பழைய திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது.
வீட்டுக்குள் நூழையும்போது நாய் விழிப்புடன் படுத்தபடியே குலைக்கும்..
உள்ளே நுழையப் பயப்படுவார் நகைச்சுவை நடிகரான டி.எஸ்.துரைராஜ்.
“நீங்க பயப்படாம உள்ளே போங்க, குரைக்கிற நாய் கடிக்காது.. தெரியாதா” – என்று கேட்பார் வீட்டுக்காரர்.
அதற்கு முகத்தை பவ்யமாக வைத்துக் கொண்டு நல்ல ‘முழி’ முழித்தபடி பதில் சொல்வார் துரைராஜ்.
“குரைக்கிற நாய் கடிக்காதுன்னு நமக்குத் தெரியும்.. சரி.. இந்த நாய்க்குத் தெரியாதே. என்ன செய்ய?’’
இதே கதை தான் இப்போது தமிழ்நாட்டில் பல இடங்களில் நடக்கிறது.
தொடர்ந்து பெய்கிற மழைக்கிடையில் தெருவில் திரிகின்ற நாய்கள் படாதபாடுபடுகின்றன. மற்றவர்களையும் படுத்துகின்றன. சில இடங்களில் விரட்டி விரட்டிச் சுறுசுறுப்பாகக் கடிக்கின்றன.
கடிபடுகிறவர்கள் பயத்துடன் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். தடுப்பூசி விலையைக் கேட்கும்போதே இன்னொரு ஊசி போட்ட விளைவு!
அதுவும் நாய்க்கடி பட்டவர்களுக்கு ஐந்து டோஸ் தடுப்பூசி போட வேண்டியிருக்கிறது.
சென்னையில் வீட்டில் வளர்க்கப்படுகிற நாய்களைத் தவிர, தெருக்களில் திரியும் நாய்களின் எண்ணிக்கையே ஒரு லட்சத்திற்கும் அதிகம் என்று மாநகராட்சி தரப்பில் தோராயமாக ஒரு கணக்கைச் சொல்கிறார்கள்.
சென்ற ஆண்டில் சுமார் 16 ஆயிரம் தெரு நாய்களுக்கும், நடப்பாண்டில் இதுவரை 17 ஆயிரம் தெரு நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அதோடு 13,486 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போதும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
எங்காவது தெருவில் திரியும் நாய்கள் யாரையாவது விரட்டினால் அல்லது விரட்ட முயற்சித்தால் 1913 என்கிற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும் மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
ஏற்கனவே தெருவில் திரியும் மாடுகளால் மனிதர்கள் பாதிக்கப்படும் செய்திகள் வெளிவந்தன. மாட்டினால் தாக்கப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்த செய்தி கூட வெளிவந்தது.
மாடு வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கைகள் கூட விடப்பட்டாலும், தெருக்களில் திரிகின்ற மாடுகள் பழைய மாதிரியே சாவுகாசமாகத் திரிந்து கொண்டு தானிருக்கின்றன.
இப்போது ‘நாய்களுக்கான’ சீஸனைப் போல, நாய்களால் பாதிக்கப்படுகிற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சென்னை போன்ற பெரு நகரங்களில் வீதிக்கு வீதி நாய்கள் கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. நள்ளிரவில் கூட்டம் போட்டு அந்த நேரத்தில் வாகனங்களில் கடந்து செல்கிறவர்களைப் பீதியடைய வைக்கின்றன.
இரவு நேரங்களிலும் சென்னைத் தெருக்களில் நாய்கள் குரைக்கும் சத்தங்கள் கேட்டுக் கொண்டு தானிருக்கின்றன. இந்தக் குரைப்பொலிகளைத் தாண்டித் தான் தூக்கத்திற்குள் நுழைய வேண்டியிருக்கிறது.
இது தவிர, அதிகாலை நேரத்தில் நாய்களோடு ‘வாக்கிங்’ போகிறவர்கள் காட்டும் தோரணை தனி ரகம்.
வீட்டு நாயோ, தெரு நாயோ, எந்த மட்டங்களில் இருக்கிற நாய்கள் செல்லமாகவோ அல்லது எரிச்சலுடனோ கடித்தாலும், விளைவு ஒன்று தான்.
ரேபிஸ் தடுப்பூசி போட்டுத் தான் ஆக வேண்டும். இல்லை என்றால் அந்தக் கடியின் பின்விளைவுகளைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும்.
மழைக் காலம் துவங்கிக் குளிர் அதிகப்பட்ட பொழுதுகளில் ஏன் நாய்கள் இப்படி விரட்டிக் கடிக்கின்றன என்பதை எல்லாம் ‘காருண்ய’ சிந்தனையுடன் யாராவது ஆராய்ச்சி பண்ணி ‘பைரவர்’ அருளுடன் நிதியுதவியும் பெறலாம்.
அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
இப்போதைக்கு தெருக்களில் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த, விரட்டிக் கடிபடுவதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் பெரு நகரத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்கள் நலனுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற பிரதிநிதிகளும், எதையும் லாவகமாகக் கடந்து செல்லும் அதிகாரிகளும் சற்றே யோசிக்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் கூடிப் பேசியபோது எவ்வளவு கெடுபிடிகள்? எவ்வளவு கண்காணிப்புகள்? அத்தனையையும் மீறிக் குறுக்கே ஒரு நாய் ஒன்று வந்துவிட்டதெல்லாம் அப்போது ஊடகங்களில் செய்தி ஆனதையும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
– யூகி