“உங்களுக்கு நல்லதோர் விடியல் காத்திருக்கிறது. அதை நான் உணர்கிறேன். நிச்சயம் நீங்கள் அதைக் காண்பீர்கள்” இந்த வரிகளைச் சுமந்து ஒரு கடிதம் சிறைச்சாலைக்கு வருகிறது.
குற்றவுணர்வுகளின் கம்பிக் கதவுகளுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் ஒரு தவிப்பு மனதை நலம் விசாரிக்கிறது அக்கடிதத்தின் மிச்சவரிகள். அது, தடா கைதி ஏழுமலைக்கு சுந்தர ராமசாமி எழுதிய கடிதம்!
சித்தாந்தத்திலும் தத்துவத்திலும் முழுக்க முரண்பட்ட ஒரு மனதுடன் தொடர்ச்சியாக, கடிதங்களின் வழியாக அகம்சார்ந்த உரையாடல் வைத்திருந்திருக்கிறார் சுரா.
கடிதங்களுடன் புத்தகங்களையும் வாங்கி சிறைக்குள் ஒரு வாசிப்பினை சாத்தியமாக்கியிருக்கிறார்.
சொந்தப் பணிகளின் பொருட்டு வெளிதேசங்கள் செல்ல நேர்ப்பட்ட சூழல்களிலும், அந்த தடா கைதிக்கு பதில் எழுதி, அனுப்பிவிட்டுப் போகும் ஒரு மனம் சுராவுடையது.
அடிப்படை மனித மனதின் பிரிவுகளற்ற அந்த தன்மையை மட்டுந்தான் சுரா ஏழுமலையிடம் கண்டிருக்கிறார்.
‘சுந்தர ராமசாமி – ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்’ புத்தகத்தை வாசித்துவிட்டு, ஏழுமலையை சந்திக்க தவிப்புக்கொண்டு பெருந்தயக்கத்துக்குப் பின்பு அவருடைய அலைபேசி எண்ணை வாங்கி அவருக்கு அழைத்தேன்.
எளிய அறிமுகத்துக்குப் பின்பு “இப்ப… விழுப்புரத்துல ஒரு டீக்கடையும் அதுல சின்ன புத்தகக்கடையும் வச்சிருக்கேன்” என தனது சமகாலத்தை தெளிவுபடுத்தினார்.
பேசிமுடித்து அலைபேசி இணைப்பைத் துண்டித்த ஓரிரு நொடிகளில் மீண்டும் அழைத்து, “தோழர்… இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? சுந்தர ராமசாமி நினைவுநாள்” எனச்சொன்னபோது என்னுள் கண்ணீர் எழுந்தது.
அவர் அறிமுகமாகி இந்த மூன்று வருடங்களில், வழக்கு விசாரணை தொடர்பாக நிறைய அலைச்சல்களும் உளைச்சல்களும் அடைந்து, ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கு முடிந்து விடுதலை பெற்றார்.
விடுதலையடைந்து வெளிவாசல் நின்று அவர் அண்ணாந்து பார்த்த அந்த உதயம்… தன்னுடைய எத்தனையோ கடிதங்களின் வழியாக சுந்தர ராமசாமி அகமேற்றிய அதே உதயம்தான் என நான் நம்புகிறேன்.
சுந்தர ராமசாமி சொல்வதுபோல, தாழ்வுணர்ச்சியில் கிடக்கும் ஒரு மனதை மீட்டெடுப்பவனுக்கான பரிசை இன்னும் இந்த உலகம் கண்டுபிடிக்கவே இல்லை.
– ஆர்.ஆர்.ஸ்ரீனிவாசன்.