கடந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தில் கணக்கற்ற அரசியல் இயக்கங்கள் தோன்றி இருந்தாலும், இரண்டு கட்சிகள் மட்டுமே புயலாக உருவெடுத்து புரட்சியை ஏற்படுத்தின.
ஒன்று, அறிஞர் அண்ணா தலைமையில் முளைத்த திமுக. மற்றொன்று, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அதிமுக.
அரை நூற்றாண்டு காலமாக இந்த இரு கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டின் தலைஎழுத்தை தீர்மானித்து வருகின்றன.
அதிமுகவின் உதயம், எடுத்த எடுப்பிலேயே அதன் பிரமிக்கத்தக்க வளர்ச்சி, வெற்றிமுகம், ஏறுமுகம், இறங்குமுகம் என எம்.ஜி.ஆர். இயக்கத்தின் பல கூறுகளை விவரிக்கும் ஒரு செய்தி தொகுப்பு.
அதிமுக உதயம்
வேராகவும், விழுதாகவும் இருந்து திமுக எனும் ஆலமரத்தை தாங்கிப்பிடித்த எம்.ஜி.ஆர்., கட்சி தலைமையிடம் கணக்கு கேட்ட காரணத்தால் ‘கணக்கு’ முடிக்கப்பட்டார்.
லட்சோப லட்சம் தொண்டர்கள் அவருடன் இருந்த காரணத்தால் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி அதிமுகவை மலரச்செய்தார், புரட்சித்தலைவர்.
திண்டுக்கல் இடைத்தேர்தல்
மாநிலத்தை ஆண்ட திமுக, பொன்.முத்துராமலிங்கத்தை வேட்பாளராக அறிவித்தது.
பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தன் போட்டியிடுவார் என அறிவித்தார், கட்சி தலைவர் காமராஜர்.
மத்தியில் ஆட்சி செய்த இந்திரா காங்கிரசும் சீமைசாமி என்பவரை நிறுத்தியது.
அங்கீகரிக்கப்படாத பிராந்திய கட்சி என்பதால் அதிமுகவுக்கு நிலையான சின்னம் கிடையாது.
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு, சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது மாயத்தேவர் சுயேச்சையாகவே கருதப்பட்டார்.
மாயத்தேவரிடம் 16 சின்னங்களைக் காட்டிய தேர்தல் அதிகாரிகள், அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்ய அறிவுறுத்தினர்.
பிற்காலத்தில் தமிழக அரசியலில் மாயா ஜாலங்கள் நிகழ்த்திய இரட்டை இலை சின்னமும் அந்த 16 சின்னங்களில் ஒன்றாகும்..
எம்.ஜி.ஆரின் அனுமதியோடு இரட்டை இலையை, தனது சின்னமாக பெற்றுக்கொண்டார், மாயத்தேவர்.
இந்தியாவே உற்று நோக்கிய இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 792 வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார். ஆளும் திமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாம் இடம் பிடித்தது.
வாக்குகள் விவரம்:
மாயத்தேவர்
(அதிமுக) 2,60, 824
என்.எஸ்.வி. சித்தன்
(ஸ்தாபன காங்கிரஸ்) 1, 19, 032
பொன்.முத்துராமலிங்கம்
(திமுக ) 93, 496
சீமைசாமி
(இ.காங்கிரஸ்) 11, 423
மொத்தம் பதிவான வாக்குகளில் 52 சதவீதம் வாக்குகளை அதிமுக வேட்பாளர் பெற்றிருந்தார்.
ஸ்தாபன காங்கிரஸ், திமுக, இ.காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தி இருந்தாலும், அதிமுகவே இந்தத் தேர்தலில் வென்றிருக்கும் என்பதே இந்த வாக்கு சதவீதம், உலகுக்கு உரக்க சொல்லும் உண்மை.
இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக சொல்லப்போனால், பிரதமராக இருந்த இந்திராகாந்தி, முதலமைச்சராக இருந்த கருணாநிதி, காமராஜர் ஆகிய மூன்று ஆளுமைகளும் ஒரே குடையின் கீழ் வந்திருந்தாலும், கொடைவள்ளலை வென்றிருக்க முடியாது என்பதே திண்டுக்கல் தேர்தல் உணர்த்திய செய்தி.
இந்த வெற்றியை, தான் மறையும் வரை எம்.ஜி.ஆர். தொடர்ந்து கொண்டே இருந்தார்.
திண்டுக்கல்லை தொடர்ந்து அடுத்த ஆண்டே இன்னொரு இடைத்தேர்தலை எம்.ஜி.ஆர். எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
1974ஆம் ஆண்டு கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல்.
அதிமுக வேட்பாளராக அரங்கநாயகத்தை அறிவித்தார், எம்.ஜி.ஆர்.
அந்த இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றிப் பெற்றது. சட்டமன்றத்திலும் தங்கள் கணக்கை ஆரம்பித்தது அதிமுக. அரங்கநாயகம், இரட்டை இலையில் வென்ற முதல் சட்டமன்ற உறுப்பினராக கோட்டைக்குள் நுழைந்தார்.
எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனார்
1977ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவியது.
அதிமுக, திமுக, காங்கிரஸ், ஜனதா ஆகிய கட்சிகள் கோதாவில் குதித்தன.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 130 இடங்களை கைப்பற்றியது அதிமுக.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதன் முறையாக முதலமைச்சர் ஆனார்.
1949 ஆம் ஆண்டில் உதித்த திமுக, ஆட்சியைப் பிடிக்க 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. அதிமுகவை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். ஐந்து ஆண்டுகளிலேயே கோட்டையைப் பிடித்து விட்டார்.,
1979ஆம் ஆண்டில், தி.மு.க – அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் இணைப்பதற்கான முயற்சியில் ஜனதா கட்சித் தலைவர் பிஜு பட்நாயக் ஈடுபட்டார்.
இவர் இப்போதைய ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தந்தை.
இதற்காக சென்னை வந்த பிஜு பட்நாயக், எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் சந்தித்து பேசினார். ஆனால் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை.
ஆட்சி கலைப்பு
1977-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த இந்திரா, 1980-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார்.
பிரதமராக பொறுப்பேற்ற இந்திரா காந்தி, திமுக நிர்ப்பந்தம் காரணமாக எம்.ஜி.ஆர்.ஆட்சியைக் கலைத்தார். ஆளுக்கு சரி பாதியாக தொகுதிகளை பிரித்துக்கொண்டு, திமுகவும், இந்திரா காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.
இடதுசாரி கட்சிகள் துணையுடன் தேர்தலை எதிர்கொண்ட அதிமுக 129 இடங்களில் வென்றது. எம்.ஜி.ஆர். இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனார்.
1984-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வென்று தொடர்ச்சியாக மூன்றாம் முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்து, புதிய வரலாறு எழுதினார்.
எம்.ஜி.ஆரின் அந்த இமாலயச்சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.
சோதனைக்காலம்
எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக பிளவு பட்டது.
1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
அ.தி.மு.க.வின் ஜானகி அம்மாள் அணியும், ஜெயலலிதா அணியும் தங்களுக்குத்தான் அந்தச் சின்னத்தை கொடுக்க வேண்டுமென கோரியதால், தேர்தல் ஆணையம் இலையை முடக்க நேரிட்டது. இரு அணிகளும் தனித்தனி சின்னங்களில் போட்டியிட்டன. அந்த தேர்தலில் திமுக வென்றது.
ஜெ.அணி 27 இடங்களிலும், ஜா.அணி ஒரு இடத்திலும் வென்றது. ’ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்பதை உணர்ந்து கொண்ட இரு அணி தலைவர்களும் கலந்து பேசினர். இரு அணிகளும் இணைந்தன.
ஜெயலலிதா, கட்சியின் பொதுச்செயலாளர் ஆவதற்கு, ஜானகி அம்மாள் இசைவு தெரிவித்தார். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்தது.
சில மாதங்களில் நடைபெற்ற மதுரை, மருங்காபுரி இடைத்தேர்தலில் இரட்டை இலை துளிர்த்தது. இரு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று, ஆளும் திமுகவை வீழ்த்தியது.
இந்த நிகழ்வை, திண்டுக்கல் இடைத்தேர்தலின் எதிரொலி என்றே அரசியல் நோக்கர்கள் கணித்தனர். அவர்கள் கணித்தபடியே, 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக 164 தொகுதிகளில் வென்று, புதிய சரித்திரம் படைத்தது. ஜெயலலிதா முதல் அமைச்சரானார்.
1996-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வி கண்டது. எனினும் அடுத்த ஐந்தே ஆண்டுகளில் (2001) மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது, அதிமுக.
2006 ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில், அதிமுக தோற்றாலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதிமுக 61 இடங்களில் வென்ற நிலையில், திமுக 96 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது.
காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் கருணாநிதி முதலமைச்சர் ஆனார். ஆனாலும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை. தமிழகத்தில் அமைந்த முதல் மைனாரிட்டி அரசாங்கம், இதுதான்.
அந்த தேர்தலில் எதிர்க்கட்சியாக உருவெடுத்த அதிமுகவுக்கு 32 சதவீத ஓட்டுகள் கிடைத்து இருந்தது.
ஆட்சி அமைத்த திமுக, 26 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது என்பது விசித்திர உண்மை.
2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக மீண்டும் வென்றது. 2016-ம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக வென்றது.
இந்தத் தேர்தலில்,சரித்திர சாதனையாக முதன் முறையாக 234 தொகுதிகளிலும் அதிமுகவின்’ இரட்டை இலை’ போட்டியிட்டது. சில சிறிய கட்சிகளை மட்டும், அணி சேர்த்து, தனியாக தேர்தலை சந்தித்தார், ஜெயலலிதா. அந்தக் கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டன. அதிமுக 135 இடங்களை கைப்பற்றியது.
ஜெயலலிதா மறைந்தார்
முதலமைச்சராக இருந்த போதே 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்தார்.
சில மாதங்களில் ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி என அதிமுக மூன்றாக பிளவு பட்டது.
ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்து 2021-ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்தன. இவர்களுடன் பாஜக, பாமக , தமாகா கூட்டணி அமைத்தது. 66 இடங்களில் மட்டுமே அதிமுக வென்றது.
விஜயகாந்துடன் இணைந்து போட்டியிட்ட டிடிவி தினகரனின் அமமுக, அதிமுகவின் வாக்குவங்கியில் குறிப்பிடத்தக்க சேதாரத்தை ஏற்படுத்தி இருந்தது.
தினகரன் பிரித்த வாக்குகள், சுமார் 40 தொகுதிகளில் அதிமுக தோற்பதற்கு காரணமாக இருந்தது. இப்போது அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் வெளியேற்றப்பட்டு விட்டார்.
வெற்றிக்கணக்கு
1977-ம் ஆண்டு முதல், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டு வருகிறது.
தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை – 234.
ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக ஜெயித்த தொகுதிகள் விவரம்:
ஆண்டு தொகுதிகள்
1977 130
1980 129
1984 132
1989 38
1991 164
1996 4
2001 132
2006 61
2011 150
2016 135
2021 66
ஈபிஎஸ் கையில் எதிர்காலம்
கடந்த மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்த போதே அதிமுக, தேனி தொகுதியில் மட்டுமே ஜெயித்தது.
இத்தனைக்கும் அந்தத் தேர்தலில் பாஜக, பாமக, தமாகா மற்றும் சில சிறிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்தன. அதிமுக ஆளுங்கட்சியாகவும் இருந்தது.
இதுபோன்ற பலங்கள் இப்போது அதிமுகவில் இல்லை.
மக்களவைத்க தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் , பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது.
பாமக உள்ளிட்ட எந்தக் கட்சியும் இன்றைய தேதியில் அதிமுக அணியில் இல்லை.
ஆனால் திமுக கூட்டணி பலம் பொருந்தியதாக உள்ளது.
கமலின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் திமுக அணியில் சேரும் வாய்ப்புகள் உள்ளன.
திமுக அணியில் இருந்து சில கட்சிகள், தங்கள் அணிக்கு வரும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக் கொண்டிருக்கிறார். அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் ஈபிஎஸ் சமரசம் செய்து கொண்டால், மக்களவைத் தேர்தலை அதிமுக தெம்போடு சந்திக்கலாம்.
இந்த மாற்றம் நிகழ்ந்தால், புதியக் கட்சிகளும் அதிமுகவை தேடி வருவார்கள்.
‘பாஜகவுக்கு கதவை மூடி விட்டோம். ஓபிஎஸ்சுக்கு ஜன்னலை சாத்தி விட்டோம்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து பிடிவாதம் காட்டினால், அதிமுகவுக்கே இழப்பு என்பதே யதார்த்தம்.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும்தங்கள் மூச்சென கட்டிக்காத்த அதிமுகவின் எதிர்காலம் இப்போது ஈபிஎஸ் கைகளில்தான் உள்ளது.
– பி.எம்.எம்.