இலக்கிய பீஸ்மர் என்றும், இலக்கிய ரிஷி என்றும் போற்றப்படும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனிடம் ஒரு இதழுக்காக கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்.
கேள்வி: வாழ்தலுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
வல்லிக்கண்ணன்: வாழ்க்கை வேறு; எழுத்து வேறு தான். வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது எழுத்து.
ஆனாலும் எழுதுகிறவர்கள் தாங்கள் எழுதுகிறபடிதான் வாழ்ந்தாக வேண்டும் என்ற நியதி எதுவும் இல்லை. அப்படி வாழ்ந்து விடவும் இயலாது.
சொல்லும் செயலும் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும் அப்படி வாழ வாழ்க்கையே அனுமதிப்பதில்லை.
ஒரு உதாரணம்: பொய் சொல்லக்கூடாது; சத்தியமே கடைக்கப்பிடிக்கப் பெற வேண்டும் என்பது உயர்ந்த நோக்கு ஆயினும், இதை அன்றாட வாழ்க்கையும் சமூக நிலையும் ஆதரிப்பதில்லை.
ஒவ்வொரு நபரும் உணரக்கூடிய நடைமுறை இது. யோக்கியமான எழுத்துக்களை எழுதுகிறவன் அயோக்கியத்தனமாக வாழ்க்கை வாழ்வதும் அயோக்கியத் தனமான எழுத்துக்களை எழுதிவிட்டு, யோக வாழ்க்கை நடத்துகிறவனும் எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் இருந்திருக்கிறார்கள்-இருக்கிறார்கள்-இருப்பார்கள்.
கூடுமான வரை, சொல்வதுபோல் செய்வதும், எழுதுவதுபோல் வாழ்வதும் விரும்பத்தக்கது; வரவேற்கத்தகுந்தது. பாராட்டப் படவேண்டியதும் கூட.