வன்முறை தான் திரைப்படங்களின் மையப்புள்ளியா?

அண்மைக் காலத்திய பெரும் வணிக வெற்றி பெற்ற திரைப்படங்களைப் பார்த்தால் ஒரே கேள்வி நம் மனதுக்குள் எழும்.

“வன்முறைய வெறுக்கிற பாவனையை ஒருபுறம் காட்டிவிட்டு, திரைப்படங்களில் அதே வன்முறையை அழுத்தமாக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமா?”
அப்படித் தான் இருக்கின்றன அண்மைக் கால வணிகப் படங்கள்.

எப்போதும் நம் திரைப்படங்களில் வன்முறை இடம் பெறாமல் இருந்ததில்லை. அது ஒரு கூறாகவே இருந்திருக்கிறது.

ரத்தம் தெறிக்கிற காட்சிகளை மோப்பம் பிடித்து நீக்க அன்றைய தணிக்கைக்குழு கொஞ்சமாவது செயல்பட்டன. அதன் கத்திரிகள் வேலை செய்தன.

தற்போது அந்தக் கத்திரிகளின் கூர் மழுங்கிவிட்டன அல்லது காணாமல் போய்விட்டன.

ஆங்கிலப் படங்களின் தெறிக்கும் வன்முறை நம் பான் இந்தியா படங்களிலும், தமிழ் உள்ளிட்ட மாநில மொழித் திரைப்படங்களிலும் வன்முறை தெறிக்கிறது. தெறிக்கவிடுகிறார்கள். அதற்கு எப்படியோ அனுமதியும் பெற்று விடுகிறார்கள்.

ஆன்டி ஹீரோக்களின் படங்கள் முன்பு அபூர்வமாக வெளிவந்திருக்கின்றன. தற்போது கிரிமினல் கதா பாத்திரங்களே பெரும்பாலும் ஹீரோவாக வருகிறார்கள்.

போலீசாக வந்தாலும், “பொறுக்கி” என்று தன்னைத் தானே பெருமிதமாகச் சொல்லும் கதாபாத்திரங்களுக்கு இங்கு மதிப்பிருக்கிறது. அம்மாதிரி கொளுத்தும் ‘பஞ்ச்’ வசனங்களுக்குக் கைதட்டல்கள் எழுகின்றன.

‘விக்ரம்’, ‘ஜெயிலர்’ திரைப்படங்களின் வெற்றிக்கு வன்முறை மயமாக்கப்பட்ட அவற்றின் திரைக்களம் முக்கியக் காரணம்.

விதவிதமான நவீனத் துப்பாக்கிகளால் பெருங்கூட்டத்தைச் சாய்க்கிறார்கள். சுழலும் டிரம்முக்குள் ஆட்களைத் தலைகீழாய்த் தொங்கவிட்டுச் சாகடிக்கிறார்கள். குளோஸப்-பில் கழுத்தை அறுக்கிறார்கள்.

மேசையில் உயிரிழந்து ரத்தம் தெறித்து விழ, மேலே தெறித்த ரத்தம் துடைக்க “துடைப்பான்” கொடுக்கிறார்கள்.

படம் முழுக்கக் காதுகளும், மென் இதயங்களும் அதிர்ந்து கொண்டே இருக்க அந்த இரைச்சலில் தங்களுடைய வணிகக் கல்லாக் கணக்கை ஆரவாரமாய்க் காட்டுகிறார்கள். பொதுவெளியில் வன்முறை வித்துக்களைத் தொடர்ச்சியாக விதைக்கிறார்கள்.

திரைப்படம் என்கிற வலுவான சாதனத்தை இப்படியா தங்களுடைய வணிக நோக்கங்களுக்காக மலினப்படுத்த வேண்டும்?

வன்முறையை ஒரு ருசிகரமான பண்டத்தைப் போல மாற்றியிருப்பது தான் – இவர்களது சாதனையா?

“நல்லவரா? கெட்டவரா?” – என்று முன்பு குழந்தைத் தனமான கேள்விகளைக் கேட்காத அளவுக்கு தற்போதுள்ள குழந்தைகளின் மனதை நஞ்சு பரவியதைப் போல மாற்றியிருப்பது தான் திரைப்பட வணிகர்களின் இன்னொரு சாதனையா?

அரசியலிலும், பொதுவாழ்விலும் கிரிமினல்களும், பெரும் ஊழல்வாதிகளும் மதிப்பைப் பெறுவதைப் போலத் தான் திரைப்படங்களிலும் அதே குணமுள்ளவர்கள் மேலானவர்களாக மதிப்பைப் பெறுகிறார்களா?

கார்ப்பரேட்களும், மத, சாதிய வாதிகளும் தான் இங்கு அறிவிக்கப்படாத ‘சென்ஸாரைப்’ போலச் செயல்படுகிறார்களா?

– யூகி

Comments (0)
Add Comment