தற்சார்பு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அழகேஸ்வரி!

சக்சஸ் ஸ்டோரி: தொடர் – 2

பாரம்பரிய விதைப் பாதுகாப்பு மற்றும் பரவலாக்கல், இயற்கை விவசாயம் மற்றும் மாடித் தோட்டங்களை உருவாக்க வழிகாட்டல், இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்வியலை மக்களிடம் கொண்டுசேர்த்தல், இயல்வாகை பதிப்பகம் என சதாபொழுதும் நம்மாழ்வாரின் வழியில் உற்சாக நடைபோடுகிறார் அழகேஸ்வரி.

நம்மாழ்வார் காட்டிய பாதை

திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு அருகிலுள்ள போத்தநாயக்கனூரைச் சேர்ந்த அவர், தற்போது ஊத்துக்குளியில் வசித்துவருகிறார்.

படிப்பு, வேலை எனப் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையின் திசைமாற்றம் பற்றி மனந்திறந்து பேசினார்.

“ஊத்துக்குளியில்தான் நம்மாழ்வாரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்த பிறகு என் வாழ்க்கையில் புதிய பாதையும் வாழ்க்கையும் தெரியத் தொடங்கியது. அப்போது நான் திருப்பூர் சாயப்பட்டறை சார்ந்த வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நம்மாழ்வார் மறைவுக்குப் பிறகு வருமானத்திற்காக வேலைக்குச் செல்ல பிடிக்கவில்லை. முதலில் மரபு விதைகளைத் தேடிப் பயணித்தேன். இந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மாடித் தோட்டம் அமைத்துக்கொடுக்கத் தொடங்கினேன்.

வருமானமாக மாறிய ஆர்வம்

பள்ளிகளுக்குத் தோட்டம் அமைத்துக்கொடுப்பது, குழந்தைகளுக்குத் தற்சார்பு உற்பத்தி பற்றிக் கற்பித்தல் எனப் பல பணிகளைச் செய்தோம். பின்னர் அதுவே வருமானமாகவும் மாறியது.

36 வயதினிலே படத்திற்குப் பிறகு தோட்டம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்கத் தொடங்கியது.

மாதம் முழுவதும் மாடித் தோட்டம் அமைக்கும் பணிகள் கிடைத்தன.

விதைகள், தோட்டம் அமைத்தல் தொடர்பாகச் சிறு வருமானம் வந்தது. மரபு விதைகளைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டோம்.

உணவுத் திருவிழாவுக்காக அகமதாபாத் சென்றபோது, எல்லா மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் வந்தார்கள்.

அங்கு மரபு காய்கறி விதைகள், நெல் ரகங்களைச் சேகரிக்கும் வாய்ப்பு அமைந்தது. அவற்றைச் சேகரித்து நம்மூர் விவசாயிகளுக்கு கொண்டு வந்து கொடுத்தோம்.

விதைகள் தேடி பயணம்

எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறபோது, அங்கெல்லாம் விதைகளுக்காக அரங்கை அமைத்தோம். அதன் தொடர்ச்சியாக இயல்வாகை என்ற பெயரில் நம்மாழ்வாரின் சூழலியல், இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்க்கை தொடர்பான பல புத்தகங்களை வெளியிட்டோம்” என்கிறார்.

பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், மரபு காய்கறிகள், பாரம்பரிய உணவுகளைத் தேடித் தேடிக் குறைந்த விலையில் மக்களுக்குக் கொடுத்தார் அழகேஸ்வரி.

பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், அவை ஓரிடத்தில் கிடைக்காத நிலை இருந்தது. அப்போது ஒவ்வொரு நாளும் ஊர் ஊராகச் சென்று சேகரித்து வந்திருக்கிறார்.

இயற்கை விவசாயப் பொருட்களைச் சந்தைப்படுத்த பொதுவான ஒரு தளம் இல்லை என்பது தெரியவந்ததும் அதற்காக நம்ம ஊர் சந்தைகளை ஏற்படுத்தினார்.

அதில் இயற்கை வழி வேளாண்மை செய்பவர்கள் மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருள் செய்பவர்களை மட்டும் சந்தைக்கு அழைத்தார் அழகேஸ்வரி.

நம்ம ஊர் சந்தை

மீண்டும் பேசிய அவர், “விவசாய உற்பத்தியாளர்களுக்கும் மக்களுக்கும் ஒரு நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நம்ம ஊர் சந்தையை உருவாக்கினோம்.

திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற நகரங்களில் சந்தைகளை நடத்தினோம். பேக்கிங் போன்ற எந்த குப்பையும் இருக்காது.

நான் போய் பார்த்து உண்மையாக இயற்கை விவசாய முறையில் தயாரிக்கப்படுகிற பொருளா என்று ஆய்வு செய்துதான் சந்தைக்கு அவர்களை அனுமதிப்பேன்.

கேட்பவர்கள் எல்லோருக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. மிகத் தரமான பொருட்கள் மட்டும் சந்தையில் விற்பதால் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

குழந்தைகள் நூலகம்

திருப்பூர் பகுதியில் குழந்தைகளுக்கான நூலகம் ஒன்றையும் நடத்திவருகிறோம். வாசிப்பு மட்டுமல்லாமல், நம்மாழ்வாரிடம் கற்றுக்கொண்ட தற்சார்பு வாழ்க்கைப் பாடங்களைப் பாடல்கள் மற்றும் விளையாட்டு வழியாக அவர்களிடம் எடுத்துச் சென்றோம்.

சாயப்பட்டறைக் கழிவுகளால் நொய்யல் ஆறு அழிந்துவிட்டது. அதை மாற்றவேண்டும் என்பதற்காகப் பள்ளிக் குழந்தைகளுக்கு இயற்கைச் சாயம் தயாரிப்பு பற்றிய பயிற்சியை விளையாட்டாகக் கொடுத்தோம்.

இலை தழைகளை வைத்து 50 வகையான இயற்கைச் சாயங்களை அவர்கள் கண்டறிந்தார்கள்.

பத்து ஆண்டுகளாக மரபு சார்ந்த கல்விக்காக உழைத்துவருகிறோம். நாம் முப்பது வயதில் தெரிந்துகொண்டதை, அவர்கள் பால்யத்திலேயே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.

சில பள்ளிகள் மட்டும் அதனைப் பின்பற்றும் நிலையில், அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களையும் மரபுக் கல்வி சென்று சேரவேண்டும் என விரும்புகிறேன்.

தாம்பூலப் பையில் விதைகள்

பின்னர், துணிப்பை இயக்கமும் தொடங்கினோம். முதன்முதலாக மரபு விதைகள், புத்தகம், சிறுதானிய இனிப்புகளை வைத்து தாம்பூலப் பைகளை இயல்வாகை மூலம் திருமண விழாக்களில் அறிமுகப்படுத்தியது நாங்கள்தான்.

இப்போது நான் நிறைவாக உணர்கிறேன். நான் பணத்தைத் தேடி ஓடவில்லை. எனக்குப் போதுமான வருமானம் கிடைக்கிறது. வாழ்க்கை அமைதியாக இருக்கிறது” என மிகுந்த உற்சாகத்துடன் பேசினார்.

எஸ். சங்கமி

Comments (0)
Add Comment