நூல் விமர்சனம்:
ஈழத்தின் போராட்ட காலத்தையும், போராளிகளின் திடத்தையும், அவர்களுக்கேற்பட்ட நிமிர்வுகளையும், போரின் இறுதியில் ஏற்பட்ட மனத்தளர்வுகளையும், மக்களின் தியாகங்களையும் பற்றி மிக இலகுவான மொழிநடையில் எழுதப்பட்டிருக்கிறது ‘போராளியின் காதலி’ நாவல்.
போராட்டத்தை உயிராக நேசித்த போராளிகளையும், போராளிகளை உயர்வாக மதித்திருந்த மக்களையும், அவர்களின் கதைகளையும் பதிவு செய்கின்றது போராளி வெற்றிச் செல்வி எழுதிய இந்த நாவல்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் வன்னியிலிருந்தும் ஈழத்திலிருந்தும் எழுந்த முதல் நாவலாக இந்த நூல் முதன்மை பெறுகிறது.
“இந்த பூமியில் வாழும் மனிதர்களின் வாழ்வு எவ்வளவு மாறுபட்டுக் கிடக்கிறது.
நாம் இங்கு சொகுசாக, இன்பமாக தொலைக்காட்சி முன்னிலையிலும், அலைபேசியிலும் நமக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதைப் பார்க்கிறோம். மறுமுனையில் வாழ்வாதாரம் இல்லாமல் உயிர் வாழும் சூழல் இல்லாமல் சுற்றித் திரியும் மனிதக்கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.
விலங்குகள் போல் இல்லை மனிதன். அவன் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறான். பிரச்சனைகளை உருவாக்குகிறான். சுடுபவனும் அவனே, இறப்பவனும் அவனே. போரை உருவாக்குபவனும் அவனே. அதைத் தடுக்க வேண்டும் என பேசுபவனும் அவனே.
போராளியின் காதலி, தான் நிம்மதியாக அனைவரும் போல் இயல்பாக வாழ நினைத்து, பின்னர் போர் எவ்வாறு அவள் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது” என நாவல் பயணிக்கிறது.
“போர் கொடுமையானது. மக்கள் யாரும் போரை விரும்புவதில்லை. அதிகார வர்க்கம், அதை மக்கள் மேல் சுயலாபத்திற்காக திணிக்கிறது. மனிதனால் ஏன் போர் இல்லாமல் அமைதியாக பகிர்ந்து வாழ முடியவில்லை” என கேட்கும் போராளியின் காதலி அற்புதமான நாவல்.
நம்மை நாமே உணர உதவும் நூல் இது. இந்த நாவலிலிருந்து அவ்வளவு எளிதாக விடுபட முடியாது. நாவலில், ஈழ மக்கள் துயரத்தைப் பேசினாலும், பூமி அனைவருக்கும் சொந்தமானது என ஆசிரியர் எடுத்துக் கூறும் விதம் அருமை.
நூல்: போராளியின் காதலி
ஆசிரியர்: வெற்றிச்செல்வி
பதிப்பகம்: தோழமை பதிப்பகம்
விலை: ₹114
பக்கங்கள்: 152
நன்றி: வாசிப்பை நேசிப்போம் முகநூல் பதிவு