலையினை மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் திறந்து வைக்கிறேன்.

கலைவாணரின் சிலை திறப்பு விழாதான், அண்ணா கலந்து கொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சியாகும்.

இது ஒரு அரிய நிகழ்வுப் பொருத்தமாகும்.”
*
– பேராசிாியை அன்புக்கொடி நல்லதம்பி எழுதிய ‘சமூக விஞ்ஞானி கலைவாணா்’ என்ற நூலிலிருந்து.

Comments (0)
Add Comment