ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்து கொடுத்து விட்டார். பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, எச். வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கும் படங்களில் கமல் நடிக்க இருக்கிறார்.
மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தை அவரது மெட்ராஸ் டாக்கீஸ், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கின்றன.
மணிரத்னத்தின் முந்தைய படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த ஜெயம் ரவியும், திரிஷாவும் இந்தப் படத்திலும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
நாயகன் படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படத்தின் தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.
‘தக் லைஃப்’ (Thug Life) என்பது படத்தின் தலைப்பு. இந்தப் படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் டீசரும்’ வெளியிடப்பட்டது.
அந்த வீடியோவில் கமல்ஹாசன், ‘நான் காயல்பட்டினத்தை சேர்ந்தவன்.. என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன். பிறக்கும் போதே கிரிமினல்னு முத்திரை குத்திட்டாங்க’ என ஆக்ரோஷமான குரலில், தனக்கே உரிய ஸ்டைலில் இன்ட்ரோ கொடுத்துள்ளார்.
‘மரணம் என்னை தேடிவந்தது, இது முதல் முறையல்ல கடைசி முறையும் அல்ல’ என பேசியபடி விரோதிகளை துவம்சம் செய்கிறார்.
இந்த டீசர் வெளியான 6 மணி நேரத்தில் 45 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர்.
கமல் – மணிரத்னம் கூட்டணியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘நாயகன்’ படத்தில் கமல்ஹாசன் கேரக்டர் பெயர் சக்திவேல் நாயக்கர் ஆகும்.
இப்போது அவர்கள் இணைந்துள்ள படத்திலும் அதே பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கல்கி மற்றும் எச். வினோத் இயக்கும் படங்கள் முடிந்த பின் ‘தக் லைஃப்’ ஷுட்டிங் தொடங்கும் என தெரிகிறது.
-பாப்பாங்குளம் பாரதி.