ஒரு திரைப்படம் சமூகத்திற்குத் தேவையான கருத்துகளைத் தாங்கி வருவதென்பதே இன்று அபூர்வமாகி விட்டது.
அது, மிகச்சரியாகத் திரையில் பிரதிபலிக்கப்படுவது இன்னும் கடினமான விஷயம். அனைத்துக்கும் மேலே, அப்படியொரு படம் வெளிவருவதற்கு முன்னதாகப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. நா
நாட்டுப்புறப் பாடகி ராஜலட்சுமி செந்தில் கதை நாயகியாக அறிமுகமாகியுள்ள ‘லைசென்ஸ்’ படமும் அதிலொன்றாகச் சேர்ந்திருக்கிறது. தடைகளைக் கடந்து தற்போது தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி உரிமம் வேண்டும்!
அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் பாரதி (ராஜலட்சுமி), சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்பவர். பாதிக்கப்பட்டவர்களைத் தேடிச் சென்று, அவர்களது சட்டப் போராட்டங்களுக்குத் துணை நிற்பவர்.
சிறு வயதில் அவரைப் போலவே காவல்துறை அதிகாரியாக விரும்பியவர், அதன்பிறகு அவரையே வெறுக்கும் அளவுக்குச் சென்றது ஏன்? அதன் பின்னணியிலும், ஒரு பெண்ணின் பாதிப்பு இருப்பது நமக்குப் பிடிபடுகிறது.
இந்த நிலையில், ஒருநாள் துப்பாக்கி உரிமம் வேண்டுமென்று அரசிடம் விண்ணப்பிக்கிறார் பாரதி. அதன் தொடர்ச்சியாக, அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.
இந்த தகவல் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் இருந்து ஊடகங்களுக்குக் கசிய, அது பரபரப்புச் செய்தியாக உருமாறுகிறது.
பாரதியின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை எனும் நிலையில் தற்காப்புக்காக அவருக்குத் துப்பாக்கி வழங்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அதனை எதிர்த்து, அவர் நீதிமன்றத்தை நாடுகிறார். அங்கும் பெண்களுக்கு எதிரான மனப்பான்மை தலைவிரித்தாடுவதைக் கண்டு பாரதி பொங்குகிறார்.
அதன்பின் என்ன நடந்தது? நீதிமன்றம் பாரதிக்குத் துப்பாக்கி உரிமம் வழங்கியதா என்பதைச் சொல்கிறது ‘லைசென்ஸ்’.
ராஜலட்சுமி நடிப்பு எப்படி?
‘லைசென்ஸ்’ படத்தில் ராதாரவி தவிர்த்துப் பெரும்பாலானோர் புதுமுகங்கள் தான். அதில், நாயகி ராஜலட்சுமி பல இடங்களில் ‘பாஸ்’ செய்துவிடுகிறார்.
தொடக்கத்தில் வரும் பாடல், இறுதியாக வரும் நீதிமன்றக் காட்சியில் மட்டுமே அவரது நடிப்பு நம்மை அயர்வுற வைக்கிறது.
‘அறம்’ நயன்தாரா பாணியில் உடையணிவது போன்றவற்றைக் கைவிட்டு இயல்பாகத் திரையில் தோன்றியிருந்தால் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.
‘இதெல்லாம் எனக்கு ஜுஜுபி’ என்பது போல, வெகு இயல்பாகத் திரையில் தோன்றியிருக்கிறார் ராதாரவி.
அரசு வழக்கறிஞராக வரும் ஜீவானந்தம், நீதிபதியாக வரும் கீதா கைலாசம், ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா, அவரது தோழியாக வரும் தன்யா அனன்யா, அவரது தாயாக நடித்தவர், ஒரு காட்சியில் நடித்துள்ள தீபா சங்கர், நமோ நாராயணா, வையாபுரி, பழ.கருப்பையா, புதுமுகம் விஜய் பாரத் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
குழந்தைகள் பிரசிதா, ஸ்ரீமதி, அதிதி பாலமுருகன் நடிப்பு செயற்கையாகத் தெரியவில்லை. ஆனால், தொழில்முறை நடிகர்கள் அல்லாத சிலரைப் பயன்படுத்தியது மட்டுமே, சில நேரங்களில் நம்மைப் படுத்தி எடுக்கிறது.
இது போன்ற படங்களில் செயற்கைப் பூச்சுகள் தென்படாமல், இயற்கை ஒளியில் படமாக்கிய தொனி தெரிய வேண்டும்.
சி.காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவு அதனைச் செய்யவில்லை. அதேநேரத்தில், உணர்வு மிகுமிடங்களில் கதாபாத்திரங்களைக் கச்சிதமாகப் படம்பிடித்திருக்கிறது.
கலை இயக்குனர் சிவ யோகா, தினசரி வாழ்வில் நாம் கண்ணால் பார்ப்பவை அனைத்தும் திரையில் தெரிந்தால் போதும் என்று யோசித்திருக்கிறார்.
பைஜு ஜேக்கப்பின் இசையில் தொடக்கத்தில் வரும் பாடல் துள்ளலைத் தந்தாலும், அது வலிந்து திணிக்கப்பட்டதாகவே உள்ளது. பின்னணி இசையால் அதகளப்படுத்தியிருக்க வேண்டிய இடங்களையும் தவறவிட்டிருக்கிறார்.
வாசகர் காளியப்பன், முரளிராஜன், ஏ.விஜயகுமார் உள்ளிட்டோருடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் கணபதி பாலமுருகன்.
பெண்களால் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை இந்தச் சமூகம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்; இதனைச் சொன்ன வகையில் கவனம் ஈர்க்கிறது இப்படம். ஆனால், பல காட்சிகளில் தென்படும் நாடகத்தனம் இப்படத்தின் பெரிய பலவீனம்.
அதற்கு, அனுபவமில்லாத கலைஞர்களைப் பயன்படுத்தியதும் பட்ஜெட் கட்டுப்பாடுகளுமே காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
கொஞ்சம் கவனித்திருக்கலாம்!
ஒரு பெண் துப்பாக்கி கையிலெடுத்து தான், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியுமா? அதற்கு முன்பாக, அந்த நம்பிக்கையை ஒரு பெண்ணுக்கு ஊட்ட வேண்டியது அவரைச் சார்ந்தவர்களின் கடமை அல்லவா என்பதைப் பேசுகிறது இப்படம். அதனாலேயே முக்கியத்துவம் பெறுகிறது.
அந்தப் புள்ளியில் தொடங்கியிருக்க வேண்டிய திரைக்கதை, பாரதி எனும் பாத்திரத்தை விலாவாரியாக விவரித்ததில் திசை மாறித் தடுமாறியிருக்கிறது.
சில காட்சிகளில் லாஜிக் மீறல்கள் கதை மற்றும் காட்சிகளின் அடிப்படையை அசைத்துப் பார்க்கின்றன. அதையும் மீறிப் படத்தைப் பார்க்கச் சில காரணங்கள் இருக்கின்றன.
பெண் குழந்தைகளைத் தைரியம் நிறைந்தவர்களாக வளர்க்க வேண்டும் என்பதோடு, ஆண் குழந்தைகள் மனதில் பெண்கள் மீது மரியாதைக் குறைவான எண்ணங்கள் இருப்பதை வேரோடு களைய வேண்டும் என்று சொல்லியிருப்பது நன்று.
துப்பாக்கி என்பதைக் குறியீடாக வைத்துக்கொண்டு, பெண்கள் பாதுகாப்பில் நம் பின்னோக்கிச் என்று கொண்டிருக்கிறோம் என்பதையும் இப்படம் குறிப்பிடுகிறது.
மிக முக்கியமாக, ‘சாமானியர்களுக்கு எதற்கு துப்பாக்கி’ என்று சொல்லிக் கொண்டு சமூகத்தில் கேடுகள் புரிபவர்கள் பலர் அதனைத் தங்கள் வசம் வைத்திருப்பதாகவும் காட்டப்படுகிறது.
நிர்பயா வழக்கையடுத்து அரசே துப்பாக்கி உரிமத்தைப் பெண்களுக்காக வழங்குவதாகச் சொன்னதையும், பின்னர் அதனைக் காற்றில் பறக்கவிட்டதையும் கேள்விக்கு உட்படுத்துவதும் திரைக்கதையில் வரும் அற்புதமானதொரு இடம்.
இரண்டு முறை வரும் பிளாஷ்பேக் காட்சிகள், பொதுமக்கள் கருத்துகளைப் பகிரும் காணொளிகள், ‘டெம்ப்ளேட்’டான பாத்திர வடிவமைப்பு, செயற்கைப் பூச்சு நிறைந்த காட்சியாக்கம் போன்றவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சிக் கொஞ்சமாக ‘பட்டி டிங்கரிங்’ செய்திருந்தால் ‘செறிவுமிக்க திரைப்படமாக’ இந்த லைசென்ஸ் மிளிர்ந்திருக்கும்.
‘பிரச்சாரத் தொனியில் உரக்கப் பேசினாலும், கருத்து சொன்னால் போதும்’ என்பவர்கள் தாராளமாக இந்த படத்தைப் பார்க்கலாம்!
– உதய் பாடகலிங்கம்