– எம்.எஸ்.உதயமூர்த்தி
சரியான எண்ணங்களை வளர்த்துவிட்டால், சரியானபடி சிந்திக்கத் தொடங்கிவிட்டால் வாழ்வு மகிழ்வுடன் அமையும். வெற்றியால் நிறையும். சாதனைகளால் சிறக்கும்.
எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் ஆணிவேர். எண்ணம் வலிமைமிக்கது. எண்ணம் மகத்தான சக்தி கொண்டது. மகத்தான சாதனைகளைப் புரியவல்லது.
முடியும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மனிதன் நாளடைவில் சாதனைகள் நிறைந்த பெரும் மனிதனாய் மலர்கின்றான்.
நல்ல எண்ணமும் அப்படித்தான். கெட்ட எண்ணங்களும் அப்படித்தான். எண்ணம் ஒரு தீப்பொறிபோல. ஒரு தீப்பொறி விழுந்ததும் முதலில் கனிகிறது. பின் புகைகிறது. பின் ஓகோ என்று எரிகிறது. எண்ணங்களும் அப்படித்தான்.
கோப எண்ணங்கள் நம் உடல்நிலையை மாற்றி நம் சக்தியை வடித்துவிடுகின்றன.
நெருக்கடி ஒரு மனநிலை. தவிப்பு, பயம் போன்ற எண்ணங்கள் உண்டாக்கிவிடும். ஒரு நிலை அது. எண்ணங்களை மாற்றுங்கள். உடல் முறுக்குத் தளர்கிறது. இயல்பான நிம்மதியில் உடல் திளைக்கிறது.
எண்ணங்கள்தான் உணர்ச்சியாக, சக்தியாக, உடலில் மாறுகின்றன. எண்ணங்கள் நமது உடலின் ரசாயன அமைப்பையே மாற்றும் வல்லமை படைத்தவை.
எல்லாவற்றிலும் நோயாளியின் மனநிலையே நம்பிக்கையே நோய் குணமாகக் காரணமாய் இருந்திருக்கின்றன.
எண்ணங்களின் சக்தி நம்மைச் சுற்றி பரவுகின்றது. பிறரின் எண்ண சக்திக்குள் நாம் வரும்போது மாறுபாட்டை உணர்கிறோம்.
எண்ணம் தேக்கப்படவேண்டும். வளர்க்கப்பட வேண்டும். பிறகுதான் அது வலிமை பெறும்.
எண்ணங்கள் நமது உடலை மாத்திரம் பாதிப்பதில்லை. பிற உயிர்களைப் பாதிக்கும். ஊடுருவும் ஏன் உயிரற்ற திட்பபொருள்களைக்கூட ஆட்டிப் படைக்கும் வலிமை படைத்தவை அவை.
உண்மையிலேயே நம்மிடம் பெரிய ஜீவ ரேடியோ இருக்கிறது. மனம் என்ற அந்த ஜீவ ரேடியோ மூலம் நாம் உற்சாகத்தையும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் பரப்பலாம். நாமும் மகிழ்வுடன் இருக்கலாம்.
வாழ்க்கையில் நமக்கு ஒரு இலட்சியம் இருக்கவேண்டும். லட்சியம் ஒரு பெரிய பிடிப்பு.
சமுதாயப் பணி, கல்விப் பணி, எளியவர்களுக்கு உதவுதல் என்று வாழ்வில் ஏதாவது ஓர் அர்த்தம் இருக்கவேண்டும்.
லட்சியங்கள் எல்லாம் மகத்தானவையாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.