தகர்ந்தது சுவர்; தழுவின சுற்றங்கள்!

உலக வரலாற்றில் சர்வாதிகாரி என்ற அடைமொழியுடன் ஜெர்மனியை அடைகாத்து வந்த நாஜிக்‍ கட்சியின் தலைவரான அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலினின் செம்படைகளிடம் வீழ்ச்சியை சந்தித்தபின், அரசியல் நிர்பந்தங்களால் போட்ஸ்டாம் (Potsdam) ஒப்பந்தத்தின்படி, கிழக்‍கு என்றும், மேற்கு என்றும் ஜெர்மனி இரண்டாக கூறுபோடப்பட்டது.

அமெரிக்‍கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் செல்லப்பிள்ளையாக மாறிய மேற்கு ஜெர்மனி, பொருளாதாரத்தில் பொலிவுபெற தொடங்கியது.

சிவப்பு எண்ணத்தில் அதே நிற வண்ணத்தில் கிழக்‍கு ஜெர்மனியை சோவியத் சித்தாந்தங்கள் அடைகாத்து வந்தன.

வல்லரசுகளின் வளர்ப்பு பிள்ளையாக நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் கொழுகொழுவென வளர்ந்துவந்த மேற்கு ஜெர்மனியின் வனப்பு, வறுமையின் முகவரியில் வசித்துவந்த கிழக்‍கு ஜெர்மனியின் ஏழை-எளிய மக்‍களை ஏங்க வைத்தது. மேற்கு ஜெர்மனியை நோக்‍கி தங்கள் காலடியை எடுக்‍க வைத்தது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து சோவியத் தலைவர் ஜோசஃப்ஸ்டாலின், போலந்து, ஹங்கேரி மற்றும் செகோஸ்லோவாக்‍கியா ஆகிய நாடுகளுக்‍கு தலைமை தாங்கி, தனது கட்டுப்பாட்டில் இருந்த கிழக்‍கு ஜெர்மனியுடன் இணைந்து பராமரிக்‍க விரும்பினார்.

ஆனால் கிழக்‍கு ஜெர்மனி நிலையோ வேறாக இருந்தது. சோவியத் யூனியனால் ஆக்‍கிரமிக்‍கப்பட்ட கிழக்‍கு ஜெர்மனியில் வாழும் பெரும்பாலானோர், சுதந்திர காற்றை சுவாசிக்‍க விரும்பினர்.

ஆக்‍கிரமிக்‍கப்பட்ட மண்டல எல்லையை சாதகமாகப் பயன்படுத்தி, மேற்கு ஜெர்மனிக்‍கு குடியேறத் தொடங்கினர் கிழக்‍கு ஜெர்மனி மக்‍கள்.

1953-ம் ஆண்டு முதல் 6 மாதங்களில் மட்டும் 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் வெளியேறினர்.

கிழக்‍கு ஜெர்மனி மக்‍கள், மேற்கு ஜெர்மனிக்‍கு புலம் பெயர்வதைத் தடுக்‍க, பெர்லின் சுவர் எழுப்புவதற்கு 1961ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி கால்கோள் விழா நடத்தப்பட்டது.

கிழக்‍கையும் மேற்கையும் பிரிக்‍கும் நிரந்தர சுவரானது பெர்லின் சுவர். ஆனால் உறவுகளும், அவற்றின் உண்மையான அன்புக்‍கும் முன்னால் சுவர் என்ன செய்துவிட முடியும்?

சுவர் வேண்டுமானால் செங்கற்களால் கட்டப்பட்டிருக்‍கலாம்… ஆனால், உறவுகள் அதைவிட வலிமையான அன்பால் கட்டப்பட்டதல்லவா!

கிழக்‍கு ஜெர்மனியிலிருந்து மக்‍கள் சுத்தியல் மற்றும் உளிகளைக்‍ கொண்டு சுவரை தகர்த்தனர்.

இந்த மக்‍கள் “Mauerspechte” (சுவர் மரங்கொத்திப்பறவை) என செல்லப் பெயரிட்டு அழைக்‍கப்பட்டனர்.

இந்த சுவரை தகர்க்‍க ஒருவார காலம் ஆனாலும், சுவரின் மீது நவம்பர் 9ம் தேதிதான் (1989) முதல் அடி விழுந்தது. சுவர் என்ற பெயரில் எழுந்து நின்ற எதேச்சதிகாரம், ஏகாதிபத்யத்தின் மீது சரித்திரம் கொடுத்த முதல் சம்மட்டி அடி.

வீரம், சோகம், பிரிவு, ஏக்‍கம், போர், வெற்றி, வீழ்ச்சி என தனி மனிதன் மற்றும் சாம்ராஜ்ஜியங்களின் உணர்வுகளை சரித்திரம் பதிவு செய்ய மறந்ததில்லை.

இந்தப் பதிவுகளில் சில நம்மை பாதிக்‍கத்தான் செய்கின்றன.

பிரிந்த பின் ஒன்றுகூடும் மக்‍களின் உணர்வுகளை மிகத் துல்லியமாக வரலாறு பதிவு செய்து வைத்திருக்‍கிறது.

அதுதான் பல காலமாய் ஜெர்மானிய மக்‍களை பிரித்து வைத்திருந்த பெர்லின் சுவர், அந்தச் சுவரே ஒற்றுமைக்‍கும் வழிகோலியது… அன்பிற்கும் உண்டோ அடைக்‍கும்தாழ்…

சுவர் தகர்ந்தது… மனிதம் மலர்ந்தது… உறவுகள் ஆரத் தழுவின… பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ…

(ஜெர்மனியின் பெர்லின் சுவர் உடைக்‍கப்பட்டு ஜெர்மனி ஒன்றிணைந்த வரலாற்றுச் சுவடுகள் பதிந்த தினத்தை (நவம்பர் 9, 1989) நம்மால் எளிதில் மறக்க முடியாது.

✍️ லாரன்ஸ் விஜயன்

Comments (0)
Add Comment