தலை தாழ்ந்து வணங்குகிறேன்!

அருமைத் தலைவர், அன்புத் தோழர் என். சங்கரய்யா. இடதுசாரி இயக்கத்தின் அனைத்துப் பிரிவுத் தோழர்களாலும் முழுமையாக நேசிக்கப்பட்ட ஒப்பற்ற தலைவர். தேர்ந்த தெளிந்த வழிகாட்டி. உரத்த சிந்தனை, உரத்த குரல்.

அவருடன், அவருக்காகப் பணியாற்றும் நல்வாய்ப்பை காலம் எனக்குத் தந்தது. 1980 ஆம் ஆண்டு மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை, வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே வந்து அறிவித்த பேறு எனக்கு வாய்த்தது.

ஒரு சிறு புத்தகமாக எழுதும் அளவுக்கு அவருடனான நினைவுகள் எனக்குண்டு. அவர் ஒரு காப்பியம். அவர் தனிப்பட்ட முறையில் எனக்குத் தந்த சில ஆலோசனைகளும் அறிவுரைகளும் இன்றுவரை எனக்கு வழித் துணையாக நிற்கின்றன. இனியும் இறுதிவரை இருக்கும்.

மனதுக்கு நெருக்கமானவர்கள் காலமானால், இயன்ற அளவு அஞ்சலி செலுத்தத் தவறியதில்லை.

ஆனால், உங்களை மட்டும் உயிரற்ற உடலாகப் பார்க்க மனம் ஒப்பவில்லை தோழர் என்.எஸ்.

உங்கள் குரலை எனக்குள் கேட்டுக் கொண்டே இந்த அஞ்சலிக் குறிப்பை எழுதுகிறேன். நூறாண்டு கடந்து வாழ்ந்த போதும் நினைவாற்றலுடன் வாழ்ந்த சிறப்பு உங்களுக்கு இருந்தது.

அதே போல் நீங்களும் எங்கள் நினைவில் என்றும் நிலைத்திருப்பீர்கள்.
தலை தாழ்ந்து பணிந்து வணங்குகிறேன் தோழரே…
எங்கள் சிங்கமே… தங்கமே போய் வாருங்கள்.

– பாரதி கிருஷ்ணகுமார்

Comments (0)
Add Comment