தமிழ்த் திரையுலகம் பல்வேறுபட்ட இயக்குனர்களைக் கண்டு வருகிறது. ஒரு இயக்குனரைப் போல இன்னொருவர் இருக்க முடியாது என்றபோதும், சிலர் மட்டுமே சகாக்களால் சிலாகிக்கப்படுவார்கள்.
யதார்த்தமான கதைகளைப் படைப்பவர்கள், முற்றிலும் பொழுதுபோக்கை அளிப்பவர்கள், விளிம்புநிலை மனிதர்களை மையப்படுத்துபவர்கள், மனித மாண்பைப் போதிப்பவர்கள் என்ற வகைப்பாட்டை மீறி, அந்தச் சில இயக்குனர்கள் பலரால் கொண்டாடப்படுவார்கள்.
திரைப்படங்களுக்கு அப்பால் பொதுவெளியிலும் கூட, அவர்களில் சிலர் கொண்டாடப்படுவார்கள். அப்படியொருவர் இயக்குனர் என்.லிங்குசாமி.
‘ஆனந்தம்’ படத்தில் தனது கணக்கைத் தொடங்கிய இவர், சமீபத்தில் வெளியான ‘தி வாரியர்’ வரை பத்து படங்களை இயக்கியிருக்கிறார்.
ஒரு தயாரிப்பாளராகவும் பல வெற்றிப் படங்கள் வெளிச்சம் காண வழியமைத்துத் தந்திருக்கிறார்.
கடந்த 22 ஆண்டுகளாக, ஒரு படைப்பாளியாக அவர் திரைத்துறைக்குத் தந்திருக்கும் பங்களிப்பு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
சினிமா பித்து!
அப்போதே கமர்ஷியல் திரைப்படம், கலைப் படம் என்ற பாகுபாடு இல்லாமல் சுவாரஸ்யமான எந்தவொரு படைப்பையும் திரையில் ரசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் லிங்குசாமி.
நடிகர் என்றளவில் ரஜினி மீதும், இயக்குனர் என்றளவில் கே.பாக்யராஜ் மீதும் பித்து கொள்ளும் அளவுக்கு, அந்த ரசனை வெவ்வேறு திசைகளில் அமைந்திருந்தது.
கூடவே, புதிய தொழில்நுட்பங்களைத் திரைப்படங்களில் புகுத்துபவர்களைக் கண்டும் வியந்து வந்தார்.
அதுவே ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகச் சேர வேண்டுமென்ற ஆசையை லிங்குசாமியிடத்தில் விதைத்தது.
ஷங்கரிடம் சினிமா பாடம் பயில முடியாத வருத்தத்தில் இருந்தவர், அவரது குழுவில் இருந்த பாலாஜி சக்திவேல், வசந்தபாலனின் நட்பு வட்டத்தில் இடம்பிடித்தார்.
அதன் வழியே இயக்குனர் வெங்கடேஷின் உதவியாளராக ‘மகாபிரபு’ படத்தில் பணியாற்றினார்.
அந்த காலகட்டமே, லிங்குசாமியின் திரை வாழ்வை வடிவமைத்தது என்றும் சொல்லலாம். ஏனென்றால், அதனைத் தயாரித்த கிருஷ்ணா ரெட்டியின் மகன்களான அஜய், விஷாலிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இயக்குனராக மட்டுமின்றி, தயாரிப்பாளர் படும் அவஸ்தைகளையும் அவர் அறிந்துகொண்டார். ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் எப்படி இருப்பது என்பதைக் கற்றுக்கொண்டார்.
முதல் படம்!
தமிழ்த் திரையுலகில் ஒரு இயக்குனருக்கு முதல் படம் கிடைப்பதென்பது அரிதினும் அரிதான விஷயம். அதிலும், வேறொருவர் எழுதிய கதை, திரைக்கதையை இயக்கும் வழக்கம் இங்கு ரொம்பவே அரிது.
அதனாலேயே புதுமுக இயக்குனர்கள் தாங்களே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று டைட்டில் கார்டு வர வேண்டுமென்று விரும்புவது இன்று வரை தொடர்கிறது. இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நெருக்கடி இன்னும் அதிகம்.
அந்த நிலையில், லிங்குசாமியின் வசமிருந்த கதையைப் போலவே ‘அவுட்லைனை’ கொண்டிருந்த திரைப்படம் ஒன்று வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வேறு ஒருவராக இருந்திருந்தால், ‘இன்னொரு கதையைப் படம்பிடிக்கலாம்’ என்று நகர்ந்திருப்பார்கள். ஆனால், தன்வசமுள்ள கதையையே முதல் படமாக ஆக்குவது என்பதில் பிடிவாதமாக இருந்தார் லிங்குசாமி. அப்படித்தான் ‘ஆனந்தம்’ உருவானது.
மம்முட்டி, தேவயானி, முரளி, ரம்பா, அப்பாஸ், சினேகா, விஜயகுமார், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், ஷ்யாம் கணேஷ், சசிகுமார் என்று அப்போது சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் பிரபலமாக இருந்த பல கலைஞர்கள் அந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஒரு இடத்தில் குழுமியிருப்பார்கள்.
அவர்களைச் சரியாகக் கையாளவும், திரையில் கதைக்குத் தகுந்தவாறு காட்டவும் மிகுந்த பொறுமை வேண்டும். அது சாத்தியப்பட்டதால் மட்டுமே ‘ஆனந்தம்’ பெருவெற்றியைப் பெற்றது.
அந்தப் படம் முழுக்க அழகியல் ரசனை நிறைந்திருக்கும். அதையும் மீறி, அந்தக் கதையை யதார்த்தத்திற்கு நெருக்கமானதாக உணர வைத்திருந்தார் லிங்குசாமி.
வெற்றிகளும் தோல்விகளும்..!
அமிதாப் பச்சன் நடித்த ‘தீவார்’ பார்த்தவர்களுக்கு, அதில் வரும் துறைமுக சண்டைக்காட்சி நிச்சயம் நினைவில் இருக்கும். கூலியாளாக வேலை பார்க்கும் அமிதாப், அக்காட்சியில் குடோன் கதவைச் சாத்துவார்.
அதன் ரீமேக்கான ‘தீ’ மட்டுமல்லாமல், தான் நடித்த பல படங்களில் ரஜினி அக்காட்சியைப் பிரதி எடுத்திருக்கிறார். அதே காட்சியை ‘ரன்’ படத்தில் ஒரு சுரங்கப் பாதையில் நிகழ்வதாக மடை மாற்றியிருந்தார் லிங்குசாமி.
அந்த படத்தில் ‘ஓடு’ என்று மீரா ஜாஸ்மின் சொன்னதும், வேகவேகமாகச் சென்று சுரங்கப்பாதை ஷட்டரை கீழே இறக்குவார் மாதவன். அதன்பிறகு, மிகச்சில நொடிகள் மௌனம் நிறையும். அதனைத் தொடர்ந்து, ரயில் ஓடும் சத்தம் மட்டும் கேட்கும். அதன்பிறகே, அந்த சண்டைக்காட்சி தொடங்கும்.
தான் பார்த்த ராம்கோபால் வர்மா படங்கள், ரஜினி படங்களின் கலவையாக அக்காட்சியை வடித்திருப்பார் லிங்குசாமி. அப்படிப்பட்ட ரசனைமிகு பில்டப் காட்சியமைப்புதான், ரசிகர்களைக் கவர வைக்கும் சண்டைக்காட்சிகளுக்கான விசிட்டிங் கார்டு. அதுவே, இளம் ரசிகர்களுக்கு லிங்குசாமியைப் பிடிக்கக் காரணமானது.
‘ரன்’ தந்த பூரிப்பில், அஜித்தை வைத்து ‘ஜி’ எடுக்க முனைந்தார் லிங்குசாமி. தயாரிப்பில் நீண்டகாலம் இருந்தது, அப்படத்தின் உயிர்த்தன்மையைச் சிதைத்தது.
2005ஆம் ஆண்டு வெளியான ‘ஜி’ தோல்வியுற, அதிலிருந்து மீளும் நோக்கில் அந்த ஆண்டே ‘சண்டக்கோழி’ தந்தார் லிங்குசாமி.
அந்த படத்தில் வந்த பேருந்து சண்டைக்காட்சியும் அதன்பிறகு இடம்பெற்ற ராஜ்கிரண் காட்சிகளும் அவருக்குப் பெரும் புகழைத் தந்தன.
பின்னர் வந்த படங்களில் ‘பையா’ தவிர்த்து வேறெதுவும் பெருவெற்றியை ஈட்டவில்லை. அதனால், இன்றிருக்கும் பதின்பருவத்தினருக்கு லிங்குசாமியின் படங்கள் மீது பெரிய ஈர்ப்பில்லை.
லிங்குசாமியின் சிறப்பம்சம்!
ஒரு திருப்புமுனைக் காட்சி அல்லது சம்பவங்களின் தொகுப்பைச் சார்ந்தே லிங்குசாமியின் படங்கள் இருக்கும். ஒருகட்டத்தில் ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பே, அவரது படங்களின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பதாக மாறியது. ‘பீமா’வில் அது சரிவர வெளிப்படவில்லை.
‘வேட்டை’ கிளிஷேக்களின் தொகுப்பாக இருந்தாலும், அப்படம் விளம்பரப்படுத்தப்பட்ட வகையில் ரசிகர்களைச் சென்றடைந்தது.
ஆனால், அதே பாணியில் அமைந்த ‘அஞ்சான்’ படம் சரிவைச் சந்தித்தது. சண்டக்கோழி 2 மிகச்சிறிய அளவில் கவனிப்பைப் பெற, தெலுங்கு டப்பிங் படம் என்ற அளவிலேயே ‘தி வாரியர்’ நோக்கப்பட்டது.
தனது பலம் என்ன, பலவீனம் என்னவென்பதை நன்கறிந்து திரைப்படங்களை உருவாக்குபவர் லிங்குசாமி. அவரது படங்களில், ஒவ்வொரு பிரேமிலும் அழகியல் உணர்வு சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.
அது மட்டுமல்லாமல் வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், கலை இயக்குனர்களோடு திறம்படப் பணியாற்றும் வல்லமை அவருக்கு உண்டு.
அவர்களில் யாருமே லிங்குசாமியின் முந்தைய படங்களில் இருந்த யதார்த்தம் பின்னாட்களில் காணாமல் போனதைக் குறிப்பிட்டுச் சொன்னார்களா என்று தெரியவில்லை.
குறிப்பிட்டுச் சொல்லும்படியான பாத்திர வார்ப்புகள் அவரது படங்களில் இருப்பதைச் சிலாகித்தார்களா என்று தெரியவில்லை.
உயர்தரத்தில் அமைந்த பாடல்கள், சண்டைக்காட்சிகள் போன்றே குடும்பமாகச் சேர்ந்தமர்ந்து பார்க்கும் வகையிலான காட்சிகளின் இருப்பு குறைந்துபோனதைக் குறிப்பிட்டார்களா என்று தெரியவில்லை.
சாதாரண ரசிகர்களோடு ஒருமுறை படம் பார்த்தால் போதும்; அந்த வித்தியாசங்களை எளிதில் உணர முடியும்.
லிங்குசாமியின் படங்களில் பெரிதாகக் கதை இருக்காது என்ற அபிப்ராயம், ‘ரன்’ படத்திலேயே வலுப்பெற்று விட்டது.
அதேநேரத்தில், திரைக்கதை சிறப்பாக இருக்குமென்ற அபிப்ராயமும் ரசிகர்களிடம் உண்டு.
அதற்கேற்ற கதைகளை உருவாக்குவது கடினமாக இருந்தால், வேறு கதாசிரியர்களிடம் இருந்து கருப்பொருளைப் பெறலாம்.
முழு ஸ்கிரிப்டையும் வாங்கித் திறம்பட இயக்கும் பொறுப்பை மட்டும் வகிக்கலாம். நிச்சயமாக, அது திரையில் சிறப்பாக மலரும்.
லிங்குசாமி அதிக படங்களை இயக்க இது நிச்சயம் உதவும்; தமிழ் திரையுலகுக்குத் தரமான ‘கமர்ஷியல் படங்கள்’ கிடைக்க வழி ஏற்படும்.
அதையும் மீறி, அழகியல் ரசனை மிகுந்த அவரைப் போன்ற இயக்குனர் ஒருவர் கதைகளுக்காகக் காலத்தை வீணாக்குவது நிச்சயம் ஏற்புடையதல்ல..!
– உதய் பாடகலிங்கம்