80ஸ் பில்டப் – செல்லரித்த புகைப்படம்!

சந்தானம் படம் என்றதுமே, என்னென்ன நினைவுக்கு வரும். அவரைப் போலவே, பல்வேறு பாத்திரங்கள் ‘கலாய்த்தல்’ பாணியில் வசனம் பேசும் குறிப்பிட்ட இடைவெளியில் சிரிக்கும் அளவுக்கு ‘காமெடியாக’ காட்சிகள் இருக்கும்.

வித்தியாசமான நடிப்பைக் கொண்ட சில கலைஞர்கள் அதில் நிச்சயம் இடம்பெறுவார்கள். அனைத்துக்கும் மேலே, இரண்டரை மணி நேரம் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மனம் இலகுவாக இருக்கும்.

இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்த ‘தில்லுக்கு துட்டு’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’, ‘ஏ1’ வகையறா படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அந்த வரிசையில், எண்பதுகளில் வெளியான ரஜினி, கமல் திரைப்படங்களை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது ‘80ஸ் பில்டப்’ ட்ரெய்லர்.

அது மட்டுமல்லாமல், இது அக்காலகட்டத்தில் வெளியான தமிழ் படங்களுக்கு மரியாதை செய்யும் படைப்பா அல்லது அவற்றைக் கிண்டலடிக்கும் ‘ஸ்பூஃப்’ வகை திரைப்படமா என்ற கேள்வியும் எழுந்தது.

அதற்கு, இப்படம் என்ன பதிலைச் சொல்லியிருக்கிறது?

ஒரு காதல், ஒரு மோதல்!

ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் சந்தானம். சகோதரி சங்கீதாவுக்கு அவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.

சிறு வயது முதலே இருவரும் ஒருவரையொருவர் காலை வாருவதையே வேலையாகக் கொண்டவர்கள். வளர்ந்தபிறகும் அது தொடர்கிறது.

சந்தானம் ஒரு தீவிர கமல் ரசிகர்; அவரது தாத்தா சுந்தர்ராஜன் ஒரு ரஜினி ரசிகர். இருவரும் அடிக்கடி தத்தமது தலைவர்களுக்காக மோதிக் கொள்வார்கள்.

‘சகலகலா வல்லவன்’ படம் ரிலீஸ் ஆகும் நிலையில், முதல் நாள் முதல் காட்சி பார்க்கக் கிளம்புகிறார் சந்தானம். சங்கீதாவோ, ‘இவன் படம் பார்க்க மாட்டான்’ என்கிறார்.

அன்றைய தினம், சுந்தர்ராஜனிடம் இருந்துவரும் பரம்பரைக் கத்தி ஒன்றைத் திருட முற்படுகிறது ஒரு கும்பல். அவர்களிடம் இருந்து வைரங்களைப் பெறும் சுந்தர்ராஜன், அவற்றை விளையாட்டாக விழுங்கி விடுகிறார். அது, அவரது உயிரைப் பறிக்கிறது.

அப்போது எமதர்மன், விசித்திரகுப்தன் (கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த்) அங்கு வருகின்றனர். அவர்கள், ‘உனக்கு ஆசைகள் ஏதாவது இருக்கிறதா’ என்கின்றனர்.

அப்போது, ‘தனது பால்ய பருவத்து காதலி மஞ்சக்கிளி வந்த பிறகே சடலத்தை எரியூட்ட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் சுந்தர்ராஜன். அவர்களும் அப்படியே ஆகட்டும் என்கின்றனர்.

அதேநேரத்தில், துக்க வீட்டிற்கு வந்த ராதிகா ப்ரீத்தி மீது பார்த்தவுடன் காதல் கொள்கிறார் சந்தானம். அதனை வெளிப்படுத்தவும் முயற்சிக்கிறார்.

வழக்கம்போல, அவரது சகோதரி சங்கீதா அதற்கு இடையூறு செய்கிறார். உடனே, ‘நாளைக்குள் அவளாக வந்து ஐ லவ் யூ எனச் சொல்ல வைக்கிறேன்’ என்று சவால் விடுகிறார் சந்தானம். அதனைச் செயல்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்.

ஒருபக்கம் வைரத்தைப் பறி கொடுத்த கும்பல், சடலத்தில் இருந்து அவற்றை எடுக்கப் பிரயத்தனப்படுகிறது. இன்னொரு பக்கம், சுந்தர்ராஜனின் மூத்த மகன் சேச்சு தனது மனைவியோடு பெங்களூருவில் இருந்து வீட்டுக்கு வருகிறார்.

இடையே, சகோதரி சங்கீதாவும் அவரது தோழிகளும் சந்தானத்தின் காதல் முயற்சிகளைக் கவிழ்க்க சதி வேலைகளில் இறங்குகின்றனர்.

இறுதியில், சகோதரியிடம் சவால் விட்டவாறு ராதிகா ப்ரீத்தியிடம் சந்தானம் தனது காதலைத் தெரிவித்தாரா? சுந்தர்ராஜனின் சடலம் நல்ல முறையில் சிதைக்குச் சென்றதா என்று சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.

உண்மையைச் சொன்னால், சந்தானம் நடித்த ‘ஏ 1’ கூட இதே பின்னணியில் அமைந்த கதைதான்.

நெத்தியடி, எம்டன் மகன் ஆகியவற்றில் கூட, இதே போன்றதொரு சூழல் வேறுவிதமாகக் கையாளப்பட்டிருக்கும். அந்த வகையில், துக்க வீட்டில் நிகழும் காதலாக இப்படத்தின் திரைக்கதை விரிகிறது. அதில் சகோதரிக்கும் சகோதரனுக்கும் இடையே நிகழும் மோதலும் இணைக்கப்பட்டுள்ளது.

அழகான நாயகி!

எண்பதுகளில் இருந்த கமல்ஹாசனை நினைவுபடுத்தும் விக், அவ்வப்போது ரஜினி ஸ்டைல் என்று ‘கலக்கலாக’ திரையில் தோன்றியிருக்கிறார் சந்தானம். அதனால், வழக்கமான கலாய்த்தல் பாணி டயலாக்குகள் அவரிடம் இருந்து வெளிப்படாததை நாம் பொருட்படுத்துவதில்லை.

அதேநேரத்தில், அவருடன் இருப்பவர்கள் தொடர்ச்சியாகச் சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடி செய்யவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

சீரியல், இன்ஸ்டாரீல்ஸில் பிரபலமான ராதிகா ப்ரீத்தி தான் இதில் நாயகி. அவரது அழகும் ஆட்டமும் தான், அவரைக் கவனிக்கக் காரணமாக இருந்து வருகிறது.

என்னதான் ‘ஜீரண குத்து’ என்ற பெயரில் அவரை ஆட வைத்திருந்தாலும், அவரது குதூகல ஆட்டத்தை அதில் காண முடியவில்லை. மற்றபடி, நடிப்பைப் பொறுத்தவரை அவர் ‘ஜஸ்ட் பாஸ்’ கேட்டகிரி தான்.

‘சித்தி அழுவறதை பாருடா’ என்று வசனம் பேசுவது உட்படச் சில காட்சிகளில் நம்மை ‘கிச்சுகிச்சு’ மூட்டுகிறார் ஆடுகளம் நரேன். ஆனந்தராஜிடம் அவர் செய்யும் அட்ராசிட்டி கொஞ்சம் எல்லை மீறியிருப்பதற்கு ‘கத்திரி’ போட்டிருக்கலாம்.

பாட்டியாக வரும் கலைராணி ‘அளவோடு’ படத்தில் தலைகாட்டியிருக்கிறார். திரையில் சங்கீதாவைப் பார்க்கும்போது, ’நாம் ஏதேனும் அமெச்சூர் நாடக கிளப்புக்குள் நுழைந்துவிட்டோமோ’ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

புஜபலம் காட்டும் அர்ஜெய் இதில் இரண்டொரு காட்சிகளுக்கு வந்து போகிறார். வெறுமனே சண்டைககாட்சிக்காக மட்டுமே அவரது பாத்திரம் திணிக்கப்பட்டிருக்கிறது.

மயில்சாமி, சேச்சு வருமிடங்கள் நம்மைக் கடுப்பேற்றுகின்றன. அதேநேரத்தில் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்ராஜன் கூட்டணி லேசாக நம்மைச் சிரிக்க வைக்கிறது.

இவர்கள் போதாதென்று சந்தானத்துடன் திரியும் தங்கதுரை குரூப் மற்றும் மன்சூர் அலிகான், மனோபாலா அடங்கிய திருட்டுக் கும்பல் என்று படம் முழுக்கப் பல தலைகள் தென்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ் துணையோடு காட்சிகளை அவசர அவசரமாக ‘சுட்டிருக்கிறார்’ இயக்குனர் கல்யாண். அதேநேரத்தில், காட்சிகளின் நேர்த்தியில் பெரிதாக அபத்தம் தென்படவில்லை.

ஆனால், பாத்திரங்களுக்கு இடையிலான பிணைப்பை, ஒவ்வொரு காட்சிக்குமான சரியான முடிவை வரையறுக்காத காரணத்தால் திரைக்கதை பாதிக்கிணறு தாண்டிய நிலையில் அந்தரத்தில் நின்றுவிடுகிறது.

எண்பதுகளில் வெளியான பல நகைச்சுவைப் படங்களை, பாடல்களை, சண்டைக்காட்சிகளை நினைவூட்டும் வகையில் இதில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கலை இயக்குனர் ஏ.ஆர்.மோகன், படத்தொகுப்பாளர் எம்.எஸ்.பாரதி, பின்னணி இசை தந்த கிப்ரான் உள்ளிட்டோர் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர்.

பேரு வச்சா போதுமா!

எண்பதுகளில் வெளியான படங்களை நினைவூட்டும் விதமான காஸ்ட்யூம் டிசைன், தயாரிப்பு வடிவமைப்பு, பாத்திரங்களின் நடிப்பு அமைந்ததெல்லாம் சரி; அதற்கேற்ற கதை வேண்டாமா என்ற கேள்விக்கு மட்டும் இயக்குனர் பதிலளிக்கவே இல்லை. ‘ஏன் இதனை பீரியட் பிலிம் ஆக காட்ட வேண்டும்’ என்பதற்கான பதிலை அவர் யோசிக்கவே இல்லை.

ஒரு படத்தில் ‘நாய்க்கு பேரு வச்சியே, சோறு வச்சியா’ என்று நாகேஷ் கேட்டிருப்பார். அதையே கொஞ்சம் மாற்றி, ‘டைட்டிலை வச்சீங்களே, மொத்தக் கதையையும் யோசிச்சீங்களா’ என்றே நமக்குக் கேட்கத் தோன்றுகிறது.

‘ஏ1 மாதிரி இருக்குது’ என்று சொல்லிவிடாமல் இருப்பதற்காகவே, இப்படத்தின் கதை தற்போது நடப்பதாகக் காட்டாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர்.

அதேநேரத்தில், எண்பதுகளை காட்டுவதற்கான அவசியங்களை அவர் திரையில் வெளிப்படுத்தவே இல்லை.

சில இடங்களில் ஆபாசமான நடிப்பும் வசனமும் எரிச்சல் ஊட்டுகின்றன. பல பாத்திரங்கள் வானத்து நட்சத்திரங்களாகத் திரையில் மின்னி மறைகின்றன.

அவற்றின் அவசியம் பற்றி திரைக்கதையில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அது நமக்கு அயர்ச்சியைத் தருகிறது.

குறைந்தபட்சமாக, ‘லாஜிக் மீறல்களை’ நினைவூட்டும் காட்சிகளை, பாத்திரங்களின் மனமாற்றங்களைக் கதையோடு தொடர்புபடுத்தும் வகையிலான சில காட்சி துணுக்குகளை இயக்குனர் ‘படமாக்கவே’ இல்லை.

மிக முக்கியமாக, ‘கிளைமேக்ஸ்’ காட்சியை அவர் எடுக்கவே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். அதனால், ஏற்கனவே இருக்கும் அதிருப்தி மேலெழுந்து ஒரு கோபத்தோடு தியேட்டரை விட்டு வெளியே வர வேண்டியதாக இருக்கிறது.

இப்படம் எண்பதுகளில் வெளியான காமெடி படங்களுக்கு ‘அர்ப்பணம்’ செய்யும்விதமாகவும் அமையவில்லை. அவற்றைக் கிண்டலடித்து ‘ஸ்பூஃப்’ ஆகவும் உருமாறவில்லை.

ரொம்பவே நாள்பட்ட புகைப்படம் கவனிப்பாரற்றுக் கிடக்கும்போது செல்லரித்துப் போகும்.

அவற்றைக் கையிலெடுத்துப் பார்க்கும்போது, அந்த ‘கிளாசிக்’ தோற்றத்திற்காகவே அப்படியே பத்திரப்படுத்தத் தோன்றும்.

ஆனால், சில புகைப்படங்கள் நாம் பார்க்கவும், பாதுகாக்கவும் இயலாதபடி ஒரு மூலையில் வீற்றிருக்கும். அந்த வரிசையில் இந்த ‘80ஸ் பில்டப்’ சேர்ந்தது, தீவிர சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் வருத்தம் தரும் விஷயமாகத்தான் இருக்கும்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment