‘ஆர்டிஎக்ஸ் 100’ என்ற தெலுங்குப் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் அஜய் பூபதி. இந்தி சீரியல்கள், பஞ்சாபி மொழித் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த பாயல் ராஜ்புத், அதில் நாயகியாக நடித்தார்.
அதன்பிறகு, தெலுங்கு திரையுலகில் பல படங்களில் இடம்பிடித்தாலும் பெரிய கவன ஈர்ப்பை உருவாக்கவில்லை.
இந்தச் சூழலில், ‘செவ்வாய்கிழமை’ படத்தில் மீண்டும் அஜய் பூபதியோடு இணைந்திருக்கிறார் பாயல் ராஜ்புத்.
அது மட்டுமே அப்படத்தின் யுஎஸ்பியாகவும் இருந்தது. ஆனால், அதன் டீசரும் ட்ரெய்லரும் ‘இது வழக்கமானதாக அல்ல’ என்பதை நிரூபித்தது.
அதில் இடம்பெற்ற சில ஷாட்கள் பல அந்தரங்கக் காட்சிகள் படத்தில் உண்டு என்று எண்ண வைத்தது. அதுவே, இந்த படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்ற கேள்வியையும் உண்டுபண்ணியது.
சரி, ரசிகர்களின் கேள்விகளையும் சந்தேகங்களையும் மீறி இப்படம் எப்படிப்பட்ட காட்சியனுபவத்தை நமக்குத் தருகிறது?
அடுத்தடுத்து கொலைகள்!
அந்தச் சிறுவன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். அந்தச் சிறுமியோ தாயை இழந்து பாட்டியுடன் வசிக்கிறார்.
ஒருநாள் அந்தச் சிறுவனின் குடிசை தீப்பற்றி எரிகிறது. தந்தையும் மகனும் இறந்துவிட்டதாக ஊர் மக்கள் சொல்கின்றனர்.
பத்தாண்டுகள் கழித்து, பதின்ம வயதுக்கே உரிய குணாதிசயங்களோடு காண்பவரின் கண்களை ஈர்க்கும் காந்தமாக வளர்ந்து நிற்கிறார் ஷைலஜா (பாயல் ராஜ்புத்).
தனது கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர் மதன் (அஜ்மல் அமீர்) மீது ஈர்ப்பு கொள்கிறார். இருவரும் நெருக்கம் கொள்கின்றனர். காதலர்கள் போல ஊர் சுற்றுகின்றனர்.
ஒருகட்டத்தில் ஷைலஜாவைக் கைவிட்டு வேறொரு பெண்ணைக் கரம் பிடிக்கிறார் மதன். அது மட்டுமல்லாமல், மூன்றாண்டுகளாக அப்பெண்ணைக் காதலித்து வந்ததாகவும் தன் சகாக்களிடம் சொல்கிறார்.
அது, ஷைலஜாவை நிலைகுலையச் செய்கிறது. அந்த நேரத்தில், அவரது பாட்டியும் இறந்து விடுகிறார்.
என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் ஷைலஜாவை ஊராரின் கண்கள் கழுகாய்ச் சூழ்கின்றன. அதன்பிறகு, அவரை நடத்தை கெட்டவராகக் கருதத் தொடங்குகிறது அந்த ஊர்.
ஒருநாள் ஊரை விட்டு துரத்தப்படும் ஷைலஜா, ஒரு கிணற்றில் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறார். அதன்பிறகு, ஊர் மக்களும் அதனை மறந்துவிடுகின்றனர்.
சில தினங்கள் கழித்து, அந்த கிராமத்தில் ஒரு செவ்வாய்கிழமையன்று இரண்டு பேர் விஷம் குடித்து இறந்து கிடக்கின்றனர். ஆனால், அவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக ஊர் பொதுச்சுவரில் எழுதப்பட்டிருக்கிறது.
அந்த ஊருக்குப் புதிதாக வந்த சப் இன்ஸ்பெக்டர் மாயா (நந்திதா ஸ்வேதா) அது கொலை என்கிறார். அதனால், பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார்.
ஆனால், ஊர்க்காரர்களும் அங்கிருக்கும் ஜமீன்தார் குடும்ப வாரிசும் (சைதன்யா) அதனை ஏற்கத் தயாராக இல்லை.
அந்த ஊரில் மருத்துவம் பார்த்துவரும் ஒரு டாக்டர் இறந்து போன ஷைலஜாவின் ஆவியைத் தான் பார்த்ததாகச் சொல்கிறார்.
அதேநேரத்தில், நள்ளிரவில் தீச்சட்டி ஏந்திய பெண் உருவமொன்று அந்த ஊருக்குள் நடமாடுகிறது. ஷைலஜா ஆசையாய் வளர்த்த நாயும் அந்த ஊரை வலம் வருகிறது.
இந்த நிலையில், அதற்கடுத்த செவ்வாய்கிழமையன்றும் இரண்டு பேர் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கு இடையிலும் கள்ளத்தொடர்பு இருந்ததாக ஒரு வீட்டுச் சுவரில் எழுதப்பட்டிருப்பதை மக்கள் பார்க்கின்றனர்.
அப்போது, நடந்தவை கொலைகள் தான் என்று உறுதியாக நம்புகிறார் மாயா. சுவரில் எழுதி வைத்துவிட்டு சம்பந்தப்பட்டவர்களைக் கொலை செய்வது யார் என்று கண்டறியத் துடிக்கிறார்.
அதற்கடுத்த திங்கள் கிழமை இரவு வேளையில், ஊர் மக்களும் அந்த நபரைத் தேடித் தீவிரமாக அலைகின்றனர்.
அப்போது, அந்த ஊரில் நிகழும் மரணங்களுக்குப் பின்னிருப்பது ஆவியா, மனிதரா என்பது தெரிய வருகிறது.
அடுத்தடுத்து நான்கு கொலைகளைக் காட்டினாலும், திரைக்கதையில் இரண்டு செவ்வாய்கிழமைகளே காட்டப்படுகின்றன என்பது மிகப்பெரிய முரண்.
இயக்குனரின் ‘கம்பேக்’!
‘ஆர்டிஎக்ஸ் 100’ படத்தில் காமத்திற்காக ஒரு ஆடவனைப் பயன்படுத்திக் கொள்ளும் பாத்திரத்தில் நடித்திருந்தார் பாயல் ராஜ்புத்.
வில்லத்தனமான அந்த பாத்திரத்தை ஏற்கப் பிற நாயகிகள் நிச்சயம் யோசித்திருப்பார்கள். இதிலும் அப்படியொரு வேடத்தில் அவர் அசத்தலாகத் தோன்றியுள்ளார்.
நந்திதா, அஜ்மல், சைதன்யா, ரவீந்திரா விஜய், திவ்யா பிள்ளை, சைதன்யா, ஸ்ரவன் ரெட்டி உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
’விசாரணை’யில் வில்லனாக மிரட்டிய அஜய் கோஷ், இதில் காமெடி வேடத்தில் தோன்றியுள்ளார். அவருடன் திரிபவராக, கண் பார்வை குறைபாடு உடையவராகத் தோன்றியிருப்பவரும் சிறப்பாக நடித்துள்ளார்.
இவர்கள் தவிர்த்து ஊர்க்காரர்கள் என்று சுமார் ஒன்றரை டஜன் பேருக்கு திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னணி இசை தந்திருக்கும் அஜனீஷ் லோக்நாத், திரையில் ஒரு இசைக் கொண்டாட்டத்தையே நிகழ்த்தியுள்ளார். ’காந்தாரா’வின் இசையமைப்பாளர் இவரே என்று மக்களிடம் நினைவுபடுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் அஜய் பூபதி.
பாயல் ராஜ்புத் தன் கைகளில் ரப்பர் பேண்டால் அடித்துக் கொள்ளும் காட்சி முதல் விருந்தொன்றில் ஊர் மக்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வது வரை, அனைத்துக்கும் ‘நேர்மறையான’ இசையைத் தந்து வேறொரு உணர்வை நமக்குள் ஊட்டுகிறார் அஜனீஷ்.
காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் பாடல்களும் கூட, மெலடி மெட்டுகளாக அமைந்து நம்மை வருடுகின்றன.
ஒளிப்பதிவாளர் தாசரதி சிவேந்திரா ‘மாண்டேஜ்’ ஷாட்களில் கலக்கியிருக்கிறார். அவரது உழைப்பே, இதனை ‘பான் இந்தியா’ படமாக மாற்றியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் மாதவ் குமார் குல்லபள்ளி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ரகு குல்கர்னி, கலை இயக்குனர் மோகன் தல்லூரி, ஒலி வடிவமைப்பாளர் எம்.ஆர்.ராஜகிருஷ்ணன் மற்றும் சண்டைப்பயிற்சியாளர், ஒப்பனையாளர், ஆடை வடிவமைப்பாளர் என்று ஒவ்வொருவரும் இயக்குனரின் கற்பனையோடு கரம் கோர்த்துச் செயல்பட்டிருக்கின்றனர்.
இயக்குனர் அஜய் பூபதிக்கு இது மூன்றாவது படம். முந்தைய படமான ‘மகாசமுத்திரம்’ வந்த சுவடு தெரியாமல் போன நிலையில், தன்னை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாகவே இதனைப் பயன்படுத்தியிருக்கிறார்.
நிச்சயமாக, இது அவருக்கு ‘மைலேஜை’ தரும். அந்த வகையில், அவரது ‘கம்பேக்’ என்று கூட இப்படத்தைக் குறிப்பிடலாம்.
பாயல் ராஜ்புத்தின் தைரியம்!
இந்த படத்தில் ஷைலஜா எனும் பாத்திரத்தில் பாயல் ராஜ்புத் நடித்திருக்கிறார். நிச்சயமாக, அதற்குத் தனி தைரியம் வேண்டும்.
ஏனென்றால், அது ‘நிம்போமேனியாக்’ குறைபாடு உடையதாகத் திரையில் வெளிப்பட்டிருக்கிறது. அதாகப்பட்டது, கட்டுக்கடங்காத காமத்தைச் சுமக்கும் ஒரு பெண்ணைக் காட்டியிருக்கிறது.
வழக்கமாக, இது போன்ற பாத்திரங்களை வில்லத்தனமாகச் சித்தரிப்பதுதான் திரையுலகின் வழக்கம். ஆனால், இதில் அப்பெண்ணின் மனப் போராட்டங்களைப் பேசியிருக்கிறார் இயக்குனர் அஜய் பூபதி.
அந்த வகையில், ‘ஆர்டிஎக்ஸ் 100’ படத்தில் பாயல் ஏற்ற பாத்திரத்தின் இன்னொரு வெர்ஷனாக கூட இதில் வரும் ஷைலஜாவைக் கருத முடியும்.
காமத்தை தீ ஜுவாலையோடு ஒப்பிடுவதே படைப்பாளிகளின் வழக்கம். ஆனால், அஜய் பூபதியோ ஷைலஜா எனும் பெண்ணின் காமப்பெருக்கை பட்டாம்பூச்சியின் சிறகசைப்புகளாகத் திரையில் காட்டுகிறார்.
மிகத்தந்திரமாக, இக்கதையை வெறுமனே ‘ட்ராமா’வாக வடிக்காமல், ‘காந்தாரா’ பாணியில் ஒரு ‘டிவைன் மிஸ்டரி’யாகவும் மாற்றியிருக்கிறார். திரைக்கதையில் அந்த இடமே, பார்வையாளர்களுக்கு ‘ஹாரர்’ படம் பார்க்கும் உணர்வையும் ஏற்படுத்துகிறது.
படத்தின் போஸ்டர் வடிவமைப்பு, ட்ரெய்லரில் இடம்பெற்ற இசை உட்படச் சில விஷயங்கள், இதனைக் காந்தாரா உடன் ஒப்பிட வகை செய்கின்றன.
அதனை வேண்டுமென்றே நிகழ்த்தி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் அஜய் பூபதி. அவரது உத்திக்கு நன்றாகவே பலன் கிடைத்துள்ளது.
அதேநேரத்தில், ‘செவ்வாய்கிழமை’ ஒரு ‘ஏ’ சான்றிதழ் படம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதனால், குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாது.
இந்தக் கதையில் லாஜிக் மீறல்கள் ஏராளம் உண்டு. ஆனால், தியேட்டருக்குள் அமர்ந்திருக்கும்போது அவை கொஞ்சம் கூட நம் மூளையை ஆட்டுவிப்பதில்லை.
அந்த வகையில், ‘நம்பி தியேட்டருக்கு வரலாம்’ என்கிற மாதிரியான ஒரு படைப்பாக விளங்குகிறது ‘செவ்வாய்கிழமை’.
– உதய் பாடகலிங்கம்