பூர்ணம் விஸ்வநாதனைத் தெரியாத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. பண்பட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து, இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான நடிகர் அவர். இன்று அவரது 100-வது பிறந்தநாள்!
60 ஆண்டுகளைக் கடந்த கலைப் பயணம்
1921 நவம்பர் 15-ல், திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் என்கிற கிராமத்தில் பிறந்தவர் பூர்ணம் விஸ்வநாதன். 18 வயதில் தன்னுடைய நாடக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், ஒரு பன்முகக் கலைஞராக வாழ்ந்தவர்.
எத்தனையோ திரைப்படங்களில், மிகையும் இயல்பும் கலந்த அற்புதமான நடிப்பால் தன் இருப்பை உணர்த்தியவர் பூர்ணம் விஸ்வநாதன்.
அவரது பெயரைச் சொன்னதுமே இன்றைய தலைமுறையினருக்கு, ‘நெற்றிக்கண்’, ‘தில்லுமுல்லு’ ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘மூன்றாம் பிறை’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘மகாநதி’, ஆசை’ ஆகிய படங்கள் நினைவுக்கு வந்துவிடும்.
ஆனால், 70-களில் கறுப்பு வெள்ளைப் படங்களிலேயே திரைப்படங்களில் அவர் நடிக்கத் தொடங்கிவிட்டார். அதற்கும் முன்னதாக வானொலிக் கலைஞராகவும் நாடக நடிகராகவும் அவர் புகழ்பெற்றிருந்தார்.
இந்திய சுதந்திரத்தை அறிவித்தவர்
பூர்ணம் விஸ்வநாதனின் அண்ணன் பூர்ணம் சோமசுந்தரம், சென்னை வானொலியில் வேலை பார்த்துவந்தார். இந்தச் சூழலில், 21 வயதில் சென்னை வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகப் பணியில் இணைந்தார் பூர்ணம் விஸ்வநாதன்.
பிறகு, 1945-ல் அகில இந்திய வானொலியின் தலைமையகமான டெல்லியில், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தெற்காசிய சேவையின் ஒருபகுதியான தமிழ்ச் சேவைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.
அங்கே, பூர்ணம் விஸ்வநாதனின் குரலுக்கு செய்தி வாசிப்பாளராக பூரண கும்ப மரியாதை கிடைத்தது.
அதுவரை செய்திகளை வாசிக்கும்போது ‘தெற்காசிய தமிழ்ச் சேவையின் அதிகாலைச் செய்திகள்’ என்று மட்டுமே செய்தி வாசிப்பாளர் கூறுவது வழக்கம். அதை மாற்றியவர் பூர்ணம் விஸ்வநாதன்தான்!
‘ஆல் இந்தியா ரேடியோ… செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்’ எனத் தன்னுடைய பெயரையும் தைரியமாகப் பிரகடனம் செய்து, செய்தி வாசிப்பாளர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் ஏற்படக் காரணமாக அமைந்தார்.
‘இந்தியா சுதந்திரம் அடைந்தது… பண்டித ஜவாஹர்லால் நேரு கண் கலங்கினார்’ என்று தலைப்புச் செய்தி வாசித்த பெருமை, பூர்ணம் விஸ்வநாதனுக்கு உண்டு.
நேஷனல் புக் ட்ரஸ்ட்டின் புத்தகங்கள் பலவற்றை ஆற்றொழுக்கான நடையில் தமிழுக்குத் தந்தவர் பூர்ணம் விஸ்வநாதன் என்பது, பலரும் அறியாதது!
அவருடைய அண்ணன் பூர்ணம் சோமசுந்தரம், ஒருகட்டத்தில் அகில இந்திய வானொலியிலிருந்து விலகி, சோவியத் யூனியனாக ரஷ்ய நாடு இருந்தபோது, அதனுடைய ‘ரேடியோ மாஸ்கோ’ வானொலியின் தமிழ்ப் பிரிவு தலைவராகப் பணியில் சேர்ந்தார்.
ரஷ்யப் பெண்மணியைக் காதல் திருமணம் செய்துகொண்டு, மாஸ்கோவிலேயே அவர் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்.
இன்னொரு சகோதரர், 50-களில் எழுத்தாளராகப் புகழ்பெற்றிருந்த உமா சந்திரன். தமிழகக் காவல் துறையில் உயர் பதவி வகித்த நடராஜ் ஐபிஎஸ்ஸின் தந்தைதான் உமா சந்திரன்.
உமா சந்திரனின் ‘முள்ளும் மலரும்’ நாவலை அடிப்படையாகக் கொண்டே, இயக்குநர் மகேந்திரன் ‘முள்ளும் மலரும்’ எனும் அற்புதமான திரைப்படத்தை உருவாக்கினார்.
இவர் 1,000-க்கும் அதிகமான மேடை நாடகங்களைத் தயாரித்ததுடன், அவற்றில் குரல் நடிப்பையும் வழங்கியிருக்கிறார்.
சுஜாதாவுடன் சந்திப்பு
செய்தி வாசிப்பாளராக இருந்துகொண்டே தங்கை தயாரித்த வானொலி நாடகங்களில் நடித்துவந்தார் பூர்ணம் விஸ்வநாதன்.
அதன் பின்னர், டெல்லியில் உள்ள தமிழ் நண்பர்களை ஒருங்கிணைத்து, ‘பூர்ணம் தியேட்டர்ஸ்’ என்கிற நாடக் குழுவை தொடங்கி, ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ டெல்லி தமிழ்ச் சங்க ஆண்டுவிழாவில் நாடகங்களை நடத்திவந்தார்.
தமிழ்ச் சங்க விழாவில் எழுத்தாளர் சுஜாதாவைச் சந்தித்தபிறகு, அவரது நாடக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.
டெல்லியில் சுஜாதாவை பூர்ணம் விஸ்வநாதனுக்கு அறிமுகப்படுத்திவைத்தவர், மற்றொரு நெல்லை மைந்தரான பாரதி மணி. ஒரு வெற்றிகரமான நாடக ஆசிரியராக சுஜாதாவின் முகம், இலக்கிய உலகம் அறிந்திராத ஒன்று.
சுஜாதாவின் எழுத்துகளுக்கு தீவிர வாசகராக இருந்த பூர்ணம் விஸ்வநாதன், அவருடைய ‘கடவுள் வந்திருக்கிறார்’ நாடகத்தை அரங்கேற்ற அனுமதிபெற்று, அதில் முதன்மை வேடத்திலும் நடிக்க… அந்த நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த நாடகத்தின் வெற்றியே, டெல்லியிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து வரவேண்டிய அவசியத்தை பூர்ணம் விஸ்வநாதனுக்கு உருவாக்கியது.
80-களில் மேடைக்கு அவசியமான, மிகையும் கணீர் குரலும் இணைந்த நடிப்பால் பார்வையாளர்களை வசியம் செய்தார் பூர்ணம் விஸ்வநாதன்.
அதன்பின்னர், அவரை மனதில் வைத்தே சுமார் 10 நாடகங்களை பூர்ணம் தியேட்டர்ஸ் குழுவுக்காக எழுதினார் எழுத்தாளர் சுஜாதா.
அவை அனைத்தும் வெற்றி நாடகங்களாகவே அமைந்தன. மேடை நாடகத்தில் பல வெற்றிகரமான மாணவர்களை உருவாக்கிய பூர்ணம் விஸ்வநாதன், சிவாஜி, எம்ஜிஆர் தொடங்கி கமல், ரஜினி படங்களில் நடித்து, 1990-களில் அஜித், விஜய் படங்களிலும் நடித்து எல்லாத் தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்தார்.
நடிப்பில் மிகை இழையோடினாலும் பூர்ணம் விஸ்வநாதனின் உடல்மொழியும் அவருடைய கண்களும் பார்வையாளர்களுடன் உடனடி நெருக்கத்தை உருவாக்கக் கூடியவை.
திரைப்படத்துக்கு வெளியே தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து, 3-ம் தலைமுறை கலைஞர்களோடும் பணியாற்றிய பெருமை பூர்ணம் விஸ்வநாதனுக்கு உண்டு.
– நன்றி : காமதேனு இதழ்