உலகக் கோப்பைக் கிரிக்கெட்: நியூசிலாந்தை பழிதீர்த்த இந்தியா!

நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே திடலில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தனர்.

ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களும் சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களையும் குவித்தும் வெளியேறினர்.

அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி 117 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஷ்ரேயஸ் 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டியின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களைக் குவித்தது.

நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களிமிறங்கியது.

முதலில் விளையாடிய கான்வாய் மற்றும் ரவீந்திரா ஆகியோர் தலா 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் மிட்செல் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.

வில்லியம்சன் அரை சதம் அடித்து 69வது ரன்களில் ஆட்டமிழந்தார். மிட்செல் 134 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இறுதியில் 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 327 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது.

இதன்மூலம், இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. 4-வது முறையாக இந்தியா உலகக் கோப்பை இறுதிப் போட்டி தகுதிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இந்திய  அணி சார்பில் முகமது சமி சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதோடு ஒருநாள் உலக கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகள் (23 விக்கெட்டுகள்) எடுத்த வீரர் என்ற பெருமையையும் சமி பெற்றுள்ளார்.

இதேபோல், உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அதோடு, உலகக் கோப்பையில் 4 முறை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய சாதனையையும் சமி படைத்துள்ளார்.

Comments (0)
Add Comment