கழகத்தின் வாளும் கேடயமும்!

ஆசிரியர் சிறப்புமிகு மாறன் அவர்கள் முரசொலி குறித்து எழுதிய அந்த நாள் மடல் உங்கள் பார்வைக்கு…

மதுரையில் ஒலிக்குது முரசொலி:

‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாளும் கேடயமும்’ என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றி புகழ்ந்துரைக்கப்பட்ட ‘முரசொலி’ ஏடு தனது வெள்ளி விழா ஆண்டில் மதுரை பதிப்பினை வாங்கி நடத்துவது அதன் தீரமிக்க வரலாற்றிலும், அது ஆற்றிவரும் அயராத சமூகத் தொண்டிலும் மேலும் ஒரு புதிய திட்டமாகும்.

1942-ம் ஆண்டு கலைஞர் அவர்களால் திருவாரூரில் துண்டுப் பிரசுரமாக ‘முரசொலி’ துவங்கப்பட்டது.

பின்னர் 1946-ம் ஆண்டில் ‘முரசொலி’ வார வெளியீடாக உருப்பெற்றது.

அதன்பிறகு ‘முரசொலி’ ஒலிக்க முடியாத நிலை உருவாகி, பிறகு 1954-ம் ஆண்டிலே சென்னையிலிருந்து மீண்டும் வார ஏடாக முழக்கமிடத் துவங்கியது.

1960-ம் ஆண்டு அறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) முதல் ‘முரசொலி’ தினசரி ஏடானது.

ஆம், ‘முரசொலி’ சென்னையிலிருந்து துவங்கப்பட்ட 1954-ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் இந்த ஆண்டு 25-வது ஆண்டை முடித்துக்கொண்டு 26-வது வெள்ளிவிழா ஆண்டில் காலடி எடுத்துவைத்துத் தனது லட்சிய பயணத்தில் பீடுநடை போட்டு வருகிறது.

திரும்பிப் பார்க்கிறோம் – திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயத்துடிப்புதான் ‘முரசொலி’யாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அண்ணன் கண்ட கழகத்தின் இலட்சியத்தைப் பறைசாற்றுவதுதான் அதன் லட்சியமும்.

திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டப் பிரகடனம் செய்துவிட்டால் அதன் லட்சோப லட்சம் செயல் வீரர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றுவதுதான் முரசொலியின் மூலாதாரக் கொள்கை என்பதை அதன் எதிரிகளும் ஒப்புக்கொள்வர்.

‘முரசொலி’ பாதுகாப்புச் சட்டத்தைச் சந்தித்திருக்கிறது.

அதன் கேலிச் சித்திரங்கள் உலகெங்கிலும் உள்ள ஏடுகளில் பிரசுரமாகியிருக்கின்றன.

முழுமையான சென்சாருக்கு ஆட்பட்ட காலமும் உண்டு. அப்போதெல்லாம் அதில் வெளிவரும் சங்கேத மொழியைப் புரிந்துகொள்ள முடியாமல் அதிகாரிகள் தவித்ததும் உண்டு.

இவ்வாறு, தி.மு.கழகத்தின் படைக்கலனில் ஒன்றாய் விளங்கும் ‘முரசொலி’ 25-வயதைத் தாண்டி வெள்ளிவிழா காலத்தை அடைந்திருப்பது கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடையும் செய்தியாகும்.

அதைப்போலவே ‘முரசொலி’ மதுரையிலிருந்து இன்று முதல் வெளிவருகிறது- என்பது பாண்டிய மண்டலத்து கழகத் தோழர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கும் என்று கருதுகிறோம்.

சொந்தத்தில் அச்சகமின்றி பொதுவாக, மிகவும் வசதிக் குறைவான சூழ்நிலையில் – மதுரைப் பதிப்பு உருவாகியிருக்கிறது. கழகக் கண்மணிகள் தொடர்ந்து ஆதரவு நல்கினால் மதுரைப் பதிப்பு நன்கு வேரூன்றி வளர்ந்திட வாய்ப்புண்டு – என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை.

‘முரசொலி’ மதுரை பதிப்பின் வெற்றி தெற்குச் சீமை கழகத் தோழர்களின் கையில் இன்று முதல் ஒப்படைக்கப்படுகிறது. அவர்களது அன்பும் ஆதரவும் என்றும் இருக்கும் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை.

கால் நூற்றாண்டு…

அதுவும் ஒரு கட்சிப் பிரச்சார ஏடு கால் நூற்றாண்டைத் தாண்டுவது என்பது சாதாரண நிகழ்ச்சியல்ல.

– இந்த அரிய சாதனை நிகழ்வதற்குக் காரணம் என்ன குறை இருந்தாலும் ‘முரசொலி’யை தினமும் தவறாமல் வாங்கிப் படிக்கிற கழகக் கண்மணிகள்தான்.

முதலில் அவர்களுக்கெல்லாம் எங்கள் இதய நன்றியை உரித்தாக்குகிறோம்.

எங்கள் இன்னல்களில் பங்கேற்கும் ஆசிரியர் குழுவினருக்கும், தொழிலாளத் தோழர்களுக்கும் நிர்வாகக் குழுவினருக்கும், விற்பனையாளர்களுக்கும் எங்கள் இதய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

நன்றி: மூத்த பத்திரிகையாளர் கூடலரசன், சேலம்.

Comments (0)
Add Comment