‘நகைச்சுவை சக்கரவர்த்தி’ நாகேஷ்!

இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறப் போவதைக் கண்டு அவனுக்கு ஆச்சரிய சந்தோஷம்.

ஆம். சித்ராலயா அலுவலகத்தில் இருந்து போன் வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பன் பாலாஜிக்கு மானசீக நன்றி சொன்னான்.

‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ படப்பிடிப்புத் தளம். படம் முழுவதும் ஒரு மருத்துவமனையில் மட்டுமே நடக்கும். கிராமத்தில் இருந்து வைத்தியம் பார்க்க வரும் ஒரு கிராமத்தான் வேடம் தான் கிடைத்திருக்கிறது. பரவாயில்லை. ஒரு சீன் என்றாலும் போதுமே. படப்பிடிப்புக்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருந்த நேரம்.

கேமராமேன் வின்செண்ட் கேமரா கோணங்களையும், லைட்டிங்கையும் சரி பார்த்துக் கொண்டிருந்தார். “ஏய் இந்தாப்பா இங்க வா, இந்த பக்கமா அப்படியே நடந்து வா” என்று வின்செண்ட் கூப்பிட்டதும் இவனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

ஒரு சிறிய அறையில் ஒரு குழந்தையை தேடுவது தான் காட்சி. இவன் தேடுகிறான், கட்டிலுக்கு அடியில், கதவுக்கு பின்னால், பீரோவுக்கு பின்னால் தேடிவிட்டு தலையணையை தூக்கிப் பார்க்கிறான். டேபிள் ட்ராயரை திறந்து பார்க்கிறான்.

அவனது பாடி லாங்வேஜ் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. இவன் நடிப்பதை கவனித்த வின்செண்ட், இயக்குனர் ஸ்ரீதரை அழைத்து ஏதோ பேச, முடிவில் வார்ட் பாய் ரோலில் அவனே நடிப்பதாக முடிவானது. அந்த அவன் தான், நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ்.

1959-ல் ‘தாமரைக்குளம்’ படத்தில் நடித்திருந்தாலும், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ பீட்டர் என்கிற வார்ட் பாய் கேரக்டர் தான் நாகேஷை தவிர்க்க முடியாத நடிகனாக்கியது.

அதன் பிறகு நாகேஷ் இல்லாத படமே இல்லை. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நாகேஷ் வருகைக்காக காத்திருந்த சம்பவங்களும் நடந்தது வரலாறு.

நாகேஷின் நடிப்பாற்றலுக்கு அவர் ஏற்று நடித்த அழிவில்லாத கதாபாத்திரங்களே சாட்சி. திருவிளையாடல் ‘தருமி’, காதலிக்க நேரமில்லை ‘செல்லப்பா’, அன்பே வா ‘ராமய்யா’, தில்லானா மோகனாம்பாள் ‘வைத்தி’.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த கேரக்டர்களை திரையில் பார்க்கும் போதோ, ஒலிச்சித்திரமாக குரலை கேட்கும் போது கூட ரசிகர்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.

‘நான்’ திரைப்படத்தில் அவர் போட்ட பெண் வேடம் படு பேமஸ். “குமட்டுலேயே குத்துவேன்” டயலாக்கை ரசிக்காதவர்களே கிடையாது. பணக்காரக் குடும்பம் படத்தில் தாத்தா, அப்பா, மகன் என மூன்று வேடங்கள், ஞாபக மறதி எல்ஐசி ஏஜெண்ட் பஞ்சுவாக ‘பூஜைக்கு வந்த மலர்’ படத்தில் அவரின் நடிப்பு அற்புதம்.

திரையில் அவர் சீரியஸாக நடிப்பார் ஆனால் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

புதிய பறவை, பச்சை விளக்கு, சாது மிரண்டால், சோப்பு சீப்பு கண்ணாடி, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, தேன் மழை, நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், அதே கண்கள், உத்தரவின்றி உள்ளே வா, வீட்டுக்கு வீடு… இப்படி எண்ணற்ற படங்கள் நாகேஷின் நகைச்சுவைப் பாத்திரங்கள் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை.

பாலச்சந்தரின் அறிமுகம் நாகேஷின் மற்றொரு பரிமாணத்தை ரசிகர்களுக்கு காட்டியது. சர்வர் சுந்தரம், நீர்குமிழி, எதிர் நீச்சல், மேஜர் சந்திர காந்த், பத்தாம் பசிலி, பூவா தலையா, நவக்கிரகம், நூற்றுக்கு நூறு, தாமரை நெஞ்சம், அபூர்வ ராகங்கள் என தனது படங்களில் தொடர்ந்து நாகேஷை பயன்படுத்தினார் பாலச்சந்தர்.

சின்னஞ்சிறு உலகம், தேன் கிண்ணம், ஹலோ பார்ட்னர், கை நிறைய காசு போன்ற படங்களில் நாகேஷ் நாயகனாக நடித்திருந்தார்.

ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ திரைப்படங்களாக உருவான போது நாகேஷைத் தான் முன்னிறுத்தினார்.

பாலச்சந்தருக்கு பிறகு நாகேஷை தொடர்ந்து பயன்படுத்தியது கமல் தான். முதல் பாராவில் குழந்தையை தலையணையை தூக்கிப் பார்த்து தேடுவது, டேபிள் ட்ராயரில் தேடுவது போன்ற Spontaneous செயல்களுக்கு ஒரு சமகால உதாரணம் அவ்வை ஷண்முகி. கமலுக்கு பெண் வேடம் போட்டு விடும் மேக்கப் மேனாக நாகேஷ் நடித்திருப்பார்.

மீசையை எடுத்தவுடன் கமலுக்கு கண்ணாடி காண்பிப்பார். அதே போல கால் முடியை ஷேவ் செய்தவுடன் காலுக்கு கண்ணாடி காண்பிப்பார். ஸ்கிரிப்டில் இல்லாத ஒன்றை தன்னிச்சையாக போகிற போக்கில் செய்வது அவரது திறமைகளில் ஒன்று. நாகேஷின் பல பரிணாமங்களை வெளிக்கொண்டு வந்தவர் கமல் தான்.

அபூர்வ சகோதரர்களில் வில்லனாக காட்டியவர், மை.ம.கா.ராஜனில் அவினாஷி, மகளிர் மட்டும் படத்தில் பிணம், அவ்வை ஷண்முகி, பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என அவரின் அனைத்துப் படங்களிலும் நாகேஷை பயன்படுத்தியதற்காகவே நாம் கமலுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நாகேஷின் நடிப்பாற்றலுக்கு பெரிய விருதுகள் கிடைக்கவில்லை என்றாலும், நம்மவர் படத்தில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வாங்கினார்.

நாகேஷ், மனோரமா இருவருமே தமிழ் சினிமாவின் மாபெரும் மதிப்பிற்குரிய கலைஞர்கள்.

ஆனால் காலம் இவர்கள் இருவரையும் பிரித்தே வைத்திருந்தது. ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் பரஸ்பரம் பேசுவதை நிறுத்தியவர்கள், கடைசி வரை அப்படியே இருந்து விட்டனர். சமீபத்தில் பாண்டிராஜின் பேட்டியில் கூட இதை பதிவு செய்திருக்கிறார்.

இம்சை அரசன் படத்தில் நடிக்கும் போது பெரும் உடல் உபாதைகளுடன் தான் நடித்திருக்கிறார். தமிழ் சினிமா இன்னும் கொண்டாடியிருக்க வேண்டிய கலைஞர்களில் முதன்மையானவர் நாகேஷ் தான்.

– சரவணன் நடராஜன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது

நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment