- கவியரசர் கண்ணதாசன்
ஒருமுறை நண்பரான நடிகர் விவேக், “திருவாரூர் தங்கராசுவை பேட்டி எடுத்தபோது, திருவாரூர் தங்கராசு என்னைப் பார்த்து “வைராக்கியம் வச்சவன் கெட்டுப்போனது இல்லைங்கிறதுக்கு, உன்னோட அப்பா ஒரு நல்ல உதாரணம்” என்றார்.
விவேக்கின் பேட்டிக்கு அது சம்பந்தம் இல்லாத ஒன்று என்பதால், அது பற்றி நான் மேலும் கேட்கவில்லை. விவேக் பேட்டி முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, நான் திருவாரூர் தங்கராசு வீட்டிற்கு சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
அப்போது அவரிடம், “அய்யா! அன்று நீங்கள் ‘வைராக்கியம் வச்சவன் கெட்டுப்போனது இல்லைங்கிறதுக்கு, உன்னோட அப்பா ஒரு நல்ல உதாரணம்’ என்று சொன்னீர்கள். அது என்னன்னு சொல்ல முடியுமா?” என்றேன்.
80 வயதை கடந்திருந்தாலும் ஒரு 20 வயது இளைஞனின் கம்பீரக்குரலுடன் அவர் பேசத்தொடங்கினார்.
“நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார், எனக்கு நல்ல நண்பர். அந்த காலத்தில நேஷனல் பிக்சர்ஸ் அலுவலகம் தி.நகர், பர்கிட் சாலையில் இருந்த ஒரு பங்களாவில இருந்திச்சு. அங்கதான் ‘பராசக்தி’ படத்தை ஆரம்பிச்சாங்க. அது பாவலர் பாலசுந்தரத்தோட நாடகம். அதை சினிமா படமா எடுக்க முடிவு செய்து, அந்த நாடகத்தை விலைக்கு வாங்கி, சினிமாவுக்கான மாற்றங்களை செஞ்சோம். ‘பராசக்தி’ படத்துக்கு நான்தான் வசனகர்த்தா.
ஒரு கட்டத்தில எனக்கு கோவம் வந்திடுச்சு. “இங்கிலீஷ் படத்துல வர காட்சியையும், வசனத்தையும் எழுத திருவாரூர் தங்கராசு எதுக்கு? வேற யாரை வேணும்னாலும் வச்சு எழுதிக்கோங்க”ன்னு சொல்லிட்டு வந்திட்டேன். அதுக்கு அப்புறம்தான் கருணாநிதியை வசனம் எழுத ஒப்பந்தம் செஞ்சாங்க.
பெருமாள் முதலியார், எனக்கு நல்ல நண்பர். எனக்கு பிரச்சினை இயக்குனரோடு தானே தவிர அவரோடு இல்லை. அதனால கருணாநிதி வசனம் எழுதினாலும், நான் அப்பப்ப அந்த ஆபீசுக்கு போய் பெருமாள் முதலியாரோட பேசிக்கிட்டு இருப்பேன்.
கருணாநிதி வரும்போது சில சமயம் உங்க அப்பாவும் கூட வருவாரு. அப்ப அவர் ஒரு சில பாடல்கள் எழுதி இருந்தாலும், அவர் அவ்வளவு பிரபலமாகாத நேரம். அப்பதான் அவர் எனக்கு பழக்கம் ஆனார்.
ஒரு நாள் நேஷனல் பிக்சர்ஸ் அலுவலகத்தில் பெருமாள் முதலியார், நான், கருணாநிதி, கிருஷ்ணன்-பஞ்சு, சிவாஜிகணேசன், கண்ணதாசன் எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தோம். படத்துக்கான பாடல் பதிவு பற்றி பேச்சு வந்தது.
பெருமாள் முதலியார் கிட்ட உங்கப்பா “இந்தப் படத்துக்கு நானும் பாட்டு எழுதவா?” என்று கேட்டார்.
“பாட்டு எழுதுறது அவ்வளவு சுலபம்னு நினைச்சீங்களா?” என்று பட்டென்று சொல்லிவிட்டார் பெருமாள் முதலியார்.
அப்புறம் அது பற்றி உன் அப்பா பேசவே இல்லை. பெருமாள் முதலியாரும் கடைசி வரைக்கும் பாட்டு எழுத வாய்ப்பு தரேன்னும் சொல்லலை, தரமாட்டேன்னும் சொல்லலை.
கருணாநிதி, அண்ணல் தங்கோ எல்லாரும் பாட்டு எழுதுனாங்க, உன் அப்பாவுக்கு வாய்ப்பே தரலை.
கடைசியில அந்தப் படத்தில அவர் நீதிபதியா நடிச்சாரு. அன்னைக்கு அவர் சொன்னது உங்கப்பாவுக்கு சுருக்குனு மனசுல தச்சிருக்கும்னு நினைக்கிறேன். தான் ஒரு பாடலாசிரியராக கடுமையா உழைச்சாரு.”
திருவாரூர் தங்கராசு கொஞ்சம் நிறுத்தி விட்டு, மீண்டும் சொல்லத் தொடங்கினார்.
“இதெல்லாம் நடந்து பல வருஷங்களுக்கு அப்புறம், 1972-ல் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் ‘தங்கதுரை’னு ஒரு படம் தயாரிச்சாரு. அந்தப் படத்துக்கு உங்கப்பா பாட்டு எழுத வராரு. ‘கவிஞர் வராரு, கவிஞர் வராரு’னு ஆபீசே பரபரப்பா இருக்கு.
உங்கப்பா வந்தாரு. உள்ள வந்ததும் பெருமாள் முதலியாரைப் பாத்து “தப்பா நினைச்சுகாதீங்க. ஊசி போட்டு இருக்கிறதால என்னால தரையிலயோ, சேர்லயோ உக்கார முடியாது. ஒரு மெத்தை போட சொல்லுங்க” அப்படின்னு சொன்னாரு.
உடனே எங்க இருந்தோ ஒரு மெத்தையை கொண்டுவர சொல்லி, அதைப் போட்டு ஒரு திண்டையும் போட்டாங்க.
உங்கப்பா அதுல சாய்ஞ்சு படுத்துக்கிட்டே பாட்டை சொல்லுறாரு. பக்கத்தில விஸ்வநாதன் மியூசிக் போடுறாரு.
பெருமாள் முதலியார், நான், காசிலிங்கம் எல்லாரும் தரையில உக்காந்து பாத்துகிட்டு இருக்கோம். உங்கப்பா பாட்டு வரிகளை சொல்றாரு.
“காலமகள் பாதையிலே போடா கண்ணே போ- அங்கு
காத்திருக்கும் வெற்றி உண்டு போடா கண்ணே போ
நீலக்கடல் அலைகளைப் போல் போடா கண்ணே போ-
என் நெஞ்சும் உன்னைத் தொடர்ந்துவரும் போடா கண்ணே போ.”
எந்த தயாரிப்பாளர் ‘பாட்டு எழுதுறது அவ்வளவு சுலபம்னு நினைச்சீங்களா’ன்னு கேட்டாரோ, அதே தயாரிப்பாளர் இவருக்காக காத்து இருந்ததும், இவர் மெத்தையில சாஞ்சுகிட்டே பாடல் எழுதுனதும், ‘வைராக்கியம் வச்சவன் கெட்டுப்போனது இல்லை’ன்னு அன்னைக்குத்தான் எனக்கு புரிஞ்சது. இதைத் தான் நான் எல்லாருக்கும் சொல்லுறேன்.” என்று திருவாரூர் தங்கராசு என்னிடம் சொன்னார்.
– திரு அண்ணாதுரை கண்ணதாசன், தினத்தந்தி நாளிதழில்.