நூல் விமர்சனம்:
மயிலாடுதுறை தாலுகாவில் விளநகர் கிராமத்தில் சாதாரண ஒரு வணிகக் குடும்பத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தவர் எம்.எஸ். உதயமூர்த்தி.
தன்னம்பிக்கையோடு கூடிய விடாமுயற்சியால் தன் சொந்த வாழ்க்கையில் உயர்ந்ததோடு மட்டுமில்லாமல் மற்றவர்கள் உயரவும் மிக மிக எளிய முறையில் வழி சொல்லித் தந்தவர்.
பரந்த மனப்பான்மையுடன் பிறரிடம் கருணை, பரிவு காட்டி வாழ்க்கையை நேர்மறை எண்ணங்களுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்.
சீர்காழியில் வசித்தபோது இவரது வீட்டில் தண்ணீர் வசதியில்லை. தெருமுனையிலிருந்துதான் தண்ணீர் தூக்கி வர வேண்டும்.
இளவயது மனைவி தண்ணீருக்காக சிரமப்படுவதை பொறுக்காத உதயமூர்த்தி தன் வீட்டுக் கொல்லைப் புறத்திலேயே ஒரு கிணறு தோண்ட தீர்மானிக்கிறார்.
மாலை வேலை முடிந்து வந்ததும் கணவனும் மனைவியுமாக கடப்பாரையும் மண்வெட்டியும் பிடித்துத் தோண்டுகிறார்கள். இருவருக்கும் கொஞ்சமும் பழக்கமில்லாத கடினமானதொரு வேலை.
பத்து நாட்கள் தோண்டித் தோண்டி பன்னிரண்டு அடி வந்ததும் தண்ணீர் சுரக்க ஆரம்பித்தது. அவர்களே தோண்டிய கிணற்றிலிருந்து மகிழ்ச்சியாக தண்ணீரை இறைத்து உபயோகிக்க ஆரம்பித்தனர். அவருடைய தன்னம்பிக்கைக்கும் மன உறுதிக்கும் சான்றாக இள வயதிலேயே நடந்த சுவாரசியமான சம்பவம் இது.
‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’, ‘உன்னால் முடியும் தம்பி’ உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார்.
25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய பின், தாய்மண்மேல் கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர். ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியவர்.
விளநகர் என்ற குக்கிராமத்திலிருந்து விஸ்கான்ஸின் வரை சென்று தொழிலதிபராகப் பரிணமித்தவர். ‘சிறந்த தொழிலதிபர்’ என்று அமெரிக்க நிறுவனங்களாலும், பத்திரிகைகளாலும் பாரட்டப் பெற்றவர்.
தன் நூல்கள் மூலம் எக்கச் சக்கமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்தவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.
தமிழில் சுயமுன்னேற்ற நூல் என்று கேள்வியேப்படாத அந்த நாட்களிலேயே இவரது நூல்கள் பல மனங்களில் ஒளி பாய்ச்சியுள்ளன.
இவருடைய முதல் நூலான ‘எண்ணங்கள்’ நம் மனதில் எழும் ஒவ்வொரு எண்ணமும் அது கெட்ட எண்ணமோ, நல்ல எண்ணமோ, எப்படி நம் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தது என்று விளக்கமாக எடுத்துக் கூறியிருப்பார்.
‘வாழ்வின் தாத்பர்யங்கள் எல்லாம் ‘நல்லெண்ணம்’ என்கிற ஒரு சொல்லில் அடங்கி இருப்பதாகக் கருதுகிறேன்’ என்று முத்தாய்ப்பாக முடித்திருப்பார்.
‘நம் மனம் எவ்வாறு நம்மை ஆட்டிப் படைக்கிறது, அதை எப்படி வசப்படுத்தி, வளப்படுத்தலாம்’ என்று கூறியதன் மூலம் முதன் முறையாக நம்மை நமக்குள்ளே பார்க்க வைத்தவர் திரு எம். எஸ். உதயமூர்த்தி தான் என்றால் அது நிச்சயம் மிகையான வார்த்தையல்ல.
தன் வாழ்க்கை அனுபவங்களோடு, வாழ்வில் மாற்று சிந்தனைகளை முன் வைத்து முன்னேறிய உலகிலுள்ள மற்ற பிரபலங்கள் தலைவர்களின் அனுபவங்களையும் எழுதி, எங்களால் முடிந்தது ‘உன்னாலும் முடியும் தம்பி!’ என்று கூறினார்.
நம் நாட்டு, அயல் நாட்டு பிரபல விஞ்ஞானிகள், நமது தேசத்தின் மதிப்புக்குரிய மகான்கள் என்று எல்லோரும் அத்தகைய உயர்நிலையை அடையக் காரணம் என்ன என்று ‘பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’, ‘நீ தான் தம்பி முதலமைச்சர்!’, ‘உயர் மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’ என்று எண்ணற்ற நூல்கள் மூலம் மிக எளிமையாகப் புரிய வைத்தார்.
‘மனிதன் தேவனாகும் முயற்சி தான் வாழ்க்கை’ என்று வெகு எளிதாக ஒரு கருத்தைச் சொல்லி வாழ்க்கையை எப்படி உன்னதமாக வாழ வேண்டும் என்று புரிய வைத்தார்.
இவரை மானசீக குருவாக ஏற்று தங்கள் வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டவர்கள் ஏராளம்.
இவர் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட திரைப்பட இயக்குநர் திரு கே.பாலசந்தர் தன்னுடைய திரைப்படம் ஒன்றுக்கு ‘உன்னால் முடியும் தம்பி’ என்று தலைப்பு வைத்து கதாநாயகனுக்கு ‘உதயமூர்த்தி’ என்று பெயரும் வைத்து இவரை சிறப்பித்து மகிழ்ந்தார்.
பக்குவம் பெறாத மனோநிலை பெற்றவர்கள் எவ்வளவு பயிற்சி பெற்றாலும் எந்த விஷயத்தையும் முழுமையாகக் கற்றுக்கொள்ள இயலாது.
எண்ணங்கள் நமது கட்டுக்குள் கொண்டு வரப்படாத வரை நம்மால் எதையும் சாதிக்க முடியாது. மிக அற்புதமாக ஒருவன் எண்ணங்களை அதன் நிலையற்ற தன்மையை அவனது மனமே உருவாக்குகிறது என அழகாக கூறுகிறார்
அவர் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மறைந்து விட்ட போதிலும் அவருடைய எண்ணற்ற தன்னம்பிக்கை யூட்டும் நூல்கள் மூலம் இன்றும் நம்மிடையே வாழ்கிறார், நம் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நூல்: எண்ணங்கள்
ஆசிரியர்: டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம்
பக்கங்கள்: 168
விலை: ரூ.180/-