இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களுக்கும் பாஜக ஆட்சி இல்லாத மாநில அரசுகளுக்குமான முரண்கள் மேலும் மேலும் வலுத்து வருகின்றன.
பல மாநில முதல்வர்கள், ஆளுநர்களின் அத்துமீறலையோ அல்லது அவர்களின் கனத்த மவுனத்தையோ வன்மையாகக் கண்டித்துக் கொண்டுதானிக்கிறார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு அண்மையில் தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவிக்கு எதிரான ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அந்த அளவுக்கு ஆளுநரின் தலையீடு அதிகரித்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடும் மாறிப் போயிருக்கிறது.
ஆளுநரின் பேச்சுக்கள் இந்துத்துவாவிற்கான பிரச்சார விழாவாக மாறி கொண்டிருக்கின்றன என்பது ஆளுநருக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் மையம்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநில அரசு அம்மாநிலத்தின் ஆளுநரான பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
பன்வரிலால் ஏற்கனவே தமிழ்நாட்டின் ஆளுநராக செயல்பட்டதும் அப்போதும் சில சர்ச்சைகள் உருவானதும் பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ஆளுநர்களின் அதிகார வரம்பு குறித்து சரியான எச்சரிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது.
அதில், “ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியிருப்பது பொருத்தமானதும் அல்ல” என்று எச்சரித்திருப்பதுடன், ஆளுநர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது.
தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்து விடக்கூடாது என்பதை உச்சநீதிமன்றமே வலியுறுத்தியிருப்பது தான் தற்காலத்துக்கு தேவையான அரசியல் அணுகுமுறையாகவும் இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை, எச்சரிக்கையை தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் வரவேற்று இருக்கின்றன.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று இருக்கிற ஆளுங்கட்சி இதழான முரசொலி, “நீயே அயிரை மீன்… உனக்கு ஏன் விலாங்கு சேட்டை… என்று ஒரு முதுமொழி உண்டு. அதனை ஆளுநராக வருபவர்கள் உணர்வது இல்லை” என்று கடுமை காட்டியிருக்கிறது.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 14-க்கும் மேற்பட்ட சட்ட முன் முடிவுகளுக்கு அனுமதி தராமல் தமிழக ஆளுநர் அமைதி காக்கும் நிலையில், உச்சநீதிமன்றம் தற்போது வெளியிட்டிருக்கும் உத்தரவு ஆளுநர்கள் அனைவருக்குமே விடப்பட்ட அறிவுறுத்தலாகவே இருக்கின்றது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் உச்சநீதிமன்றத்தின் இந்த எச்சரிக்கை பொருந்தும்.