உயர்ந்த லட்சியங்களுக்கு இயற்கை துணை நிற்கும்!

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் ‘ஆலாபனை’ என்ற நூல் மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்களை, இன்ப துன்பங்களை, கவலைகளை, சந்தோஷங்களை, அனைத்தையும் ஒரே தராசில் வைத்து நிறுத்திப் பார்க்கும் தத்துவங்களின் தொகுப்பு.

தத்துவங்கள் வாழ்வினில் ஏதோ ஒரு இடர்பாடான சூழலில் ஏற்படும் அல்லது வெளிவரும் சிந்தனைகளின் தொகுப்பு என்றால் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் தத்துவங்கள் எங்கோ எப்போதோ யாருக்கோ வாழ்வின் பாதை அமைத்தும் கொடுக்கும் என்றால் நிச்சயம் தத்துவங்களை வரவேற்கலாம்.

அப்படியான ஒரு வாழ்வின் பாதையில் நமக்கான வழிகாட்டி மைல் கற்களாக இருக்கும் பல்வேறு தலைப்புகளின் கீழான ‘ஆலாபனை’ நம்மை தாலாட்டுகிறது, ஊஞ்சலாட்டுகிறது, கூடவே வந்து வாழ்வை செம்மைப்படுத்துகிறது.

“எனக்குள் இருக்கும் பாடகனும் பித்தனும் எதிரெதிர் மனநிலையில் இருளும் ஒளியும் என என்னை இயக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பித்தன் உண்மையில் இருண்ட பக்கத்தை பார்ப்பவன். அதன் மர்ம மலர்களை முகர்பவன். அவன் சிறகுகளில் இருளின் மகரந்தம்” என்று தனது முன்னுரையில் அப்துல் ரகுமான் குறிப்பிடுவதை பார்க்கும்போது இதில் ஒவ்வொரு தலைப்பும் நமக்கான ஒப்புதல் வாக்குமூலமாக நமது வாழ்வின் பகுதிகளை நாம் சீர்தூக்கி பார்க்கும் அற்புத நிகழ்வாக அமைந்திருக்கிறது என ஆச்சரியப்படலாம்.

முதல் அத்தியாயமான ஒப்புதல் வாக்கு மூலத்தில் உலகத்தின் இயக்கத்திற்கு ஆணிவேராக இருக்கும் பெண்ணைத் தொழுகிறார்.

“எங்களைப் பெறுகிறவள் நீ
எங்களால் இழப்பவளும் நீதான்.

நீ எங்கள் கண்ணாக இருந்தாய்
நாம் உன் கண்ணீராக இருந்தோம்.
சக்தியே!
காலை தூக்கி ஆடி
உன்னை ஜெயித்த
வெட்கங்கெட்ட வரலாறு
எங்களுடையது.
உன்னை அணைப்பதாக
நினைத்துக் கொண்டு
இருண்டு போனவர்கள் நாம்.
உன் பெண்மை என்ற
தெய்வீக நெருப்பில்
எங்களை பரிசுத்தப்படுத்துவாயாக”

– என்ற வரிகளை வாசிக்கையில் உலகத்தின் மொத்த இயக்கமும் பெண்ணில் இருந்து தான் இயங்குகிறது என்பதை அறிய முடிகிறது.

ஆனால் அதே பெண்மையை நாம் சக்தி என்றும் தெய்வம் என்றும் பாராட்டிக் கொண்டே அடிமைப்படுத்தவும் செய்கிறோம்.

அந்த வகையில் ஒப்புதல் வாக்குமூலம் ஒவ்வொருவரும் எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது என அறிவுறுத்துகிறார் கவிஞர்.

விளக்குகள் என்ற தலைப்பிலான ஆலாபனை இதோ,
“நட்சத்திரங்களால் கடவுள் எழுதும் கடிதத்திற்கு
மனிதன் எழுதும் பதில் கடிதத்தின் எழுத்துக்களா நீங்கள்?

கறுப்புச் சந்தையில் மட்டும் செலாவணி ஆகும் நாணயங்களோ நீங்கள்?”
எரியவும் எரிக்கவும் எங்களுக்கு தெரியும்
ஆனால் உங்களைப் போல் ஒளி கொடுக்க மட்டும் தெரியவில்லையே!

– என்று விளக்குகளை பார்த்து வினா தொடுக்கிறார்.

எல்லாம் தெரியும் என்ற மனதில் இருக்கும் மனிதன் விளக்குகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஒளி கொடுக்கும் பண்பை. ஆனால் கற்றுக் கொண்டது என்னவோ எரியவும் எரிக்கவும் மட்டுமே என்ற உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது இக்கவிதை.

கனவு என்ற தலைப்பிலான கவிதையின் முடிவில், “வாருங்கள் கனவுகளால் வாழ்கிறவர்களை வாழ்த்துவோம். கனவுகளில் வாழ்கிறவர்களுக்காக அனுதாபப்படுவோம்” என்று முடிக்கிறார்.

ஆம், கனவுகளை நேசித்து கனவுகளை துரத்திக் கொண்டு ஓடும் ஒவ்வொரு மனிதர்களும் வாழ்வின் வெற்றி எனும் சிகரத்தை அடைய முடிகிறது.

ஆனால் கனவு கண்டு கனவுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எதை நோக்கி நகர்கிறோம் என்பதை அறியாமல் அப்படியே நிலைத்து நின்று விடுகிறார்கள்.

“எனக்கும் வானத்திற்கும் போட்டி நடந்தது.
வானம் எதை எதையோ எடுத்து வைத்தது.
வைகறையை கொடுத்தது.
மழையை கொடுக்கிறது.
நட்சத்திரங்களை தருகிறது.
வெயிலை, நிலவை, மேகங்களை,
மின்னலை, இடியை, வானவில்லை,
கிரகணங்களை, புயலை என
வானம் என்னுடன் போட்டிக்கு
நிறைய எடுத்து வைத்தது.
இறுதியில் நான் புதுப்புது லட்சியங்களை
நோக்கி நடக்கும் என் பாதங்களை எடுத்து வைத்தேன்.
வானம் தோற்றது”

– என்று மனிதனின் லட்சியங்கள் எல்லா பொருளையும் விட உயர்ந்ததாய் இருந்தால் நிச்சயம் வானம் அடிபணியத்தான் செய்யும் என்பதை விரித்துரைக்கிறார்.

“எங்களை மன்னித்து விடுங்கள் குழந்தைகளே! உங்கள் விரல்களை நாங்கள் பிடித்துக் கொள்கிறோம். எங்களை உங்கள் தேவ தேசத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்”

– என்று குழந்தைகளிடத்தில் விண்ணப்பம் வைக்கிறார் பௌர்ணமி பிறை என்ற தலைப்பில்.

“தற்செயலாய் ஒருநாள் தொலைபேசியில் தவறான எண்ணில் சிக்கினான் இறைவன். அவனிடம் என்னென்னவோ கேள்விகள் கேட்கிறார் கவிஞர். இறுதியில் அவர் கேட்ட ஒற்றைக் கேள்வி கடவுளையே ராங் நம்பர் சொல்ல வைத்து விட்டது. அப்படியான கேள்வி எது?”

– தவறான எண் என்ற தலைப்பிலான கவிதையை வாசித்துப் பாருங்கள் நமக்கும் புரியும்.

பற்று வரவு என்ற தலைப்பில்
“மரண காற்றில் ஒரு விளக்கை போல் அணைந்து போகாதே, ஓர் ஊதுபத்தியை போல் கொஞ்சம் நறுமணமாவது விட்டு விட்டுப் போ. உன் சாவில் சாம்பலை அல்ல, நெருப்பை விட்டு செல். மண்ணில் ஒரு காயத்தை அல்ல, ஒரு மருந்தை விட்டு செல். ஒரு தடயமும் இல்லாமல் மறைவதற்கு வெட்கப்படு. குற்றவாளி தான் அப்படி செய்வான்”
– என்று நம்மை சிந்திக்க வைக்கிறார் கவிஞர்.

மனிதப் பிறவி என்பது ஆறறிவுடன் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் தாண்டி உயர்ந்த இடத்தில் நிற்கும் என்ற உன்னதத்தை அடைந்திருக்கையில் அந்த பிறவியில் எதைச் செய்தோம் என்பதை வைத்தே ஒவ்வொருவரின் அக அழகு மின்னுகிறது.

அவரைப் பற்றிய புகழும் மதிப்பீடும் உலகத்தில் எடுத்துக்காட்டப்படுகின்றன. அந்த வகையில் பற்று வரவு தலைப்பிலான தத்துவங்கள் மனிதனை மனிதனாக உணர உதவி செய்கின்றன.

இப்படியான பல்வேறு தலைப்புகளின் கீழான தத்துவங்கள் இந்நூலில் பரவிக் கிடக்கின்றன. ஒவ்வொன்றும் நமது வாழ்க்கை பாதைக்கு வழிகாட்டிகளாக அமையும் என்பதில் ஐயமில்லை.

வானத்தின் கண்ணீரும் மழை எனப் பொழிந்து உலகத்தையும் பசுமையாக்குகிறது. உயிர்களுக்கு வழி காட்டுகிறது.

அவ்வகையில் எழுத்துப் பயணம் மனிதர்களின் எண்ணங்களை சீராக்கி இமயத்தின் உச்சியில் கொடி நாட்ட வைக்கும் என்பதை ஆலாபனை நமக்குள் தாலாட்டி கொண்டே இருக்கிறது.

கவிதை நூலுக்கு முதன் முதலாக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ‘ஆலாபனை’ என்ற இந்த நூலுக்குத்தான்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் “முன்பு கலீல் ஜிப்ரானைப் படிக்கும் போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாருமில்லையே என்று ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை.

இதோ அப்துல் ரகுமான் வந்து விட்டார்! இவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் யார் இந்தக் கவிஞன்? என்று உலகம் நிச்சயம் விசாரிக்கும்” என்று கூறுயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூல் : ஆலாபனை
ஆசிரியர்: அப்துல் ரகுமான்
பதிப்பகம்: நேஷனல் பப்ளிசர்ஸ்
பதிப்பு: முதல் பதிப்பு
ஆண்டு: பிப்ரவரி 1995
பக்கங்கள்: 160
விலை: ரூபாய் 60

Comments (0)
Add Comment