இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம் முதல் நாம் வாழும் சமூகம் வரை, இந்த பரந்த உலகிலுள்ள ஒவ்வொரு அமைப்பும் சுமூகமாக இயங்க சகிப்புத்தன்மை என்பது ரொம்பவே முக்கியம்.
அதுவே, வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைத் தாங்கிப் பிடிக்க வகை செய்கிறது.
அமைப்பு ரீதியான விவாதங்களில் ‘ஒருமித்த கருத்து’ என்றொரு வார்த்தை பயன்படுத்தப்படுகிறதே, அதன் பின்னணியில் ‘சகிப்புத்தன்மை’ பெரும்பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட சகிப்புத்தன்மையை இன்று நாம் எந்தளவுக்கு உயிர்ப்போடு வைத்திருக்கிறோம்?
சகாவும் சகியும்..!
ஒரு குடும்பத்தில் ஆண் ‘சகா’ ஆகவும், பெண் ‘சகி’ ஆகவும் விளங்க வேண்டியது கட்டாயம். அதன்பின் வாழ்வு ‘ஆஹா’ என்றமையும். காரணம், தோழமை உணர்வுடன் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் மட்டுமே இல்லறம் சிறக்கும்.
இந்த இடத்தில் சகித்தல் என்பதற்குப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது மட்டுமே அர்த்தம் ஆகாது. அதையும் தாண்டி உற்ற துணையாக இருத்தல், எக்காலகட்டத்திலும் உடன் நிற்றல், வேறுபாடுகளைத் தாண்டி உதவிகரமாகச் செயல்படுதல் என்று பலவிதமாகப் பொருள் கொள்ளலாம்.
மாறாக, ‘எவ்வளவு காலம் தான் சகிச்சுகிட்டு வாழுறது’ என்பதே இன்று சில தம்பதிகளின் புலம்பல்களாக இருக்கிறது.
காரணம், சகிப்பது என்பதே வேறு வழியின்றி ஏற்றுக்கொள்வது என்றாகிவிட்டது. அது மனதுக்கு ஒவ்வாத காரியமாக அமையும்போது கஷ்டங்களையும் காயங்களையும் விட்டுச் செல்கிறது.
கணவன் மனைவி தாண்டி மகன், மகள், அவர்களது வாழ்க்கைத் துணைகள், பேரன், பேத்திகள், இதர சொந்தங்கள் என்று எல்லா உறவுகளிலும் ‘சகித்தல்’ என்பது இப்படித்தான் உள்வாங்கப்படுகிறது.
அது ஒருபுறம் வெண்ணெயையும் இன்னொரு புறம் சுண்ணாம்பையும் நிறைக்கிறது.
சகித்தல் என்பது வேறுபாடுகளைக் கடந்து இன்முகத்துடன் இணக்கம் காட்டுவது தான். ஒருமைப்பாட்டின் அடிப்படை அம்சம் அது.
மிகச்சில மனிதர்களைக் கொண்ட குடும்ப அமைப்பிலேயே அது சரிவரப் புரிந்துகொள்ளப்படவில்லை எனும்போது, பெருங்கூட்டத்தைக் கொண்டிருக்கிற சமூகத்தில் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை.
இயல்பினைப் போற்றுதல்!
பிடிக்காத அல்லது ஒவ்வாத எந்தவொரு செயலையும் மனிதரையும் எதிர்கொள்ள நேரிடும்போது, வேறு வழியின்றி நமது இயல்பை மறைக்க வேண்டியிருக்கும்.
அந்த நேரத்தில், உள்ளொன்று வைத்து புறமொன்றாகத் தோன்றுவதை விட, எதிரே இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வது சிறந்த வழியாக அமையும்.
கிட்டத்தட்ட ‘எதிரியையும் நேசிப்பது’ என்று கூட, அதற்கு அர்த்தம் கொள்ளலாம்.
மனதுக்குள் வெறுப்பு கனன்று கொண்டிருக்கும்போது, வெளியே புன்னகைப்பது நிச்சயம் ‘சகித்தலில்’ சேராது. ஏனென்றால், அது வன்மத்தின் இன்னொரு வடிவம்.
சகித்தல் என்பது அதனதன் இயல்புகளோடு அப்படியே ஏற்றுக்கொள்வது. ஒருபடி மேலே சென்று, அதனைப் போற்றுவது என்றும் கூடச் சொல்லலாம்.
எதிரெதிர் குணாதிசயங்கள் கொண்ட நண்பர்கள் அல்லது தோழிகளிடத்தில், தம்பதிகளிடத்தில், அலுவலக சகாக்கள் மத்தியில் அதனைக் காண முடியும்.
‘எனக்குப் பிடிக்காதபோதும் உனக்காக ஏற்கிறேன்’ என்ற எண்ணம் அவர்களிடத்தில் காணக் கிடைக்கும். அப்படிப்பட்ட சகித்தலே இந்த சமூகத்தைக் கடைத்தேற்றும்.
சகிப்புத்தன்மையைக் கொண்டாடுவோம்!
சாதி, மதம், இனம், மொழி என்று பல வேறுபாடுகளை மூளையில் ஏற்றிக்கொண்டு வெறுப்பையும் வன்மத்தையும் ஏந்திக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம். நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கும் இந்த நிலையே பாவியிருக்கிறது.
குண்டெறியும் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளைப் போல அவற்றை விசிறியடித்தாலும், வேறு திசையிலிருந்து அவை வந்து குவிந்து விடுகின்றன.
இன்று உலகமெங்கும் போர்ச்சூழல் விஸ்வரூபம் எடுத்து நிற்பதற்கும், சகிப்புத் தன்மை அற்று இருப்பதே முக்கியக் காரணம்.
வெகுகாலமாக மெல்ல அருகிவந்த அதன் இருப்பை, சுயநலத்தை முன்னிறுத்தும் நுகர்வுக் கலாசாரம் நம்மிடம் இருந்து சுரண்டியெடுத்து வருகிறது.
அதனால், தோழமையுடன் கை குலுக்கவரும் எவரையும் சந்தேகக் கண் கொண்டு நோக்குவதும், ‘கன்’ பார்வையால் துளைத்தெடுப்பதும் சகஜமாகிவிட்டது.
இந்த நிலையில், சகிப்புத்தன்மையை சகஜமாக மாற்ற நிறையவே போராட வேண்டும்.
உலகில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது குறித்து கவலை கொண்ட யுனெஸ்கோ நிறுவனம், 1995ஆம் ஆண்டு முதன்முறையாக ‘சர்வதேச சகிப்புத் தன்மைக்கான தினம்’ கொண்டாட வேண்டுமென்ற முடிவை அறிவித்தது.
அதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ஆம் தேதியன்று சர்வதேச சகிப்புத் தன்மை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் உக்ரைன் – ரஷ்யா மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் பாலஸ்தீனிய அமைப்பு மோதல் உட்பட உலகின் பல்வேறு மூலைகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சண்டை சச்சரவுகள் அது முழுமையாக இப்பூமியில் அனுசரிக்கப்படவில்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
மனிதர்கள் சுகமாக வாழ, இந்த பூமியில் அமைதி ரொம்பவே அவசியம். என்னதான் ‘அட்ரினலின்’ அதிகமாகச் சுரந்தாலும், பரபரப்புகளின் அடிப்பாகத்தில் கொஞ்சமாவது அமைதி வேண்டும்.
இல்லாவிட்டால், பிரேக் இல்லா வாகனம் மலைப்பாதையில் இயங்குவது போன்று வாழ்க்கைப் பயணம் மாறிவிடும். அப்படிப்பட்ட சூழலை எதிர்கொள்ளாமல் இருக்கவும் அமைதியை நிரந்தரமாகக் கைக்கொள்ளவும் சகிப்புத்தன்மை நிச்சயம் தேவை.
அதனை நம் வாழ்வில் செயல்படுத்த, குறைந்தபட்சமாகப் பிறரைச் சகிப்பது போல நடிக்கவாவது வேண்டும். அவர்களது தனிப்பட்ட பழக்கவழக்கங்களை, செயல்பாடுகளை, கலாசாரத்தை ஏற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அந்த செயல்முறை தொடர்கதையாகும்போது, மெல்ல மெல்லச் சகிப்பதற்கான பக்குவம் தானாகவே வந்து சேரும்.
நமக்கு அருகில் இருக்கும் மனிதர்களிடத்தில் அதனைச் செயற்படுத்துவது, ஒருகட்டத்தில் நாம் வாழும் பகுதி, மாவட்டம், மாநிலம், நாடு என்று விரிவடையும்.
புத்தரும் மகாவீரரும் இன்னபிற நம் முன்னோர்களும் அதைத்தான் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கின்றனர்.
‘அப்படியெல்லாம் இருந்தா நமக்கும் சாமிக்கும் வித்தியாசம் இருக்காதே’ என்று சொல்லி, சிலர் இதற்கு முட்டுக்கட்டை இடலாம். அப்படிப்பட்டவர்களால் தான் மனிதனின் அடிப்படைக் குணமான சகிப்புத்தன்மை கண்காட்சியில் பாதுகாக்கப்படும் நிலையை எட்டியிருக்கிறது.
ஆதலால், முடிந்தவரை அப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி நிற்கப் பழகுவது நல்லது; சகிப்புத்தன்மையின் உண்மையான அர்த்தம் அறிந்து அவர்களை அவர்களது இயல்புகளோடு ஏற்றுகொள்வது இன்னும் நல்லது!
– உதய் பாடகலிங்கம்