ஒரு காதல் எப்போது அமரத்துவம் வாய்ந்ததாக மாறும்? இனி ஒன்றுசேர முடியாது என்ற நிலையிலும், இணைக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென்று இருவருமே விரும்புகையில் அது நிகழும்.
அந்தக் காதலுக்கு வரும் இடையூறுகளோ, எதிர்ப்புகளோ மட்டும் அதனை நிகழ்த்திவிடாது;
அப்படியொரு காதல் கதையைத் தர வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார் ‘ஏழு கடல் தாண்டி- சைடு பி’ தந்திருக்கும் இயக்குனர் ஹேமந்த் எம்.ராவ்.
ஆடியோ கேசட்டின் இரு பக்கங்களைக் குறிப்பது போன்று, இதன் முதல் பாகம் ‘சைடு ஏ’ கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இப்படம் கடந்த வாரம் வெளியாகியிருக்கிறது.
‘அவனே ஸ்ரீமன் நாராயணா’, ‘777 சார்லி’யில் இடம்பெற்ற ரக்ஷித் ஷெட்டி இதில் கதாநாயகனாகத் தோன்றியுள்ளார். ருக்மிணி வசந்த், சைத்ரா ஆச்சார் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்தப் படம் எப்படியிருக்கிறது?
முறிந்த காதல்!
காதலி பிரியாவோடு (ருக்மிணி வசந்த்) மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்று எண்ணும் மனு (ரக்ஷித் ஷெட்டி), முதலாளி மகன் செய்த விபத்தைத் தான் செய்ததாகப் பொறுப்பேற்று சிறை செல்கிறார்.
அதற்குப் பிரதிபலனாக, முதலாளி தரும் பணத்தைக் கொண்டு பெரிதாக ஒரு வீடு வாங்கலாம் என்று கனவு காண்கிறார்.
இடைப்பட்ட காலத்தில் பிரியாவின் அம்மா ‘என் பொண்ணை மறந்துடு’ என்று வற்புறுத்த, வேறு வழியில்லாமல் தன் காதலைத் துறந்துவிட்டதாகப் பொய் சொல்கிறார் மனு.
அவரது புறக்கணிப்பு பிரியாவை வேதனையில் தள்ளுகிறது. அதன் காரணமாக, தாய் சொல்லும் நபரையும் அவர் திருமணம் செய்து கொள்கிறார்.
அந்த காலகட்டத்தில், பிரியாவின் குரல் ஒலிக்கும் கேசட்டை கேட்பது மட்டுமே மனுவுக்கு ஆசுவாசம் தருகிறது. இது ‘சைடு ஏ’ படத்தின் கதை.
சிறையில் இருந்து மனு விடுதலையாகி வருவதில் இருந்து ‘சைடு பி’ திரைக்கதை தொடங்குகிறது.
நண்பன் பிரகாஷ் (கோபால் கிருஷ்ணா) மூலமாகத் தங்குமிடமும் ஒரு வேலையும் கிடைக்கிறது. அதன்பிறகு, மீண்டும் பிரியாவைத் தேடி அலைகிறார் மனு.
அந்த நாட்களில் பாலியல் தொழில் செய்துவரும் சுரபியைச் (சைத்ரா) சந்திக்கிறார். அவரது உதவியுடன், பிரியா இருக்குமிடத்தைத் தெரிந்துகொள்கிறார்.
பிரியாவின் வீடு, வேலை செய்யுமிடம், பயணிக்கும் பாதை என்று ‘இஞ்ச் பை இஞ்ச்’சாக அனைத்தையும் தொலைவில் இருந்து தெரிந்து கொள்கிறார். அவரது மகனிடம் கணவனிடமும் அறிமுகமாகிப் பழகத் தொடங்குகிறார்.
அப்போது, தற்போது பிரியா மகிழ்ச்சியாக வாழவில்லை என்று அறிகிறார் மனு. ஒருநாள் யாருமில்லா நேரத்தில் பிரியாவின் வீட்டுக்குள் நுழைகிறார்.
அங்கிருந்து வெளியேறும்போது ஒரு ஆட்டோகாரர் மனுவைத் துரத்துகிறார். அது வேறு யாருமல்ல, பிரியாவின் தம்பிதான். ஏற்கனவே மனுவுக்கும் அவருக்கும் அறிமுகம் உண்டு.
அப்போது, தன் சகோதரி மகிழ்ச்சியாக வாழ்வதாக மனுவிடம் அவர் சொல்கிறார். ஆனால், மனுவோ அதனைத் துளி கூட நம்பவில்லை.
மனம் முழுக்கப் பிரியா இருந்தாலும், இன்னொரு பக்கம் சுரபியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதையும் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகிறார் மனு. அவரோடு சேர்ந்து ஊர் சுற்றுகிறார்.
இந்த நிலையில், ஒருநாள் பிரியா மனுவை நேருக்குநேராகச் சந்திக்கிறார். அதன்பின் என்னவானது? பிரியா மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்ற மனுவின் விருப்பம் நிறைவேறியதா என்பதைச் சொல்கிறது இப்படத்தின் மீதி.
ஒரு காதல் முறிவுதான் படத்தின் தொடக்கம் எனக் கொண்டால், ‘சைடு ஏ’ பற்றிக் கவலைப்படாமல் இதனை முழுதாக ரசிக்க முடியும். மிகச்சில இடங்களில் வரும் ‘மாண்டேஜ்’, அதற்குத் தடையாக இருக்கும். ஏனென்றால், அந்த இடங்களில் மட்டுமே ‘சைடு ஏ’ காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
கவித்துவமான கதை சொல்லல்!
‘கவித்துவமாக நகரும் காட்சிகள்’ இப்படத்தின் சிறப்பு என்று சொல்லலாம். அதற்கேற்ப, படத்தில் பல லொகேஷன்களை காட்டியிருக்கிறார் இயக்குனர் ஹேமந்த் எம்.ராவ்.
ஆங்காங்கே சிற்சில திருப்பங்களோடு கதை சொல்லியிருக்கிறார்.
காட்சிகள் நிகழும் களங்களுக்கேற்ப ஒளியையும் கோணங்களையும் திரையில் பரப்பி, மொத்தக் கதைக்கும் ‘யதார்த்த முலாம்’ பூசியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி.
கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சி ‘சினிமாத்தனமாக’ இருந்தாலும், அதில் ஒளிப்பதிவு நேர்த்தியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
உல்லாஸ் ஹைடூரின் தயாரிப்பு வடிவமைப்பு, ஒவ்வொரு பிரேமிலும் இருண்மையையும் துருப்பிடித்த தன்மையையும் நிரப்ப உதவியிருக்கிறது.
கடந்த காலம், நிகழ்காலம் என்று மாறி மாறி நகரும் திரைக்கதையை, ரொம்பவே நேர்த்தியாகக் கோர்த்த விதத்தில் ஆச்சர்யப்படுத்துகிறது சுனில் பரத்வாஜின் படத்தொகுப்பு.
சரண்ராஜின் இசையில் பாடல்கள் காட்சிகளோடு ஒட்டினாற்போல அமைந்திருக்கின்றன. அதேபோல, காதலில் உருகும் அனுபவத்தை நாம் உணரும்விதமாகவே அவரது பின்னணி இசை அமைந்துள்ளது சிறப்பு.
ருக்மிணி வசந்த் ரொம்பவே மெச்சூர்டான அழகியாகத் தெரிகிறார். காதல் பருவத்திற்கும் கல்யாண காலத்திற்குமான தோற்றங்களில் அவர் வெவ்வேறாகத் தெரிவது படத்தின் சிறப்புகளில் ஒன்று.
மாறாக, பெரிய மனுஷி தோரணையில் பேசும் சைத்ரா ஆச்சாரிடம் தொடர்ந்தாற்போல குழந்தைத்தனம் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதுவே, அப்பாத்திரத்தை ரசிக்கக் காரணமாகிறது.
நாயகனின் நண்பனாக வரும் கோபாலகிருஷ்ணா, நாயகியின் கணவராக நடித்தவர், நாயகனுடன் மோதும் ரவுடியாக வருபவர், அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று மிகச்சில மட்டுமே பிரதானமாகத் தோன்றியுள்ளனர்.
தோற்ற மாறுபாடு மட்டுமல்லாமல், மிகத்தேர்ந்த நடிப்பையும் இதில் வெளிப்படுத்தியிருக்கிறார் ரக்ஷித் ஷெட்டி. வேறுபட்ட கதைகளை அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் பாங்கு அதைவிடச் சிறப்பாக உள்ளது.
காதல் என்ற பெயரில் காதலனோ, காதலியோ தனது இணையின் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிற காலத்தில், பரஸ்பர மரியாதையும் அன்பும் மட்டுமே அந்தக் காதலுக்கு ‘சாகாத்தன்மை’யை அளிக்கும் என்ற ‘என்றென்றைக்கும் இனிக்கும்’ ஒரு புராணத்தைப் பாட உதவிருக்கிறார் ரக்ஷித்.
‘டைட்டானிக்’ உட்படப் பல காதல் படங்கள் இதையே பேசுகின்றன என்பதால், தானாகவே ‘ஏழு கடல் தாண்டி’ ஒரு கிளாசிக் அந்தஸ்தை வரித்துக் கொள்கிறது.
நல்ல காதல் படம்!
ரத்தம் தெறிக்கும் வன்முறை மட்டுமே ‘பான் இந்தியா’ படமாக இருக்கும் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருக்கும் காலகட்டத்தில், மனிதமே சிறந்த மருந்து என்று சொன்னது ‘777 சார்லி’.
அதே போல, தற்போது காதலை விடப் பொதுவான பேசுபொருள் எதுவுமில்லை என்று ‘ஏழு கடல் தாண்டி’ படத்தைத் தயாரித்திருக்கிறார் ரக்ஷித் ஷெட்டி. இது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம்.
கிட்டத்தட்ட ஒரு ‘வெப்சீரிஸ்’ அளவுக்குக் காட்சிகளைக் கொண்ட ஒரு திரைக்கதையை இரு பாகங்கள் கொண்ட திரைபபடமாகத் தயாரிக்கலாம் என்று அவர் முடிவு செய்தது அல்லது இயக்குனரின் எண்ணத்தை ஏற்றுக்கொண்டது மிகப்பெரிய விஷயம்.
முதல் பாகம் தெலுங்கு, தமிழ் மொழிகளில் ‘டப்’ செய்யப்படாத நிலையில், அதனை ஓடிடியில் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு, இரண்டாம் பாகத்தை மட்டும் ‘டப்பிங்’ செய்வதற்குத் தனி தைரியம் வேண்டும்.
‘சைடு ஏ’ பார்க்காதவர்களும் இந்த ‘சைடு பி’யைப் பார்த்தால் காதல் கொள்ளும் அளவுக்கே படம் இருக்கிறது என்பதும் அதற்கான காரணமாக இருக்கலாம்.
நெடுநாட்களுக்குப் பிறகு, இன்றைய வேக யுகத்திலும் கிளாசிக் தன்மையுடன் காதல் படங்களைப் பார்க்கலாம், படைக்கலாம் என்ற நம்பிக்கையைப் பார்வையாளர்களிடமும் படைப்பாளிகளிடமும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது ‘ஏழு கடல் தாண்டி’. அதற்காகவே இயக்குனர் ஹேமந்த் எம்.ராவ் மற்றும் படக்குழுவினரை உற்சாகத்துடன் வரவேற்கலாம்!
– உதய் பாடகலிங்கம்