ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகம் எனும்போது, ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பு உருவாகும். அதனைப் பூர்த்தி செய்வதற்கான முக்கியத் தகுதி, முந்தைய பாகத்தில் இருந்த எதுவுமே அதில் இடம்பெறக் கூடாது. அதேநேரத்தில், இரண்டும் ஒரே அச்சின் மீது வார்த்தது போன்று தோற்றமளிக்க வேண்டும்.
திரைக்கதை உள்ளடக்கத்தை மாற்றியமைப்பதுதான் அதற்கான ஒரே வழி. அது தேவையில்லை என்பவர்கள் முந்தைய பாகத்தை அப்படியே மீண்டும் ஒருமுறை உருவாக்குவார்கள்.
ஜிகர்தண்டா தந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தற்போது அதன் அடுத்த பாகமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தந்திருக்கிறார். இப்படம் நமக்கு எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது? முந்தைய பாகத்தில் இருந்து முற்றிலுலுமாக இது வேறுபட்டிருக்கிறதா?
திசைமாறும் கதை!
காட்டு வளங்களைக் கொள்ளையடிக்கும் ஒரு கொடூர கும்பலைக் காட்டுவதில் இருந்து ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைக்கதை தொடங்குகிறது.
அதன்பிறகு, கிருபாகரன் (எஸ்.ஜே.சூர்யா) என்ற அப்பாவி இளைஞன் ஒரு கொலைப்பழியில் சிக்குவதைக் காட்டுகிறது. சப் இன்ஸ்பெக்டராக தேர்வான நிலையில், அவர் சிறைத்தண்டனை பெறுகிறார். அவரது வாழ்வே முற்றிலுமாகச் சிதைகிறது.
அதனைச் சமாளிக்க, அவர் டிஎஸ்பி ரத்னகுமார் (நவீன் சந்திரா) உதவியை நாடுகிறார். கார்மேகம் ஆட்களைக் கொல்வதற்காக, போலீஸ் அதிகாரியாகத் தேர்வு பெற்றபிறகு சிறைத்தண்டனை அடைந்த கைதிகள் நால்வரைத் தேர்ந்தெடுக்கிறார் ரத்னகுமார்.
அந்த வகையில், மதுரையைச் சேர்ந்த அலியாஸ் சீசரை (ராகவேந்திரா லாரன்ஸ்) கொல்லுமாறு கிருபாகரனிடம் கூறுகிறார். ’அதில் தோல்வியுற்றால் சாவு நிச்சயம்’ என்று எச்சரிக்கிறார்.
வேறு வழியில்லாமல் அதனை ஏற்றுக்கொள்கிறார் கிருபாகரன். அந்த நேரத்தில், அலியாஸ் சீசர் ஒரு படம் தயாரிக்கப் போவதாக ஒரு விளம்பரம் வெளியாகிறது.
படம் இயக்கும் சாக்கில், சீசரைக் கொல்லத் திட்டமிடுகிறார் கிருபாகரன். அதற்காக, உதவி இயக்குனர் துரைப்பாண்டியின் (சத்யன்) உதவியை நாடுகிறார். இருவருமாகச் சேர்ந்து சீசரைச் சந்திக்கின்றனர்.
ரே தாசன் என்ற பெயரில் சீசரிடம் அறிமுகமாகும் கிருபாகரன், அவரைக் கொல்லச் சில முயற்சிகளை மேற்கொள்கிறார். அதில் வெற்றி பெற்றாரா? திரைப்படக் கலை பற்றி எதுவுமே தெரியாமல் அவரிடம் மாட்டிக்கொண்டாரா? என்ன நடந்தது என்று சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
உண்மையைச் சொன்னால், வனவளங்களைக் கொள்ளையடிக்கும் கும்பலைச் சுற்றித்தான் இரண்டாம் பாதி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அறிமுகத்தை மட்டுமே முதல் காட்சியில் தருகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
போலவே, ‘ஜிகர்தண்டா’ திரைக்கதையின் ஒருவரிக் கதையை அப்படியே எடுத்தாண்டு, உள்ளடக்கத்தை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார். அதுவே, மிக மெதுவாக நகரும் இப்படத்தைத் தொடர்ந்து பார்க்கும் உத்வேகத்தை அளிக்கிறது.
லாரன்ஸின் ‘பெஸ்ட்’!
’நான் தரலோக்கல் தெரியுமா’ என்று ‘உதார்’விடும் ராகவேந்திரா லாரன்ஸ், ‘காஞ்சனா’ சீரிஸ் படங்களில் மட்டுமே சுவாரஸ்யம் தந்து வந்தார். அதனை மாற்றியமைத்திருக்கிறது, இதில் அவர் ஏற்றிருக்கும் அல்லியன் என்ற அலியாஸ் சீசர் பாத்திரம். முந்தைய படங்களைக் கொஞ்சமும் நினைவூட்டாமல், ‘அவரது நடிப்பில் இதுதான் பெஸ்ட்’ என்று சொல்ல வைக்கிறார்.
லாரன்ஸுக்கு இணையாகப் படம் முழுக்க வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. அப்பாவியாக இருந்து வீரனாகும் பாத்திரம் எல்லா ஹீரோக்களுக்கும் பிடித்தமானது. அப்பாத்திரத்தை மிகச்சிறப்பாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக, லாரன்ஸை முதன்முறையாகச் சந்தித்து கதை சொல்லி படம் இயக்கும் வாய்ப்பைப் பெறும் காட்சியில் தியேட்டரே அல்லோகலப்படுகிறது.
லாரன்ஸின் மனைவி மலையரசியாக வரும் நிமிஷா சஜயன், திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு. ஆனால், ஒரு ரவுடியின் மனைவி எனும் விஷயத்தை அழகாகத் திரையில் வெளிப்படுத்துகிறார்.
லாரன்ஸ் – நிமிஷாவின் தந்தையராக நடித்தவர்களும் நிறைவைத் தருகின்றனர். சத்யன் முன்பாதியில் ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டுகிறார். ஷைன் டாம் சாக்கோவும் நவீன் சந்திராவும் வில்லத்தனமாக பாத்திரங்களில் வந்து போகின்றனர். இளவரசுவும் அப்படியே.
இன்னும் திரையில் முகம் காட்டியவர்கள், பின்னணியில் வருபவர்கள் என்று பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
எழுபதுகளில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்ட கதைக்குத் தன் ஒளிப்பதிவால் நியாயம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. பல பிரேம்களில், அதன் பிரமாண்டத்தை நாம் உணர வகை செய்திருக்கிறார். இரண்டாம் பாதி முழுக்கக் காட்டில் நடைபெறுகிறது என்பது பிடிபடும்போது, அவரது உழைப்பின் மகிமை புரிகிறது.
வெவ்வேறு விதமான களங்களைக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கேற்ப கடுமையாக உழைத்திருக்கிறது தயாரிப்பு வடிவமைப்பாளர் டி.சந்தானம் குழு. கலை இயக்குனர்கள் பாலசுப்பிரமணியம், குமார் கங்கப்பன் ஆகியோர் சந்தானத்தின் கற்பனைகளுக்கு உரு தந்திருக்கின்றனர்.
காட்சிகள் வெகு நீளம் என்பதால், ரசிகர்கள் பொறுமையை இழந்துவிடாத வண்ணம் அவை நகர மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷஃபீக் முகம்மது. எஸ்.ஜே.சூர்யாவின் பாத்திரம் வெவ்வேறு முடிவுகளை நோக்கி நகர்வதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் திரையில் கதை சொல்லவும் உதவியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் வெகுநாட்களுக்குப் பிறகு கொண்டாடத்தக்க இசையை இதில் வழங்கியிருக்கிறார். ‘மாமதுரை’ வகையறா துள்ளல் பாடல்களோடு, கிளைமேக்ஸ் காட்சிகளில் கலங்க வைக்கும் பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒவ்வொரு காட்சியும் செறிவாக அமையும் வகையில் ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, சண்டைப்பயிற்சி, நடனம் என்று பல நுட்பங்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதுவே, கார்த்திக் சுப்புராஜ் மீது மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அந்த உழைப்புக்கு நிச்சயம் ரசிகர்கள் வெகுமதி தருவார்கள்.
’பாண்டியா’ பிலிம்!
ஜிகர்தண்டாவில் வந்த சித்தார்த், பாபி சிம்ஹா பாத்திரங்களுக்கும், இதில் இடம்பெற்றுள்ள எஸ்.ஜே.சூர்யா, ராகவேந்திரா லாரன்ஸ் பாத்திரங்களுக்கும் பெரிதாக ஒற்றுமை கிடையாது. ஆனால், தோராயமாகப் பார்த்தால் சில ஒற்றுமைகளைச் சொல்ல முடியும்.
இப்படங்களின் காட்சியமைப்பும் திரைக்கதை நகர்வும் கூட அவ்வாறே உள்ளன. அதனால், ’அச்சு அசலாக முதல் படம் போலவே உள்ளது’ என்று ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸை’ சொல்லிவிட முடியாது.
பான் இந்தியா திரைப்படம் என்ற வார்த்தை ‘பாகுபலி’க்கு பிறகே புழக்கத்தில் உள்ளது. ஆனால், அப்படியொரு நிலைமையை ‘சந்திரலேகா’ என்றோ உருவாக்கிவிட்டது. அதனை விமர்சிக்கும் வகையில், அந்த சொல்லாடலை பாண்டியா என்று லாரன்ஸ் உச்சரிப்பதாக இதில் ஒரு காட்சி உள்ளது.
இந்த படத்தின் திரைக்கதையையும் பாத்திர வார்ப்பையும் யதார்த்தத்திற்கு நெருக்கமானதாகக் கருத முடியாது. ஏனென்றால், இதில் லாஜிக் சார்ந்த கேள்விகளுக்குப் பதில்களே இல்லை.
நிஜத்தைச் சொல்லும் கண்ணாடியாக இல்லாதபோதும், அதனை நவீன ஓவியமாகத் திரையில் வார்க்க முயன்றிருக்கிறார் இயக்குனர். அதில் சமகால சமூக நிகழ்வுகள் மட்டுமல்லாமல், திரைப்படங்களின் உள்ளடக்க வளர்ச்சியும் கூட கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவின் ‘கூ க்ளக்ஸ் க்ளான்’ குழுக்கள் போன்று, இதில் வனக்கொள்ளையில் ஈடுபடும் கும்பலைக் காட்டியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இக்கதையில் ஒரு பெண் முதலமைச்சரைக் காட்டுவது உட்படச் சில அரசியல் நிகழ்வுகளும் கலந்துள்ளன. இதுநாள்வரை சினிமாக்களில் காட்டியது போலவே பழங்குடியினரைப் பயன்படுத்தியிருக்கிறார். இவையெல்லாம் நிச்சயம் விமர்சனங்களைக் கிளறும்.
அதேநேரத்தில், ‘சினிமாவோட பவர் என்னன்னு தெரியுமா’ என்ற கேள்வியை அழுத்தம் திருத்தமாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு சிறப்பான திரைப்படத்தின் வழியாக மிகச்சில மனிதர்களிடம் குறிப்பிட்ட அளவில் மாற்றங்களை உருவாக்க வாய்ப்புண்டு.
சினிமா மட்டுமல்லாமல், எந்தவொரு கலைக்கும் குறிப்பிட்ட அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி உண்டு. அதுவே, மக்களை ஈர்ப்பதற்காக அவற்றைப் பயன்படுத்தவும் காரணமாக உள்ளது. அதனை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாகவும், இந்திய சினிமாவை சார்ந்த அனைவரையும் பெருமைப்படுத்தும்விதமாகவும் கிளைமேக்ஸ் நிமிடங்களை வடிவமைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
ஸ்பாய்லர் என்றபோதும் இதனைச் சொல்ல வேண்டியது கட்டாயம் என்று எண்ணுகிறேன். இந்த படத்தில் ‘கிளிண்ட் ஈஸ்ட்வுட்’ ஒரு பாத்திரமாகத் தோன்றியிருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் திரையில் ஓட, ராகவேந்திரா லாரன்ஸ் நடுவே தோன்றுவதாகக் காட்சிகள் உள்ளன.
கிளைமேக்ஸில் அதையே வேறுவிதமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அது புதிதல்ல என்றபோதும், ராகவேந்திரா லாரன்ஸின் ஹீரோயிசத்தை மேலும் ஒரு படி உயர்த்தும் காட்சி அது.
தமிழ் திரையுலகில் உள்ள நாயகர்கள் அதனைச் சரியாகப் புரிந்துகொண்டால், வெகுசிறப்பான ‘மல்டிஸ்டார்’ படங்கள் வருங்காலத்தில் வெளியாக வாய்ப்புகள் அனேகம். அதற்காகவே, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குழுவுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்!
- உதய் பாடகலிங்கம்