கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி..!

ஒரு ரொமான்ஸ் படத்திற்கு என்ன தேவை? தினசரி வாழ்வில் நாம் பார்க்கும், கேள்விப்படும், எதிர்கொள்ளும் காதல்களைக் காவியமாகத் திரையில் காட்ட வேண்டும்.

குறைந்தபட்சமாக, ஒரு ‘ஹைக்கூ’ கவிதையைப் போல எளிமையும் அழகும் கொண்டதாகத் தெரிய வைக்க வேண்டும்.

அப்படிப்பட்ட காதல் படங்களே நம்முள் ‘எவர்க்ரீன்’ நினைவுகளை உருவாக்கியுள்ளன. ‘கல்யாணப் பரிசு’ தொடங்கி ‘லவ் டுடே’ வரை அதே கதைதான்.

மிக மெலிதான கதை. சில பாத்திரங்கள், அவற்றுக்கு இடையிலான முரண்கள், அதனால் நாயகன் நாயகி இடையிலான காதலில் பிரச்சனை. அதற்கான தீர்வு என்றே இக்கதைகள் இருக்கும்.

சில படங்களின் முடிவு சோகமாக இருக்கும்; ’சுபம்’ என்று சொல்லத்தக்க வகையில் சில முடிவுகள் அமையும்.

ப்ரியா.வி இயக்கிய ‘கண்ட நாள் முதல்’ திரைப்படம் அதில் இரண்டாவது வகை.

இன்று பார்த்தாலும் இனிக்கும் இப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகின்றன என்றால் நம்பக் கடினமாகத்தான் உள்ளது.

நூலிழை போன்ற கதை!

ஐந்தாறு வயதில் ஒரு சிறுவனும் சிறுமியும் ஒருவரோடு ஒருவர் சண்டையிடுகின்றனர். இருபதுகளில் இருக்கும்போதும், அவர்களுக்குள் மோதலே தொடர்கிறது.

ஐந்தாறு ஆண்டுகள் கழித்து, கல்யாணப் பருவத்தில் இருவரும் மீண்டும் சந்திக்கின்றனர்.

அப்போது, தன் நண்பனுக்குப் பெண் பார்க்கச் செல்லுமிடத்தில் அந்தப் பெண்ணை சந்திக்கிறார் அந்த ஆண். உடனே, அந்த பெண்ணின் இயல்புகளை நண்பனிடம் விவரிக்கிறார்.

அதனைக் கேட்டதும், ‘இந்தப் பெண்ணே எனக்கு பொருத்தமானவர்’ என்கிறார் நண்பர்.

சுதந்திரமாக, துணிவாக, எதையும் கேள்வி கேட்கும் பெண்ணே தனக்குத் தேவை என்கிறார். ‘என்னவோ செய்துவிட்டுப் போ’ என்று நாயகனும் கிளம்பிவிடுகிறார்.

இப்படிப்பட்ட காட்சிகளே அடுத்தடுத்து வந்தால் திரைக்கதை என்னாவது?

தனது இயல்புகளைத் தொலைத்துவிட்டு, எல்லாவற்றுக்கும் ‘நீங்களா எந்த முடிவு செஞ்சாலும் சரி’ என்றே சொல்கிறார் அந்தப் பெண்.

நம் நாயகனின் நண்பருக்கு, அது அபத்தமாகத் தெரிகிறது. ஒருகட்டத்தில், ‘உன்னோடு வாழ எனக்கு விருப்பமில்லை’ என்கிறார்.

அதனைக் கேட்டதும், அந்தப் பெண் அதிர்கிறார். ‘எல்லாவற்றுக்கும் நீயே காரணம்’ என்று நாயகனைக் குறை சொல்கிறார்.

வீடு திரும்பினால், அந்தப் பெண்ணின் தங்கை காதலருடன் ஓடிப் போனது தெரிய வருகிறது. அதனைத் தொடர்ந்து, நாயகியின் தாய்க்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இந்தச் சூழலில், நாயகிக்குத் துணையாக நிற்கிறார் நாயகன்.

இருவருக்குமான மோதல் எந்தப் புள்ளியில் காதலாக மாறியது, எப்போது அதனை இருவரும் வெளிப்படுத்தினர் என்பதே ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மீதி.

இந்தக் கதையில் நாயகி, நாயகன், அவரது நண்பர் என்று மூவரது குடும்பமும் திரையில் காட்டப்படும்.

அப்பாத்திரங்களைக் கொண்டே மொத்த திரைக்கதையும் சுவாரஸ்யமிக்கதாக மாற்றப்பட்டிருக்கும்.

நூலிழை போன்ற கதையை வைத்துக்கொண்டு, எந்த இடத்திலும் பார்வையாளர்கள் உடனான தொடர்பு அறுந்துவிடாமல் திரைக்கதையில் கவனத்தைக் கொட்டியிருப்பார் இயக்குனர்.

அதுவே இப்படத்தின் வெற்றி என்றும் சொல்லலாம்.

நெய்யப்பட்ட காட்சிகள்!

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் இது. திரையில் அது தென்படாமல் இருக்கும் வகையில் பெரும்பாலான காட்சிகளில் குளோஸ் அப் ஷாட்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும்.

அதற்கேற்ப லட்சுமி, ரேவதி, தேவதர்ஷினி, ரெஜினா கேசண்ட்ரா என்று நடிப்புக் கலைஞர்கள் தேர்வும் அபாரமானதாக இருந்தது.

இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் ரேவதியிடம், தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் முறிந்து போனதாகச் சொல்ல முயல்வார் லைலா.

அதனை முழுதாகக் கேட்பதற்கு முன்பே பதற்றமடைவார் ரேவதி. உடனே, இடையில் புகுந்து எதுவுமே நிகழவில்லை என்பதாகச் சமாளிப்பார் பிரசன்னா. இந்தப் படத்தின் சிறப்பான காட்சிகளில் ஒன்று அது.

தனது மேலதிகாரி தவறாக நடந்துகொள்வதாக லைலா சொல்ல, ‘அந்த நபருக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன்’ என்று பிரசன்னா அவரைத் தன்னுடன் அழைத்துச் செல்வார்.

பிரசன்னா திரும்பி வந்ததும், அவரிடம் லைலா கோபப்படுவார். தியேட்டரில் கைத்தட்டல்களை அள்ளிய காட்சி அது.

‘மருத்துவமனையில் இருந்து சென்றுவிடு’ என்று லைலா கத்தியதும் பிரசன்னா வீடு திரும்புவதாக, இடைவேளையையொட்டி ஒரு காட்சி உண்டு. அப்போது, வீட்டில் இருக்கும் சகோதரியும் தந்தையும் அவரிடம் கடிந்துகொள்வார்கள்.

‘நீதான் அந்த பெண்ணுக்குத் துணை நிற்க வேண்டும்’ என்று அறிவுறுத்துவார்கள். அப்போது அவர்கள் சொல்வதை பிரசன்னா கேட்க மாட்டார்.

சில நிமிட இடைவெளிக்குப் பிறகு அவர்கள் சொன்னதை அவர்களிடமே திரும்பச் சொல்லிவிட்டு, தான் லைலாவுக்கு உதவப் போவதாகச் சொல்வார்.

அவர்கள் ‘போக வேண்டாம்’ என்று சொல்கையில், ‘இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்களே’ என்று கோபப்பட்டுச் செல்வதாக அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த படத்தில் பிரசன்னா ஏற்ற பாத்திரம் எப்படிப்பட்டது என்பதை விளக்க அந்த ஒரு காட்சி போதும்.

கிளைமேக்ஸ் காட்சியில், தன் காதலை ஏற்க மறுக்கும் பிரசன்னாவை வழிக்குக் கொண்டுவர லைலாவும் அப்படியொரு உத்தியையே பயன்படுத்துவதாகக் காட்டப்பட்டிருக்கும்.

இப்படி இளையோரும் பெரியோர்களும் ரசிக்கத்தக்க வகையில் பல காட்சிகள் இதில் உண்டு.

இசையும் ஒளிப்பதிவும்..!

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கு மாபெரும் பலம் சேர்த்தது எனலாம். குறிப்பாக ‘மேற்கே மேற்கே’, ‘பனித்துளி பனித்துளி’ பாடல்கள் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், அதனை ஒவ்வொரு முறை காணும்போது மனதுக்குப் புதிதாய் தோன்றும் அளவுக்குச் சிறப்பாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கும்.

அந்த நேர்த்தியே, இது சிரத்தையுடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்பதை உணர்த்தும்.

டைட்டில் பின்னணியில் ஒலிக்கும் ‘கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி’ தொடங்கி ஒவ்வொரு பாடலும் நம்மைச் சட்டென்று ஈர்க்கும் தன்மை கொண்டவை.

அடுத்தடுத்து வந்த காரணத்தால் ‘கூக்கூவென’, ‘எரிமலை நானே’ பாடல்கள் இப்படத்தில் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை.

போலவே, கிளைமேக்ஸில் இடம்பெற்றிருந்த ‘காதலே காதலே எங்கு போகிறாய்’ பாடல் உணர்வெழுச்சியைத் தருவதாக இருக்கும்.

இன்றைய இளசுகள் ‘இன்ஸ்டாரீல்ஸ்’ அள்ளிவிட ஏற்றது அது. அதில், வாத்தியங்களின் இசைக்குப் பதிலாக தனது குரல் வழியே நம் மனதை இளக்கிவிடுவார் யுவன்.

நாயகனும் நாயகியும் ஒவ்வொரு காட்சியிலும் ‘காதல் கண்ணாமூச்சி’ ஆட, இதன் கிளைமேக்ஸ் எப்படியிருக்கும் என்ற ஆவல் நம்முள் மேலிடும்.

அதற்கேற்ப, ‘நீ சந்தோஷமா இருக்கணும், அதுதான் எனக்கு வேணும்’ என்று லைலாவிடம் ரேவதி சொல்வதாக ஒரு காட்சி உண்டு.

அக்காட்சியில் இடம்பெற்றிருக்கும் பின்னணி இசை, அடுத்து வருவது கிளைமேக்ஸ்தான் என்பதை நமக்குக் கட்டியம் கூறும். அது போன்ற முன்னுணர்த்துதலைத் தேர்ந்த இசையமைப்பாளரால் மட்டுமே நிகழ்த்த முடியும்.

‘ரீவைண்ட்’ நினைவுகள்!

இனி ‘ரொமான்ஸ்’ படங்கள் பெரிய வெற்றிகளைப் பெறாது என்று நினைத்த வேளையில் லவ் டுடே, டாடா, குட்நைட் போன்ற குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் பெரிய வெற்றிகளைப் பெறுகின்றன.

நாம் வாழும் உலகத்தில் மட்டுமல்ல, திரையுலகுக்கும் காதலே ஆதாரம் என்பதை நிரூபித்திருக்கின்றன.

காதலைக் கவித்துவமாகத் திரையில் சொல்லி, அதனை ‘பேண்டஸி’யாக காண்பிக்கும் படங்கள் அதிகம். உலகம் முழுக்க அவற்றைக் கொண்டாடத் தனி ரசிகர்கள் உண்டு.

மாறாக, யதார்த்த வாழ்வில் காதலர்களின் நிலையைச் சொல்லும் படங்களும் கூட ரசிகர்களால் கொண்டாடப்படுவதுண்டு. பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ போல, அதற்கும் பல உதாரணங்கள் உண்டு.

எது எப்படியாயினும், எத்தனை வயதென்றாலும், நம்மை நாமே ‘ரீசார்ஜ்’ செய்துகொள்ள உதவுவதில் காதல் திரைப்படங்களுக்குத் தனி இடம் உண்டு.

திரைப்பட வேட்கை கொண்டவர்களால் மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும்.

அறுபதைக் கடந்தவர்களுக்காக ஸ்ரீதரும் பாரதிராஜாவும் பல படங்களைத் தந்தது போல, நைண்டீஸ் கிட்ஸ்களுக்கு என்று சில படங்கள் உண்டு. அதிலொன்றாக ‘கண்ட நாள் முதல்’ நிச்சயம் இருக்கும்.

இப்படத்தைக் காணும் எவருக்கும், ‘கண்ணாமூச்சி ஏனடா’வுக்குப் பிறகு இயக்குனர் ப்ரியா.வி. என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வியும் நிச்சயம் எழும்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment