70 விருதுகளை வென்ற ‘சரஸ்’ குறும்படம்!

இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று, தனது முதல் தமிழ் குறும்படமான ‘சஷ்தி’ (SHASHTHI) மூலமாக 2022ல் 35 சர்வதேச திரைப்பட விழாக்களில் 75-க்கும் மேற்பட்ட விருதுகளையும், தனது இரண்டாவது தமிழ்க் குறும்படமான ‘சரஸ்’ (SARAS) மூலமாக 2023ல் 20 சர்வேதேச திரைப்பட விழாக்களில் 70-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்று அனைவருக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர் ஜூட் பீட்டர் டேமியான் என்ற சார்ட்டட் அக்கவுண்டன்ட்.

சார்ட்டட் அக்கவுண்டன்ட் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அனுபவத்திற்குப் பிறகு திரை இயக்கத்தைப் பற்றி முறையாகப் பயின்று இந்திய சினிமாவிற்கும் இந்த சமூகத்திற்கும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று எடுத்த முயற்சியின் தொடக்கம்தான் அவரது  இரண்டு குறும்படங்களான ‘சஷ்தி’யும் ‘சரஸ்’ ம் வெளிவந்துள்ளன.

அனுபவங்கள் வாயிலாக தான் அறிந்தவற்றை தரமான கலை படைப்பை அதற்கேற்ற தொழில்நுட்பம் மூலமாக பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கான பொறுப்பு எனக்குள்ளது என்கிறார் ஜூட் பீட்டர் டேமியான்.

குழந்தைகளின் கடவுள் என்கிற ‘சஷ்தி’, மற்றும் கல்வியின் கடவுள் என்கிற ‘சரஸ்’ (சரஸ்வதி) என அவரால் எழுதி, இயக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் அதற்கு சாட்சியங்களாக விளங்குகின்றன.

சஷ்தி குறும்படம், சற்றே வசதி குறைந்த தேவி என்ற பெண்ணைப் பற்றிய அபிப்ராயத்தை, எப்படி அதிகமான அறிதலும் மாறும் சூழ்நிலைகளும், குழந்தைகளின் கடவுளான சஷ்தியுடன் ஒப்பிடும் அளவிற்கு மாற்றுகின்றது என்பதை அரை மணி நேரத்தில் விளக்குகிறது.

சமூக ரீதியாவும் பொருளாதார ரீதியாகவும் பலவீனமான பின்னணி கொண்ட சரஸ்வதி (சரஸ்) என்கிற பெண், நன்கு படிக்கும் தனது மகனை எப்படி உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வைக்க தீர்மானமாயிருக்கிறாள் என்பது பற்றி சொல்கிறது ‘சரஸ்’.

செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர். எஸ்.கே. காயத்ரி, ஹாரீஸ் மூஸா, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் ‘சஷ்தி’யில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நீலிமா ராணி, என். ஸ்ரீகிருஷ்ணா, வினைதா சிவகுமார் மற்றும் மாஸ்டர் சஞ்சீவ் ஆகியோர் ‘சரஸ்’ குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ரெட் கேமராவை பயன்படுத்தி ஒளிப்பதிவாளர் பிராங்க்ளின் ரிச்சர்டால் ‘சஷ்தி’ ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் ஜி.டி.ராஜா என்பவரால் ஆரி அலெக்ஸா கேமராவால் ‘சரஸ்’ ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

இந்த இரண்டு படங்களுக்கும்  எம்.எஸ், ஜோன்ஸ் ரூபர்ட் பின்னணி இசையமைக்க எஸ்.டி.பி சாமி லைவ் ரெக்கார்டிங், சவுண்ட் மிக்சிங் ஆகியவற்றை கவனித்துள்ளார்.

‘சஷ்தி’ ஆப்பிள் டிவி (ஐடியூன்ஸ் -iTunes) மற்றும் யூட்யூப்பிலும் (YouTube) பார்க்கக் கிடைக்கிறது. ‘சரஸ்’ விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

Comments (0)
Add Comment