சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே!

நூல் விமர்சனம்:

பகுத்தறிவு, படிப்பு, திறமை மற்றும் வாய்ப்பு என இத்தனை அம்சங்களும் கூடிவரும்போது மனிதன் ஒரு உயர்ந்த / உன்னத நிலையை அடைகிறான்.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக இன்னும் ஒரு தகுதி அதற்கு கூடுதலாகத் தேவைப்படுகிறது. அது தான் சுயமுன்னேற்றம்.

என்ன தான் நம் பெற்றோர்கள், நண்பர்கள், துணை என ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையில் நமக்கு நம்பிக்கையாகவும் ஊக்கமாகவும் இருந்து வரும் போதிலும், தனிமனித முன்னேற்றம் தான் எப்போதுமே ஒரு நிலையான வெற்றியை அடைய இன்றியமையாத தேவையாக இருந்து வருகிறது.

‘எனது முன்னேற்றத்தில் எனக்கு அக்கறை உண்டு’ என நாம் எல்லோரும் கூறுவதுண்டு. ஆனால், வெகு சிலர் மட்டும் அதில் வெற்றி காண்கின்றனர்.

காரணம் அவர்களது அதிர்ஷ்டம் என பொத்தாம் பொதுவாக கூறுவதைக் கேட்க இயலும்.

என்னதான் முன்னேற்றம் பற்றிய அறிவு  / தெளிவு நம் எல்லோருக்குள்ளும் இருந்தாலும், அதை எப்படி கடைப்பிடிப்பது, எவ்வாறு தொடர்ந்து அதில் நிலை கொள்வது என்பதைத்தான் இந்த மாதிரியான புத்தகங்களைக் கொண்டு, எளிதில் புரியும்படி எழுதி வருகிறார்கள் நமது ஆசிரியர்கள்.

சிறிய புத்தகம், அதிகம் நம்மை குழம்பச் செய்யாமல், மிக எளிதாக விளங்கும்படி சமகால / நன்கு தெரிந்த பிரபலங்களை (எப்போதும் போல கல்பனா சாவ்லா, அப்துல் கலாம், எம்.ஜி.ஆர்) எடுத்துக்காட்டாக காண்பித்து விளக்கியுள்ளார்.

எவ்வாறு இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்?, நிர்ணயித்த இலக்குகளை நோக்கி எவ்வாரு நம்மை செலுத்த வேண்டும் என்பதை கூறுகிறார்.

நமக்கு கிடக்கப்பெற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுதல், அவ்வாறான வாய்ப்பை சரியாக பயன்படுத்தியவர்களின் வெற்றிகளைப் பற்றிய விளக்கங்களையும் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல, ஏன் வாய்ப்புகளைத் தவரவிடக்கூடாது, அவ்வாறு தவறவிட்டவர்களின் தற்போதைய நிலையையும் எடுத்துரைக்கிறார்.

முடிவெடுக்கும் திறன், வறுமையை வென்றவர்கள் என சிறு சிறு கட்டுரைகளாக எளிமையாக, அதாவது சிறார்களுக்கு கூட சுலபமாக புரியும் படியாக எழுதியுள்ளார். புத்தகத்தில் எனக்கு குறையாகப்பட்டதும் அதுவே.

பெரியவர்களாகிய நாம் இதை விட சிறந்த, பல சுயமுன்னேற்ற புத்தகங்களை வாசித்துள்ளமையால், இதன் எடை கொஞ்சம் குறைவாகவே தெரிந்தது.

சில இடங்களில், ‘மாற்றுத்திறனாளிகள் கூட’ என்னும் பதத்தை உபயோகித்தது அவ்வளவாக பிடிக்கவில்லை.

முக்கியமாக கைபேசி மற்றும் கணிணியின் பயன்களை விட ஆபத்துளே அதில் அதிகம் எனக்கூறியது என ஒவ்வாத கருத்துக்கள் சிலவற்றை கலந்துவிட்டிருந்தார்.

இப்போதிருக்கும் பல்லாயிரம் குழவிகள் இந்தப் புத்தகத்தை வாசிக்க நேர்ந்திருந்தால், சற்று அதிகமாகவே ஆசிரியர் விமர்சனத்திற்கு ஆளாக வாய்புள்ளது.

கைபேசி, கணிணி வழி ஆபத்து குழந்தைகளை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் தான்.

ஆனால் இன்று இரண்டுமே நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட உறவாகிப் போய்விட்டது.

ஆகவே, அதில் உள்ள நன்மைகளை எடுத்துக்கொண்டு தீமைகளுக்கு அடிமையாகமள் கடந்துவிடும் பக்குவத்தை நம் குழந்தைகளிடம் வளர்த்து விடுவதே இதற்கு தீர்வாக அமையும் என்று நான் நினைக்கின்றேன்.

புத்தகம் : சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
ஆசிரியர்: சிவபாரதி
பதிப்பகம்: அருணா பப்ளிகேசன்ஸ்
விலை: ₹40.00

நன்றி: வாசிப்பை நேசிப்போம் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment