எனக்கொரு கனவு உண்டு!

 – எழுத்தாளர் தீபா ஜானகிராமன்

கடந்த நவம்பரில் எனது இணையதளத்தினைத் தொடங்கினேன். இந்த ஒரு வருடத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். யார் வாசிக்கிறார்கள், எண்ணிக்கை என்பதை மனதில் இருத்தக் கூடாது என்பது நோக்கமாகவே இருந்தது.

எதிர்பார்த்ததைவிடவும் தொடர்ந்து வாசிக்கப்படுகிறது. சினிமா குறித்த கட்டுரைகளை கல்லூரி மாணவர்களும் வாசிக்கிறார்கள் எனத் தெரியவந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

இலக்கியம் மற்றும் சினிமாத்துறையில் நான் மதிக்கும் சில ஆளுமைகள் அழைத்துப் பாராட்டியது நான் எதிர்பார்க்காதது.

தளத்தினை தொழில்நுட்பரீதியாக கண்காணிக்கும் இணையதள வடிவமைப்பாளர் தீபன் பாஸ்கரன், ஒருமுறை என்னை அழைத்து, தளத்துக்கு பல இடங்களில் இருந்து ‘அட்டாக்’ வந்திருக்கிறது.

ஏதேனும் ‘சென்சிடிவ்’ ஆக எழுதினீர்களா என்றார். அப்படி எதுவும் அந்த நேரத்தில் நான் எழுதியிருக்கவில்லை. ‘அப்படியெனில் பிரபலமான சைட் ஆக ஆகிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்’ என்றார்.

அதன்பிறகு கூடுதல் கண்காணிப்போடு எனது இணையதளத்தைப் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.

எழுதிப் பதிவிடுவது மட்டுமே என் வேலை, மற்றபடிக்கு எந்தத் தொழில்நுட்பத் தொந்தரவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் தீபன் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி.

தொடர்ந்து எழுத வேண்டியவை அநேகம் இருக்கின்றன. சினிமா குறித்து இரு தொடர்களைத் தொடங்குகிறேன். அதற்கான பணிகளைச் செய்துகொண்டிருக்கிறேன்.

எனக்கொரு கனவு உண்டு. திரைப்படத் துறைக்கென ஒரு இணையதளம் தொடங்க வேண்டும் என்று. சினிமா செய்திகளுக்காக இல்லாமல், இந்தத் துறையின் மீது ஆழமான அக்கறை கொண்டவர்களுக்கான தளமாக அமைய வேண்டும் என விருப்பம்.

அய்யப்பனிடமும், நண்பர்கள் சிலரிடமும் இது குறித்த விரிவான கனவுகளைப் பகிர்ந்திருக்கிறேன். அது எப்போது நிறைவேறுமென தெரியவில்லை. அதற்கு நேரமும், உழைப்பும் முழுமையாகத் தேவைப்படுகின்றன.

அதற்காக சும்மாவேனும் கனவு மட்டுமே கண்டு கொண்டிருக்க முடியாது என்பதால், தொடக்கம் போன்று தொடர்ந்து எனது தளத்தில் எழுதி சினிமா சார்ந்து எழுதி வருகிறேன்.

எழுதப்படப்போகும் தொடர்களும் மிகுதியான நேரத்தையும் உழைப்பையும் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் மூலம் நான் கற்றுக் கொள்கிறேன்.

சினிமாவும் இலக்கியமும் முன்னோடிகளின் தடத்தையும், செயல்பாடுகளையும் கூர்ந்து கவனிக்க வைப்பது. அவற்றை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்பதே நிறைவாக இருக்கிறது.

நன்றி: தீபா ஜானகிராமன் ஃபேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment