ஒரே நாளில் பல திரைப்படங்கள் வெளியாகும்போது, மிகச்சிறிய பட்ஜெட்டில் தயாரான படங்களும் கூட அவற்றில் ஒன்றாக இருக்கும்.
பிரமாண்ட படங்களுக்கு நடுவே அப்படங்களின் நிலைமை என்னவென்ற கேள்வியும் நமக்குள் எழும். ஆனால், ரசிகர்களின் அக்கறையையும் அன்பையும் மீறி அப்படங்கள் அவர்களை வசீகரித்து உள்ளிழுக்கும்.
இந்த தீபாவளி ரேஸில் ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெய்டு படங்களுக்கு நடுவே வெளியாகியிருக்கும் ‘கிடா’வும் அப்படியொரு எதிர்பார்ப்பைத்தான் உண்டாக்கியது.
சரி, படம் சாதாரண ரசிகர்களைத் தன்வயப்படுத்துகிறதா?
சிறுவனும் கிடாவும்..!
மகள், மருமகன் இறந்தபிறகு, பேரன் கதிரை (தீபன்) அவர்கள்தான் வளர்த்து வருகின்றனர்.
அய்யனாருக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, கருப்பு என்று பெயரிட்டு ஒரு ஆட்டை வளர்க்கிறார் செல்லையா.
வீட்டில் நடந்த அசம்பாவிதத்தால், அவர் அந்த நேர்த்திக்கடனைச் செலுத்தத் தயாராக இல்லை. இன்னொரு புறம், பேரன் கதிர் அந்த ஆட்டின் மீது கொள்ளைப் பிரியத்துடன் இருக்கிறார்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகை வருகிறது. தனது நண்பர்களைப் போல, தானும் விளம்பரங்களில் வரும் விலையுயர்ந்த பேண்ட் சர்ட்டை வாங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான் கதிர். அதனைத் தாத்தாவிடம் தெரிவிக்கிறான்.
கதிரின் ஆசையை நிறைவேற்றுவதாகச் செல்லையாவும் வாக்களிக்கிறார். அதற்காக, தன் வசமுள்ள தரிசு நிலைத்தை விற்கவும் முயற்சிக்கிறார். அது நிறைவேறவில்லை.
சில நண்பர்கள், உறவினர்களிடம் கடன் கேட்கிறார். ஒருவரும் உதவி செய்யும் நிலையில் இல்லை. அதையடுத்து, கருப்புவைக் கறிக்கடையில் விற்க ஏற்பாடு செய்கிறார்.
ஒருகட்டத்தில் அதுவும் தட்டிப்போக, உள்ளூர்க்காரரான வெள்ளைச்சாமி (காளி வெங்கட்) அந்த ஆட்டை வாங்கத் தயாராகிறார்.
கறி வெட்டும் கடையில் வேலை பார்த்து வந்த வெள்ளைச்சாமி, முதலாளி மகனிடம் சண்டையிட்டு தனியாகக் கடை வைப்பதாகச் சவால் விட்டதே அதன் பின்னிருக்கும் காரணம்.
தீபாவளிக்கு முந்தையநாள் ஊரில் இருக்கும் பலரிடம் கறி தருவதாகச் சொல்லிப் பணம் வசூலிக்கிறார் வெள்ளைச்சாமி. அவரைப் பொறுத்தவரை, அடுத்தநாள் காலையில் அதனைச் செய்யாவிட்டால் கௌரவப் பிரச்சனையாகிவிடும் என்று கருதுகிறார்.
வெள்ளைச்சாமியின் மகனும் அவரது தங்கை மகளும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஆனால், இரு குடும்பத்தினரும் அதனை ஏற்கத் தயாராக இல்லை. அதையடுத்து, தீபாவளிக்கு முன்னதாக இருவரும் ஊரைவிட்டுக் கிளம்பிச் சென்று திருமணம் செய்யத் திட்டமிடுகின்றனர்.
இதற்கு நடுவே, நான்கு பேர் அக்கம்பக்கத்து ஊர்களில் திருட்டுச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடப் பெரிதாகத் திருட்டை நடத்த வேண்டுமென்பது அவர்களது எண்ணம்.
இப்படிப் பல பேரின் தீபாவளிக் கனவுகளனைத்தையும் திசை மாற்றுகிறது கருப்பு எனும் அந்த ஆடு. தீபாவளிக்கு முந்தைய இரவில் அது காணாமல் போகிறது.
அதன்பிறகு செல்லையா, கதிர் மட்டுமல்லாமல் இதர மனிதர்களின் வாழ்வும் என்னவானது என்று சொல்கிறது ‘கிடா’.
‘சிறுவனும் கிடாவும்’ என்று கதை சொல்லத் தொடங்கினாலும், இடைவேளைக்கு முன்னதாகவே மற்ற பாத்திரங்களின் பிரச்சனைகளையும் விலாவாரியாக விளக்கிவிடுகிறார் இயக்குனர் வெங்கட்.
அதன் பலனாக, கடைசி அரை மணி நேரக் காட்சிகள் நம் கண்களைக் கலக்கத்தில் ஆழ்த்துகின்றன.
‘பீல்குட்’ அனுபவம்!
மறைந்த நடிகர் ‘பூ’ ராமுவுக்கு இது பெயர் சொல்லும் படம். வழக்கம்போல, அவர் ஒவ்வொரு காட்சியிலும் வாழ்ந்த உணர்வை உண்டுபண்ணுகிறார்.
அவரது மனைவியாக நடித்த பாண்டியம்மா, மிகச்சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். தனக்குத் தெரிந்த ஒரு பெண்மணியிடம் அவர் உதவி கேட்டு செல்லும் காட்சி, காணும் ரசிகர்களைக் கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்தும்.
பேரன் கதிராக நடித்திருக்கும் தீபன், தான் ஒரு புதுமுகம் என்பதை நிரூபிக்கிறார். அதேநேரத்தில், அவரது முகத்தில் தெரியும் குழந்தைத்தனம் படத்தைக் காப்பாற்றுகிறது.
காளி வெங்கட் – விஜயா ஜோடி இந்த படத்தின் இன்னொரு சிறப்பம்சம். அவர்கள் மட்டுமல்லாமல், கறிக்கடை இஸ்லாமியர் மற்றும் அவரது மகனாக வருபவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இளம் ஜோடிகளாக நடித்தவர்கள், டீக்கடைக்காரர், மிட்டாய் தயாரிப்பாளர், நான்கு திருடர்கள் என்று இரண்டு டஜனுக்கும் மேற்பட்டோருக்கு இதில் வசனம் பேசி நடிக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பெரும்பாலும் அது நேர்த்தியாக அமைந்துள்ளது.
கிராமத்தைக் கதை என்றால் ஒளிப்பதிவு பசுமையைக் காட்ட வேண்டும் என்பது கட்டாயம். அதே நேரத்தில், காட்சிகளின் தன்மைக்கேற்ற உணர்வைத் திரையில் கொண்டு வரப் பாடுபட்டிருக்கிறது எம்.ஜெயபிரகாஷின் ஒளிப்பதிவு.
ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பானது வெகுசீராகத் திரையில் கதை விரிய வழி வகுத்திருக்கிறது.
மிக அவசியமான இடங்களில் விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர்களோடு சேர்ந்து குளத்தில் ஆடு குதிக்கும் காட்சி அதற்கொரு உதாரணம்.
கே.பி.நந்துவின் கலை வடிவமைப்பில் படம் முழுக்க ‘நேட்டிவிட்டி’ மின்னுகிறது. ‘இது ஒரு திரைப்படம்’ என்று மனம் உணராத அளவுக்கு, திரையில் ‘ஜிகினாத்தனம்’ தெரியாமல் பார்த்துக் கொண்டிருப்பது சிறப்பு.
இசையமைப்பாளர் தீசன் இதில் அரும்பெரும் பணியொன்றைச் செய்திருக்கிறார். பின்பாதிக் காட்சிகளில் நம் மனம் நெகிழ்ச்சியில் ஆழும் வகையில் பின்னணி இசையைத் தந்திருக்கிறார். ‘கண்ணே நீ அழுதா மனம் தாங்குமா’ பாடல் சட்டென்று நம்மை ஈர்க்கிறது.
முதல் அரை மணி நேரத்தைத் தவிர்த்துவிட்டுப் படம் பார்த்தாலும், நமக்குக் கதை தெளிவாகத் தெரியும். குறிப்பாக, தொடக்கத்தில் வரும் பத்து நிமிடக் காட்சிகள் ரொம்பவே ‘கிளிஷே’வாக தெரிகின்றன.
அதுவும் தவிர்த்து, படம் முழுக்க வரும் பாத்திரங்கள் அனைத்தும் முழுக்க ‘நேர்மறையாகவே’ உள்ளன. அதனை ஏற்றுக்கொண்டால் படம் ரொம்பவே பிடிக்கும்.
முன்பாதியில் இடம்பெற்ற கதை மாந்தர்களின் பிரச்சனைகளை அறிந்தபிறகு, அதற்கான தீர்வுகளும் இப்படித்தான் இருக்குமென்ற எதிர்பார்ப்பும் நமக்குள் பெருகுகிறது. அது கொஞ்சம் கூடப் பிசகுவதில்லை.
அதேநேரத்தில், நாம் எதிர்பார்க்கும் தீர்வுகளையும் இயக்குனர் சொல்லவில்லை. அதுவே, இந்த ‘பீல்குட்’ படத்தை ரசிக்கத் துணை நிற்கிறது.
மனதைத் தொடும்!
குழந்தைகளையும் பெரியவர்களையும் மையப்படுத்தி, உலகம் முழுக்கப் பல படங்கள் வெளிவந்திருக்கின்றன.
அவையனைத்துமே, மனிதர்கள் பணம் இல்லாமல் படும் கஷ்டங்களையே பெரும்பாலும் பேசியிருக்கின்றன. அதையே ‘கிடா’வும் செய்திருக்கிறது. நம் மனதைத் தொடுகிறது.
கிடா ஒரு எளிமையான படம். கதைப்போக்கு, கதாபாத்திரங்களின் பிரச்சனைகள், சொல்லப்படும் தீர்வுகள் என்று அனைத்துமே சினிமாத்தனமாக உள்ளன.
ஆனால், ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வே எழாத வகையில் திரையில் யதார்த்தத்தை நிரப்பியிருக்கிறார் இயக்குனர் வெங்கட். அது, எளிதில் சாத்தியப்படாத ஒரு திறமை. அதற்காகவே, கிடாவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
இந்த படத்தில் கடைசி அரை மணி நேரக் காட்சிகள் நம் கண்களைக் கலங்க வைக்கும்.
அதன் வழியே, ஒரு மனிதர் இன்னொருவருக்குச் செய்யும் உதவியாலேயே இந்த உலகம் வாழ்கிறது என்று சொல்கிறது.
இது நாம் அறிந்ததுதான் என்றபோதும், ‘அவனவன் பொழப்பை பார்க்குற காலத்துல இதெல்லாம் நடக்குமா’ என்று கடந்துபோகவும் வாய்ப்பிருக்கிறது.
அவ்வாறில்லாமல், அனைத்து மனிதர்களும் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையைக் கைக்கொண்டால் மட்டுமே அச்சமூகம் உயிர்ப்புடன் இருக்கும் என்று சொல்கிறது ‘கிடா’.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளையொட்டி வெளியாகும் திரைப்படங்கள் குடும்பத்தோடு பார்க்கத்தக்க வகையில் கொண்டாட்டத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல், அந்த பண்டிகைகளைச் சாதாரண மக்கள் எப்படிப்பட்ட திண்டாட்டங்களுடன் எதிர்கொள்கின்றனர் என்று சொல்லும் படங்களும் கூட ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும். அதில், ‘கிடா’ இரண்டாவது வகை. பல
திண்டாட்டங்களுக்கு நடுவே கொண்டாட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மனித வாழ்வில் இது போன்ற படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு.
– உதய் பாடகலிங்கம்