டைகர் 3 – ஆக்‌ஷனில் அசத்தும் உளவாளி!

சில படங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற அனுமானத்துடன் திரையரங்கினுள் நுழைவோம். அதில் நூலிழை அளவுக்குக் கூட பிசிறில்லாதவாறு திரையில் ஓடும் படமும் இருக்கும். ஆனாலும், அந்த நிமிடங்கள் நம்மை மெய்மறக்கச் செய்வதாக அமையும்.

பெரும்பாலான கமர்ஷியல் படங்கள் இந்த வகையறாவில் சேர்ந்துவிடும். அந்த எண்ணிக்கையில் மேலும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது சல்மான்கான், கேத்ரினா கைஃப், இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்டோர் நடித்த ‘டைகர் 3’.

தீபாவளி வெளியீடாக வந்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹை படத்தின் மூன்றாம் பாகமாக இது அமைந்துள்ளது.

இதில் ‘பதான்’ பாத்திரத்தில் ஒரு காட்சிக்கு ஷாரூக்கானும் ‘கௌரவமாக’ தலைகாட்டியிருக்கிறார்.

சந்தேகப்படும் கணவன்!

ரா அமைப்பின் நம்பிக்கைக்குரிய உளவாளியாகத் திகழ்பவர் அவினாஷ் ‘டைகர்’ ரத்தோர் (சல்மான்கான்).

பாகிஸ்தானில் பிடிபட்ட தனது வழிகாட்டி கோபியை (ரன்வீர் ஷோரி) மீட்கும் ஆபரேஷனில் அவர் ஈடுபடுகிறார்.

டைகரால் பத்திரமாக கோபி மீட்கப்பட்டாலும், பாதி வழியிலேயே அவர் இறந்து போகிறார்.

மரணத்திற்கு முன்னால், நம்மோடு ஒரு ‘டபுள் ஏஜெண்ட்’ இருக்கிறார் என்றும், அவரது பெயர் ‘ஸோயா’ என்றும் சொல்லிச் செல்கிறார். அந்த ஸோயா வேறு யாருமல்ல, டைகரின் மனைவி.

ஒருகாலத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயில் பணியாற்றிய ஸோயா, தற்போது டைகர், மகனுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.

கோபியின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்ற குழம்பும் டைகர், மனைவியின் மீது சந்தேகப் பார்வையை வீசுகிறார்.

அந்த நேரத்தில், ரஷ்யாவில் இருக்கும் ஒரு ஆயுத வியாபாரியைக் காப்பாற்றும் வேலை அவர் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

அவரைக் காப்பாற்றச் செல்லும்போது, ஒரு பெண் தடையாக வந்து நிற்கிறார். அது ‘ஸோயா’ என்று அறியும்போது டைகர் அதிர்ச்சியில் உறைகிறார்.

எதிரே நிற்பது கணவன் தான் என்று அறிந்து ஸோயா சுதாரிப்பதற்குள், டைகரை ஒரு கும்பல் தாக்குகிறது. அவர் கண் விழித்துப் பார்க்கையில், ஸோயாவும் மகனும் ஆதிஷ் ரஹ்மான் (இம்ரான் ஹாஷ்மி) வசமிருப்பது தெரிகிறது.

ஆதிஷோடு ஏற்கனவே டைகருக்கு ‘கொடுக்கல் வாங்கல்’ கணக்கொன்று உண்டு. அதனால், தனது குடும்பத்தை எதுவும் செய்ய வேண்டாம் என்று அவரிடம் கெஞ்சுகிறார். அதற்குப் பதிலாக, ‘சீன ராணுவ அதிகாரியிடம் இருந்து ஒரு சூட்கேஸை பறிக்க வேண்டும்’ என்கிறார் ஆதிஷ்.

தனது ‘ரா’ நண்பர்கள் உதவியோடு அந்த காரியத்தை டைகர் செய்து முடிக்கையில், அந்த சூட்கேஸ் ஆதிஷ் கைவசம் செல்கிறது.

அதேநேரத்தில், பாகிஸ்தானுக்குச் சொந்தமான ஒரு தகவலை அவர் திருடியதாகச் சொல்லி அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அவரைக் கைது செய்கின்றனர். அதற்கு ஆதிஷ் ரஹ்மானே துணையாக இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, டைகர் சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கு மரண தண்டனை வழங்கவும் ஏற்பாடாகிறது. அந்தச் சூழலில் பாகிஸ்தான் பிரதமரைக் கொல்லத் திட்டமிடுகிறார் ஆதிஷ்.

அதன்பிறகு என்னவானது? பாகிஸ்தான் பிடியில் இருந்து டைகர் தப்பினாரா? அந்நாட்டு பிரதமரைக் காப்பாற்றினாரா? தான் தவறு செய்யவில்லை என்பதை இந்த உலகுக்கு நிரூபித்தாரா என்று சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.

‘பேமிலிமேன்’ சல்மான்!

இந்தப் படத்தில் ஒரு உளவாளியாக ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருப்பதோடு, ‘பேமிலிமேன்’ ஆகவும் தோன்றியிருக்கிறார் சல்மான் கான். அவரது தீவிர ரசிகர்களுக்கு, இந்த மாற்றம் நிச்சயம் பிடிக்கும்.

அம்மா வேடத்தில் நடித்தாலும், கேத்ரினா கைஃப் திரையில் கவர்ச்சியாகத்தான் தோன்ற வேண்டுமென்பதில் உறுதி காட்டியிருக்கிறார் இயக்குனர் மனீஷ் சர்மா.

அதற்கேற்ப, முகத்தில் தென்படும் சுருக்கங்களைப் பொருட்படுத்தாமல் உறுதியான உடல்வாகுடன் அவரும் அந்த சவாலைத் திறம்படச் சமாளித்திருக்கிறார்.

வில்லனாக நடித்துள்ள இம்ரான் ஹாஷ்மி, இனி தொடர்ந்து இந்திப் படங்களில் கோட் சூட் அணிந்து வில்லத்தனம் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். இந்த படத்தில் அவரது பாத்திரம் அளந்து வைத்தாற் போன்று இடம்பெற்றுள்ளது.

ரா அமைப்பின் தலைவராக ரேவதியும், பாகிஸ்தான் பிரதமராக சிம்ரனும் இதில் நடித்துள்ளனர். தமிழ் பதிப்பில் ரேவதியே தன் பாத்திரத்திற்கு ‘டப்பிங்’ பேசியிருக்கிறார்.

இவர்கள் தவிர்த்து ரித்தி டோக்ரா, குமுத் மிஷ்ரா, ரன்வீர் ஷோரி, ஆனந்த் விதாத் சர்மா உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

ஆதித்ய சோப்ரா இப்படத்தின் கதையை எழுதித் தயாரித்திருக்கிறார். அதற்குத் திரைக்கதை அமைத்திருக்கிறார் ஸ்ரீதர் ராகவன்.

ஹோட்டல் பாத்ரூமில் கேத்ரினா கைஃப் ஒரு பெண் ராணுவ தளபதியுடன் சண்டையிடும் காட்சி, சிறையில் இருந்து சல்மான் தப்பிக்கும் காட்சி போன்றவை காதில் பூக்கடையையே சுமக்க வைக்கும் ரகம் என்றபோதும், ‘கமர்ஷியல் படத்துல இதெல்லாம் சகஜமப்பா’ என்று சொல்ல வைக்கிறது திரைக்கதை போக்கு.

போலவே, ஷாரூக்கான் சல்மான் கானுடன் தோன்றும் காட்சியை ‘ஷோலே’ படத்தை நினைவூட்டும் வகையில் அமைத்தது சிறப்பு. அதுவே நமக்கு சிரிப்பையும் வரவழைக்கிறது.

அனய் கோஸ்வாமியின் ஒளிப்பதிவில் வெளிநாட்டு லொகேஷன்கள் அழகாகத் தெரிகின்றன. தொடக்க சண்டைக்காட்சியில், விஎஃப்எக்ஸை மனதில் கொண்டு ‘க்ரீன்மேட்’ பின்னணியில் அபாரமான ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார்.

முன்பாதி விறுவிறுப்பாக அமைந்திருக்க, பின்பாதியில் அது தேவையில்லை என்று காட்சிகளின் நீளத்தைக் கூட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமேஷ்வர் எஸ்.பகத்.

பார்வையாளர்களுக்கு அது புலம்பலைத் தந்தாலும், ‘ஏதோ ஒன்று மிஸ் ஆகுதே’ என்ற உணர்வு எழாமல் பார்த்துக் கொள்கிறது.

பின்னணி இசை தந்திருக்கும் தனுஷ் டிகு, இதில் அபரிமிதமான உழைப்பைக் கொட்டியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் பரபரப்பை அதிகப்படுத்துவதில் அவரது பங்கு அதிகம்.

இரண்டு பாடல்களைத் தந்திருக்கும் ப்ரீதம், வழக்கம்போல துள்ளலாட்டத்தை விதைக்கிறார்.

திரையில் செட்கள் பிரமாண்டமாகத் தெரிய வேண்டும் என்பதிலும், விஎஃப்எக்ஸ் பயன்பாட்டைத் தீர்மானித்த வகையிலும், தயாரிப்பு வடிவமைப்பாளர் மயூர் சர்மாவின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

இன்னும் சண்டைப்பயிற்சி, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு உட்படப் பல்வேறு அம்சங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.

பரபரப்பு நிறைந்த திரைக்கதைக்கு உருவம் தந்த வகையில் ரொம்பவே பிரமிப்பூட்டுகிறார் இயக்குனர் மனீஷ் சர்மா. அதேநேரத்தில் பாகிஸ்தான் அரசு சம்பந்தப்பட்ட காட்சிகளில் விரிவான விவரணையைத் திரையில் தவிர்த்திருக்கிறார்.

பின்பாதி தொய்வு!

இந்த படத்தின் கதையும் சரி, காட்சிகளும் சரி, ‘ரொம்பவே புதிது’ என்று சொல்லிவிட முடியாது. திரைக்கதை நகர்விலும் கூட, சில ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களின் சாயலைப் பார்க்க முடியும்.

ஆனால், நாம் ஏற்கனவே அறிந்தவற்றை மீண்டும் ஒருமுறை ரசிக்கத்தக்க வகையில் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

மிக முக்கியமாக, சல்மான்கானின் வயது முதிர்வு திரையில் துருத்தலாகத் தெரியாமல் அழகாகச் சமாளித்திருக்கிறார்.

‘இதெல்லாம் தான் சி கிளாஸ் ஆடியன்ஸுக்கு பிடிக்கும்’ என்று அபத்தங்களை அள்ளிக் கொட்டாமல், கொஞ்சம் நேர்த்தியான கமர்ஷியல் படமொன்றைத் தந்திருக்கிறார்.

அதையும் மீறி, பாகிஸ்தான் குழந்தைகள் ‘ஜனகணமன’ பாடலை இசைப்பது போலச் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சில லாஜிக் மீறல்களைப் பொருட்படுத்தக்கூடாது என்ற வகையில் அவற்றைப் புறந்தள்ளிவிடலாம்.

வழக்கமாக, உளவாளிகள் என்றாலே நாடு விட்டு நாடு சென்று ஆக்‌ஷனில் அதகளப்படுத்துவார்கள் என்றொரு எண்ணம் ஜேம்ஸ்பாண்ட் காலம் தொட்டு இருந்து வருகிறது.

அதற்கு மாறாக, ‘டிங்கர் டெய்லர் சோல்ஷியர் ஸ்பை’ போன்ற படங்கள் வேறொரு உலகைக் காட்டுகின்றன.

ஆனால், நமக்குப் பிடித்தமானவற்றைத் தருவதாலேயே ஜேம்ஸ்பாண்ட் வகையறா நாயகர்களை ரசிக்கிறோம், சிலாகிக்கிறோம், கொண்டாடுகிறோம்.

அந்த வரிசையில், இந்தியாவின் கொடையாக டைகர்களும் பதான்களும் மிளிர்கின்றனர்.

விரைவில், தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழி திரைப்படங்களிலும் கூட இப்படிப்பட்ட நாயகர்கள் உருவாகலாம்; அதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை உணர்த்திய வகையில் முக்கியமானதாகிறது இந்த ‘டைகர் 3’.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment