ஆயத்த ஆடை மோகத்தால் நலிந்து வரும் தையல் தொழில்!

ஆயத்த ஆடைகள் மோகத்தால் நலிந்து வரும் தையல் தொழில் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை இப்போது காணலாம்.

கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்புவரை நினைத்தவுடன் புத்தாடைகள் எடுக்கும் பழக்கம் பொதுமக்களிடமில்லை.

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட முக்கிய கொண்டாட்டங்களுக்கே புத்தாடை அணிவார்கள்.

அப்போது தையல் கடைகளில் தைப்பதற்கு துணிகள் நிறைந்து காணப்படும். புத்தாடைகள் தைப்பதற்கு கூட்டம் நிரம்பி வழியும்.

வாடிக்கையாளர்களிடம் பெற்ற துணிகளை தைத்துக் கொடுக்க தையல் கலைஞர்கள், பண்டிகையைக்கூட குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் இரவு, பகலாக வேலைப் பார்த்தனர்.

காலப்போக்கில் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப ‘ரெடிமேடு’ என்று சொல்லப்படும் ஆயத்த ஆடைகள் அறிமுகமானதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலான அனைவருக்கும் இந்த ஆயத்த ஆடைகள் கிடைக்கின்றன.

கடைகளுக்கு நேரடியாகச் சென்று, தங்களுக்கு விருப்பமான ஆடைகளை, விரும்பிய கலரில் தேர்வு செய்து, அங்கு உள்ள பிரத்தியேக கண்ணாடிமுன் நின்று உடனே ஆடையை அணிந்து அழகு பார்க்கும் வசதி இருக்கிறது.

இதனால் துணி எடுத்து தைத்து அணியவேண்டும் என்ற பழக்கம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

பெரும்பாலான ஆண் டெய்லர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.

தற்போது ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து விட்ட நிலையில் ஆண்கள் பயன்படுத்தும் ஆடைகள் அனைத்தும் ரெடிமேடாக விற்பனை செய்யப்படுகிறது.

10 சதவீதம் பேர் மட்டுமே தையல் கடைகளில் தைத்து பயன்படுத்துகிறார்கள்.

25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி ஆர்டர்களுக்கு 2 மாதங்கள் வரை இரவு, பகலாக ஆடைகள் தைப்போம். தற்போது நிலைமை மாறிவிட்டது என்றும், அதிகபட்சமாக 10 நாட்கள் தைப்பதற்கு துணிகள் வருவதே அபூர்வமாக உள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு 25 முதல் 30 தையல் மெஷின்களை போட்டு ஆட்களை வைத்து வேலை பார்த்த அவர்கள் தற்போது ஆயத்த ஆடை தையல் கூலிக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு சரிவர கூலி வழங்க முடியாததாலும், தையல் தொழிலில் ஈடுபடுபவர்களும் ஒரு நாளைக்கு 700 ரூபாய் கேட்பதால் தையல் தொழிலை விட்டு மாற்று வேலைக்கு சென்று விட்டனர்.

இதேநிலை நீடித்தால் அடுத்த 10, 15 ஆண்டுகளில் தையல் கலைஞர்களும், தையல் தொழிலும் காணாமல் போய்விடும் என்கின்றனர் தையல் கடை உரிமையாளர்கள்.

என்னதான் ரெடிமேடு ஆடைகள் வந்தாலும், துணியை எடுத்து தையல் தொழிலாளியிடம் தைத்து உடுத்துவதை இன்னும் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் தற்போதும் ஒரு சில டைலர் கடைகள் இயங்கி வருவதை காண முடிகிறது.

ஆனால், ரெடிமேடு ஆடை விலையை காட்டிலும் தையல் தொழிலாளர்கள் கேட்கும் தையல் கூலி அதிகம் என்ற ஆதங்கமும் மக்களிடையே இருக்கிறது.

வரும் காலங்களில் டெய்லர் தொழில் புதுப்பொலிவு பெறுமா? இதனை நம்பி உள்ள டெய்லர்களின் வாழ்வு வளம் பெறுமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment