தனது முதல் படத்திலேயே பிரமாண்ட சண்டைக் காட்சிகளைப் புகுத்தி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியவர் ஷங்கர்.
இப்போது அவர் ‘இந்தியன் -2’ ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரு படங்களை ஒரே நேரத்தில் டைரக்டு செய்து வருகிறார்.
இரு படங்களின் ஷுட்டிங்கும் முடிவடையும் தருவாயில் உள்ளது.
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் ‘இந்தியன் -2’ படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது.
இத்துடன் அந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும்.
இதனைத் தொடர்ந்து ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்புக்காக ஐதராபாத் செல்கிறார்.
ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் கதாநாயகியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.
ஜே.சூர்யா, அஞ்சலி, நவீன் சந்திரா, சமுத்திரக்கனி, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை தயாரித்த தில்ராஜு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
படத்தின் பாடல் காட்சிகளுக்கு மட்டும் 90 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டும்.
இந்திய திரை உலகம் இதுவரை காணாத வகையில் உருவாக்கப்படும் இந்த சண்டைக் காட்சியில் ஆயிரம் ஸ்டண்ட் கலைஞர்களைப் பயன்படுத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
‘கேம் சேஞ்சர்’ பான் இந்தியா படமாக உருவாகியுள்ளதால் அடுத்த ஆண்டு தீபாவளிக்குப் படத்தை வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.
இதற்கு முன்பாகவே ‘இந்தியன் -2 ‘படம் ரிலீஸ் ஆகிவிடும். ‘கேம் சேஞ்சர்’, ‘இந்தியன் 2’ ஆகிய இரு படங்களுமே அரசியலை மையமாகக் கொண்டக் கதை என்பதால் இரு படங்களின் ரிலீஸுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்க வேண்டும் என இரு படங்களின் தயாரிப்பாளர்களும் கருதுகின்றனர்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கமலும், தேர்தலுக்கு பின்பு ராம் சரணும் அரசியல் பேசப்போகிறார்கள்.
– பாப்பாங்குளம் பாரதி