சிந்தனைத் திணிப்புகளைத் தூக்கியெறிவது கடினம்!

– வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். நம்பிக்கை மொழிகள்

எதைச் செய்தாலும் மகிழ்ச்சியுடன் செய்தால் மனதில் உறுதி ஏற்படும்.
மனதில் உறுதி என்பது உள்ளுணர்வு, சிந்தனை, மொழி, புலனாய்வு உள்ளிட்ட அறிவார்ந்த தொகுப்பே.

பலம், பலவீனம் என்பது அவரவர் மனதளவைப் பொறுத்து அமையும். மனதிற்கான நலம் என்பது ஊக்கப்படுத்துதல் பயிற்சியால் மட்டுமே வலிமைப்படுத்த முடியும்.

தேர்வுப் படிப்பு, போட்டித் தேர்வு போன்ற செயல்களை மகிழ்ச்சியாக அணுகினால் வெற்றி என்பது சாத்தியமாகும்.

வாழ்க்கை என்பது இருத்தலில் இல்லை. அது, நாம் நம்மை மேம்படுத்திக் கொள்வதில்தான் இருக்கிறது.

இளைஞர்கள் பிறரின் இலக்கை தனக்கானதாக தீர்மானிக்காமல் நீங்களாக இதுவாக ஆக வேண்டும் என திடமாக உறுதி ஏற்கவேண்டும். அப்போதுதான் அந்த இலக்கை எளிதில் அடையமுடியும்.

சிந்தனைத் திணிப்புகளை தூக்கியெறிவது கடினம் என்பதால், அவற்றை ஏற்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

கல்வி என்பது வாழ்க்கை முழுவதுக்குமானது. நாம் கற்ற கல்வி, வாழும் வாழ்க்கையில் உணர்ந்து செயல்படுவதற்கானது.

கருணையும் அன்பும் உழைப்பும் ஈகையும் தான் நம்மை வழி நடத்தும். எல்லோரையும் மதியுங்கள். அன்பு செலுத்துங்கள். இந்த மானிட வாழ்க்கையே அன்பிற்கானது.

வாழ்வை புரிந்து கொள்வது என்பது எல்லோரிடமும் பழகுவதிலும், அன்பு செலுத்துவதிலும்தான் இருக்கிறது.

வாழ்க்கை கடினமானது அல்ல, எளிமையானது. நம்பிக்கையுடன், தூய்மையாக, தவறு செய்யாமல் வாழ்ந்தால் வாழ்க்கை அழகானது.

பலர் தாங்கள் எடுத்துக்கொள்ளும் சங்கல்பங்களை பாதியிலேயே விட்டுவிடுவதால், அவற்றில் வெற்றி காண்பதில் சிரமம் ஏற்படுகிறது.

ஒருவன் தனக்கான ஆணவம், சொகுசு, தூக்கம், பேராசை போன்றவற்றை விட்டொழித்தால் மட்டுமே வாழ்க்கையில் வானளாவிய உயரத்தை எட்டலாம் அற்பமான எண்ணங்களை தட்டி எறியவேண்டும்.

ஒரு செயலில் விழிப்புணர்வுடன் இருந்தால், அதற்கான முயற்சியில் கடைசிவரை உறுதியாக இருப்போம்.

சிலர் செயலுக்கான முயற்சிகளை தட்டிக்கழிப்பதால்தான் தோல்வி ஏற்படுகிறது.

அவமானங்கள் சிலரை சிதைக்கக் கூடியதாக மாறுவதால், அவற்றை பொருட்படுத்தாமல் முன்னேறி செல்லக்கூடிய வகையில் மனதில் தைரியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

வெல்வது என்பதுகூட ஒருவகையில் தோற்பதுதான். நாம் வெற்றியடைந்தோம் என்று சொல்கின்றபோது ஏதோ வென்றுவிட்டோம் என்பது போன்ற மாயை ஏற்படும். ஆனால், உண்மையில் எந்த வெற்றியும் நாம் பெறுவதில் இல்லை.

முழுமையான வெற்றி என்பது நம்முடைய வெற்றியால் மானுடத்துக்கு என்ன நன்மை கிடைத்தது, மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது, கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் ஏழைக்கு இந்த வெற்றியால் பலனிருக்குமா என்பதில்தான் அது வெற்றியா தோல்வியா என தீர்மானிக்கப்படும்.

Comments (0)
Add Comment