மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், நவம்பர் 7ம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் 5 மாநிலங்களில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மிசோரம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தேர்தலை சந்திக்கின்றன. கிட்டத்தட்ட ‘மினி’ பொதுத்தேர்தல் என சொல்லலாம்.
‘இந்தத் தேர்தல் முடிவுகள், மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் – ’செமி ஃபைனல்’ என்பது அரசியல் நோக்கர்கள் மற்றும் ஊடகங்களின் கணிப்பு.
இந்தக் கருத்துகள், உண்மைதானா? பலிக்குமா? என்பதை கட்டுரையின் இறுதி பத்திகளில் புள்ளி விவரங்களோடு விளக்கியுள்ளோம்.
முதலில், வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள், அங்கே நிலவும் போட்டி, பொறாமைகள், சண்டை, சச்சரவுகளை விரிவாக அலசலாம்.
மிசோரம்
வடகிழக்கு மாநிலமான மிசோரமில், ஜோரம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி எனும் பிராந்திய கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.
40 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் நாளை (நவம்பர் – 7 ஆம் தேதி) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுமே இங்கு வலுவாக இல்லை.
ஆளுங்கட்சியான மிசோ தேசிய முன்னணி மொத்தமுள்ள 40 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
கடந்த தேர்தலில் 5 இடங்களில் ஜெயித்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை 40 தொகுதிகளிலும் தனித்தே நிற்கிறது.
தனித்து போட்டியிடும் பாஜக 23 இடங்களில் ஆட்களை நிறுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக, ஒரே ஒரு இடத்தில் வென்றது.
சத்தீஸ்கர்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகேல், முதலமைச்சராக உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் .
நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலம் என்பதால் இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.
20 தொகுதிகளில் வரும் 7 ஆம் தேதியும், எஞ்சிய 70 தொகுதிகளில் 17 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இங்கு காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மத்திய பிரதேசம்
சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் மத்தியபிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகள் உள்ளன.
அனைத்து தொகுதிகளுக்கும் வரும் 17 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் பாஜக தீவிரம் காட்டுகிறது. ஆனால் எதிரணியில் ஒற்றுமை இல்லை.
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ’இந்தியா’ எனும் கூட்டணியை கட்டமைத்துள்ளன. இதில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மத்தியபிரதேச சட்டமன்றத் தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
’இந்தியா’ அணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும், வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இது, காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான்
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் முதலமைச்சராக இருக்கிறார்.
இங்கு மொத்தம் உள்ள 200 தொகுதிகளுக்கும் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மத்தியபிரதேசம் போன்று இங்கும் ‘இந்தியா’ கூட்டணி, ஒருங்கிணைந்து போட்டியிடவில்லை. காங்கிரஸ் தனித்தே போட்டியிடுகிறது.
’இந்தியா’ அணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும், தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
தெலுங்கானா
ஆந்திராவில் இருந்து பிரிந்து உருவான தனி மாநிலம் தெலுங்கானா. அந்த மாநிலம் அமைக்கப்பட்ட 10 ஆண்டுகளாக சந்திரசேகர ராவ்தான் முதலமைச்சராக இருக்கிறார்.
ஆரம்பத்தில் தனது கட்சிக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) என பெயர் வைத்திருந்தார். தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணத்தில் கொஞ்ச மாதங்களுகு முன்புதான், கட்சியின் பெயரை பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) என மாற்றினார்.
119 தொகுதிகளைக்கொண்ட தெலுங்கானா மாநில சட்டப் பேரவைக்கு 30 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.
பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பாஜக ஆகிய மூன்று கட்சிகளுமே தனித்தனியாக போட்டியிடுவதால், இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
அது வேற… இது வேற:
மக்களவைத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் சட்டமன்றத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. தமிழகத்தில் இருந்தே உதாரணம் எடுக்கலாம்.
1980 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவும், ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எதிர் அணியில் திமுகவும், காங்கிரசும் இணைந்து பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி இருந்தன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றது. அதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயித்தது.
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து அடுத்த, நான்கு மாதங்களில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. அதே கூட்டணி, இந்த தேர்தலிலும் நீடித்தது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளின் தாக்கம் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்திருந்தால், அதிமுக 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்க முடியும்.
ஆனால், அந்தத் தேர்தலில் அதிமுக 129 இடங்களை கைப்பற்றியது. எம்.ஜி.ஆர். இரண்டாம் முறையாக முதலமைச்சர் ஆனார்.
இந்த உதாரணம் மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பொருந்தும்.
புள்ளி விவரங்களோடு பார்க்கலாம்.
மத்தியபிரதேச மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வென்று ஆட்சிஅமைத்தது. பாஜகவுக்கு 109 இடங்கள் கிடைத்தன.
அடுத்த ஆண்டு (2019) மக்களவைக்குத் தேர்தல் நடந்தது. அப்போது தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது. மொத்தமுள்ள 29 எம்.பி. தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. எஞ்சிய 28 தொகுதிகளை பாஜக அள்ளியது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 100 இடங்களில் ஜெயித்து ஆட்சி அமைத்தது. பாஜகவுக்கு 73 இடங்கள் கிடைத்தன.
அடுத்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரசால் வெல்ல முடிந்தது. மீதமுள்ள 24 இடங்களிலும் பாஜகவே வெற்றி பெற்றது.
சத்தீஸ்கரிலும் இந்த கதைதான். 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்று, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 68 தொகுதிகளில் காங்கிரஸ் வாகை சூட, பாஜக வெறும் 15 இடங்களில் மட்டுமே வென்றது.
அடுத்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது.
மொத்தமுள்ள 11 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே காங்கிரஸ் வெல்ல, பாஜக 9 தொகுதிகளில் வென்றது.
ஆக, அரசியலில் நான்கும், நான்கும் எட்டாகாது. பூஜ்யமும் ஆகலாம். நூறும் ஆகலாம்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிகளுக்கு கிடைக்கும் எம்.எல்.ஏ.க்கள் விகிதாச்சாரத்தில், மக்களவைத் தேர்தலில் எம்.பி.க்கள் கிடைக்க மாட்டர்கள் என்பதே அரசியல் கணக்கு.
– பி.எம்.எம்.