அரசியலுக்கு விஜய் வருவது உறுதி ஆகிவிட்டதா?

விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் வெற்றிவிழா நிகழ்வை சன் தொலைக்காட்சியில் முழுமையாக ஒளிபரப்பியதைப் பார்த்தால் அரசியலுக்குள் அவர் நுழைவதற்கான கதவைத் திறந்துவிட்ட மாதிரி தான் இருக்கிறது.

ஸ்டேடியத்தில் நிறைந்திருந்த அவருடைய ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்பில் இருந்தார்கள். மன்சூர் அலிகான், அர்ஜூன் என்று விஜய்க்கு முன்பு பேசிய பலரும் ‘லைட்’ டாக அரசியல் வருகையைப் பற்றித் தொட்டதுமே ஒரே ஆரவாரம்.

இடையிடையே பாடலும், ஆட்டமும் தொடர்ந்தன.

சுருக்கமாகப் பேசினார் த்ரிஷா.

“கில்லி’ படத்தில் விஜயுடன் நடித்தபோதிருந்து இப்போது வரை அவர் பழகும் விதம் மாறவில்லை” என்றார்.

இயக்குநரான லோகேஷ் கனகராஜூம் பேச்சை அடக்கியே வாசித்தார்.

அதன் பிறகு பாட்டுப் பாடியபடியே விஜய் நடன அசைவுகளுடன் தனது பேச்சைத் துவக்க ஆரவாரமானார்கள் ரசிகர்கள்.

தன்னுடைய  பேச்சில் இரண்டு முறை மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசினார் விஜய்.

சென்னையில் ஒருமுறை ஏ.வி.எம்.சரவண‍ண் காரில் பயணித்தபோது, வழியில் வயதான கிழவிக்கு நூறு ரூபாயைக் கொடுத்த போது “எம்.ஜி.ஆர்’’ என்று சொன்னதைச் சுட்டிக்காட்டி,

எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் யார் எந்த நல்ல செயல்களைச் செய்தாலும், அவர்கள் விஜயின் ரசிகர்கள் என்று சொல்லும் வித‍த்தில் நடந்து கொள்ள வேண்டும் என்றவர்,

தொடர்ந்து ஒரு காடு தொடர்பான குட்டிக்கதை சொன்னபோது, வெகு கணக்காக “கழுகு, காகம்’’ என்று சொல்லி இடைவெளி விட்டபோது, ஏக‍க் கைதட்டல்,

‘’புரட்சித் தலைவர் என்றால் ஒரே புரட்சித் தலைவர் தான்’’ என்று ‘தலை’ வரை பட்டியலிட்டவர் ‘தளபதி’ அடைமொழியைச் சொல்லி, மக்கள் தான் மன்னர்கள் என்றும் சொன்னார்.

2026- குறித்துக் கேட்டபோது பேச்சைத் திசை திருப்பியவர், லோகேஷ் கனகராஜூக்குத் தன்னுடைய அமைச்சரவையில் என்ன பதவி வழங்கலாம் என்பதையும் ”இது கற்பனை தான்’’ என்ற அழுத்த‍த்துடன் சொன்னார்.

அவருடைய பேச்சிற்கிடையே சொன்ன  “அப்பா – சட்டை. வாட்ச், நாற்காலி’’ என்கிற உவமைகள் எல்லாம் சிலேடையாகச் சொல்வதாகப் புரிந்து கொள்ளப்பட்டன.

திரைப்படத்தைத் தாண்டி தனக்கென்று ரசிகர்கள் திரளாக‍க் கூடுவார்கள் என்பதை இந்த விழாவின் மூலமாக‍ வெளிக்காட்டியிருக்கிறார் விஜய்.

சிலச் சிலச் சீண்டல்களை அவர் பேச்சிற்கிடையே செய்தாலும், திரைப்படத்துறை சார்ந்த மூத்த மற்றும் சக நடிகர்களின் ரசிகர்களையும் ஈர்க்க வேண்டும் என்கிற எண்ணத்துடனும் பேசியிருக்கிறார்.

மக்கள் திலகம் துவங்கி ‘தல’ ரசிகர்கள் வரை பலரையும் அவர் விட்டு வைக்கவில்லை,

தி.மு.க. கூட்டணி தற்போது பலம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் ஒரு மாற்று சக்தியைப் போல் தெரிந்த விஜயகாந்தின் தே.மு.தி.க தற்போது தேய்ந்த நிலையில் இருக்கிறது.

ரஜினியை ஒரு மாற்றாக‍க் கொண்டு வருவதற்காகச் சிலர் எடுத்த முயற்சிகளுக்கு அவர் கை கொடுக்கவில்லை. ஒதுங்கிவிட்டார்.

இந்த நிலையில் விஜயை மையமாக வைத்து தி.மு.க.வுக்கான ஒரு மாற்று சக்தியை எப்படியாவது உருவாக்க முடியுமா என்பது சிலருடைய எதிர்பார்ப்பாக இருக்கலாம். அவர்களுக்குத் தேவை – தங்களுக்குச் சௌகர்யமான ஒரு துருப்புச் சீட்டு. அவ்வளவு தான்!

‘ஜோசப் விஜய்’ என்று தன்னை அடையாளப்படுத்தியவர்களைக் கூட, இந்த சமயத்தில் விஜய் ஒருவேளை மறந்து போய்விடலாம்.

துவக்கத்தில் தன்னை ஒரு திராவிட இயக்க ஆதரவாளராக‍க் காட்டிக் கொண்டவர் விஜயின் அப்பாவான இயக்குநர் சந்திரசேகர்.

விஜய் அரசியலுக்கு வர முடிவு செய்துவிட்ட மாதிரித் தென்பட்டாலும், வெற்றிகரமான வணிகப்படப் போட்டியில் இன்று கிடைக்கும் பொருளாதாரத்தை விட்டுவிட்டு, அந்தப் போட்டியிலிருந்து விலகி, அரசியலுக்கு அவர் வருவாரா?

எம்மாதிரியான அரசியலை அவர் கையில் எடுப்பார்?

2026 தான் ஒருவேளை அவருடைய இலக்கு என்றால் 2024 – நாடாளுமன்றத் தேர்தலில் அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்?

பார்ப்போம்.

  • யூகி
Comments (0)
Add Comment